தீராத காதல் தொல்லையோ - 4.2
பாக்கியலட்சுமி விவாகரத்து பற்றி பேசவும் “ம்மா…” என்று மகா அவரை திகைப்போடு பார்த்தாள்.
“தொட்டதுக்கெல்லாம் விவாகரத்துன்னு போய் நிக்கிற காலம்டி இது! புருஷன் குடிகாரனா, சந்தேகப்படுறவனா, வேற பொண்ணு கூட தொடர்பு வைத்திருக்கிறவனா, கொடுமை படுத்துறாவனா இருந்தா அப்படி ஒரு வாழ்க்கையை சகிச்சிட்டு வாழுன்னு சொல்ற அளவுக்கு உன் அம்மா ஒன்னும் பிற்போக்குவாதியும் கிடையாது. எங்க கௌரவத்துக்காக உன் வாழ்க்கையை பலி கொடுக்கும் அளவுக்கு கல்நெஞ்சக்காரியும் கிடையாது..” என்றவரை விழியகலாகாது பார்த்திருந்தாள் மகாலட்சுமி.
“ஒருவேளை உன்னை கட்டிக்கிட்டவர் அப்பேர்பட்டவரா இருந்தா இப்படி ஒரு வாழ்க்கை தேவையில்லை தூக்கி போட்டுட்டு வாடின்னு உன்னை அங்கிருந்து கூட்டிட்டு வரக்கூடிய முதல் ஆள் நானா தான் இருப்பேன். ஆனா ஆறு ஏழு மாசத்துல சரியான புரிதலே இல்லாம இந்த உறவு சரிவராதுன்னு நீங்களாவே முடிவு பண்ணிக்கிட்டு இப்படி ஒரு முடிவுக்கு போறதை தான் நான் வேண்டான்னு சொல்றேன்..”
“பொதுவாகவே பெண்களை ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துல வேரோடு எடுத்து நட்டு வைக்கக்கூடிய மரத்துக்கு ஒப்பிட்டு சொல்லுவாங்க.. அது ரொம்பவே சரியும் கூட! எப்படி புது இடத்தில புது மண்ணுல புது சூழலில் வேர் பிடிக்க காலம் எடுக்குமோ அதே மாதிரி புருஷன் பொண்டாட்டி என்னும் உறவின் வேர் பிடிக்கவும் காலம் எடுக்கும்…”
“நீ எப்படி ரொம்பவே இதமான கதகதப்பான உனக்கு சாதகமான சூழல்ல வளர்ந்தியோ அதே போல தான் மாப்பிள்ளையும் அவருக்கான வசதிகளோடு வளர்ந்து இருப்பாரு. அவர் உலகத்துக்குள்ள உன்னை உடனே போருத்துறது அவ்ளோ சுலபமில்லை மகா..”
“எப்படி வெவ்வேறு சூழல்ல வளர்ந்த இரண்டு செடிகளை ஒரே தொட்டிக்குள்ள வச்சு வளர்க்க நினைக்கிறப்போ அந்த வேர் ஒன்னோடு ஒன்னு ஒத்து போய் ஒன்னா சேர்ந்து வளர நேரம் எடுக்குமோ அதே மாதிரி தான் உங்க இருவருக்குமான உறவும்…”
“வெவ்வேறு சூழல்ல வளர்ந்த இரண்டு பேரையும் திருமணம் என்கிற பந்தத்துக்குள்ள ஒண்ணா வைக்கிறப்போ இரண்டு பேரோடு குணமும் ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிபட்டு ஒத்துப்போக நேரம் எடுக்கும். அந்த நேரத்தைக் கூட உங்க கல்யாண பந்தத்துக்கு கொடுக்காம, இல்ல முடியாது ஒத்துவராது நான் அதிலிருந்து வெளியே வந்தே தீருவேன்னு சொல்றது உனக்கே சரின்னு தோணுதா?”
“என்னமா பேசறீங்க? அப்போ இத்தனை நாளும் எங்களோட உறவை காப்பாத்திக்க நான் எதையுமே முன்னெடுக்கல, யாரையும் அனுசரிக்கலன்னு சொல்றீங்களா?” என்றவளுக்கு தன் கணவன் உடன் இல்லாத வேதனை கோபமாக உருமாறி இருந்தது.
“அப்படி சொல்லல மகா..”
“ஆறு மாசத்துல வந்துட்டேன்னு சொல்றீங்களே ஆனா அதுல ஒரு நாள் ஒரு நிமிஷம் கூட அவர் என்னை தன்னோட சரிபாதியா அவர் வாழ்க்கையின் துணையா நினைக்கவே இல்லை. அவங்களில் ஒருத்தியா என்னை நினைக்கவும் இல்லை நடத்தவும் இல்லை. இதோ ரெண்டு குழந்தைக்கள் வரப்போகுது அப்படிஇருந்தும் என்னை யாருன்னு அவ்ளோ சுலபமா கேட்டுட்டார்..”
“இதே வார்த்தையை அவரோட அம்மா அப்பா அக்கான்னு யாரையாவது கேட்பாரா? ஆனா என்னை கேட்டார். என்னோட பணத்தை, எனக்கு கொடுத்த சொத்தை என்ன செய்யணும்னு அவர் முடிவு பண்ணுவார் ஆனா அதைப்பற்றி நான் எதுவுமே பேசக்கூடாது. எந்த கருத்துமே சொல்லக்கூடாதுன்னா அவர் கீ கொடுக்கிற படி ஆடறதுக்கு நான் என்ன பொம்மையா?”
“அப்படி இல்லை மகா. ஆனா சம்பந்திக்கு கை உடைஞ்சதுல தொடங்கி உங்க கல்யாணம் முடிஞ்ச பிறகு அமைந்த சூழல் எல்லாமே உங்களை நெருக்கடியில தள்ளிடுச்சு.. ரெண்டு பேருமே நேரம் காலம் இல்லாம ஓட வேண்டியதா போச்சு.. நீ சொன்னதை வச்சு பார்க்கிறப்போ மாப்பிள்ளைக்கு பண நெருக்கடியும் இருக்குன்னு புரியுது..”
“அது தீராம அவரால வேற எதையும் யோசிக்க முடியாது. அதனாலேயே உன்கிட்ட மனசு விட்டு பேச உன்னோட கருத்தை கேட்க அவரால முடியாம போயிருக்கலாம்.. ஏன் உன் அப்பாவுக்கும் எனக்கும் முதல் இரண்டு வருஷம் வராத பிரச்சனையா உங்களுக்கு வந்திருக்க போகுது?!”
“ஆனா அவரோட சூழல் புரிஞ்ச பிறகு அவரோடு சரிக்கு சமமா நிற்க நினைக்காம ஒரு அடி பின்னாடி எடுத்து வச்சு அவருக்கான நேரமும் இடமும் கொடுத்தேன். மத்தளத்துக்காவது இரண்டு பக்கம் அடி ஆனா ஒரு குடும்பத்துல மூத்த பிள்ளையாவோ இல்லை ஒற்றை ஆண் பிள்ளையாவோ இருக்கிறவங்களுக்கு அம்மா, அக்கா, தம்பி தங்கை, மனைவின்னு எல்லா பக்கமும் அடி..”
“தாலி கட்டின உடனே அவரை கட்டுப்பாட்டுக்குள்ள எடுக்க நினைக்கிறது முட்டாள்தனம் மகா…”
“நான் எப்போம்மா அப்படி நினைச்சேன்?”
“நினைக்கல ஆனாலும் உன்னோட ஆதகங்கள் அவர் உன்னை தன்னோட சரிபாதியா பார்க்கலை என்பது தானே?! அப்போ அதை தொடர்ந்து உன்னோட எதிர்பார்ப்பு என்ன? அவர் உன்னை கலந்தாலோசிக்காம எதையும் செய்ய கூடாது. உனக்கு தெரியாம எந்த முடிவும் எடுக்க கூடாது என்பது தானே?!”
“அது தப்பா ம்மா?”
“தப்புன்னு சொல்லலை மகா. ஆனா அதுக்கு கொஞ்ச நேரமெடுக்கும்னு சொல்றேன்..”
“ஆனா நான் மட்டும் கல்யாணமானதும்..” என்ற மகள் என்ன பேச வருகிறாள் என்பது புரிபட, “அதுதான் ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் இருக்கிற வித்யாசம்! கல்யாணமாகும் போது புருஷன் தான் நம்மோட உலகம்னு பொம்பளை மனசு அதுக்கு பக்குவப்பட்டுடும் ஆனா அப்பா, அம்மா, தம்பி தங்கைன்னு இருக்கிற நம்ம உலகத்துல இவளும் ஒருத்தின்னு தான் ஆம்பளை மனசு நினைக்கும்..”
“அப்போ தன்னை சார்ந்து இருக்கிற எல்லாருக்குமான நேரம், பொறுப்பு, கடமைன்னு ஆம்பளைங்களோட சுமை கூடும். உங்களை போலவே அவங்களுக்கும் அது புதுசு தான்! அதை ஏத்துகிட்டு எல்லாரையும் அரவணைச்சு கொண்டு போக அவங்களுக்கான நேரத்தை கொடுத்து துணை இருக்க வேண்டியது வாழ்க்கைத்துணையான நம்மோட கடமை..”
“ஒரு பொம்பளையோட புத்தி பதினெட்டு வயசுல கொண்டிருக்க கூடிய பக்குவம் ஆம்பளையோட புத்திக்கு வர அவங்களுக்கு இருபத்தி எட்டு, முப்பது வயசு ஆகும். அப்படி பார்க்கிறப்போ இப்போ உன் வயசுக்கு உனக்கு இருக்கிற பக்குவம், உங்களோட வாழ்க்கை குறித்த பார்வை மாப்பிள்ளை வர இன்னும் கொஞ்சம் நேரமெடுக்கும் மகா.. நான் சொல்றது புரியுதா?”
“புரியுது ம்மா.."
“ஆனா உன்னை, உன்னுடைய முக்கியத்துவத்தை புரிஞ்சுக்கிட்ட பிறகு உனக்கு அப்புறம் தான் ஒட்டு மொத்த உலகமுமே என்ற நிலையில மாப்பிள்ளை இருப்பார். இதுக்கு கொஞ்சம் நேரம் தேவை அந்த நிலையை அடையும் போது உங்க உறவு வேர் ரொம்பவே பலபட்டிருக்கும், அதுக்கு அப்புறம் உங்களோட பந்தத்தை யாராலுமே அசைக்க முடியாது அந்தளவு உறுதியோடு இருக்கும்..”
“சண்டை போடாத புருஷன் பொண்டாட்டி ஏது? அப்படி கல்யாணமான நாளில் இருந்து சின்ன கருத்து பேதம் கூட வந்ததில்லை, சண்டையே போட்டதில்லைன்னு சொன்னா அவங்க உப்பு சப்பில்லாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்காங்கன்னு தான் சொல்லணும்…”
“நிச்சயமா யாருமே இப்படி பட்ட உரசல்களை எல்லாம் கடக்காம அடுத்த கட்டத்துக்கு வந்திருக்க முடியாது. வேணும்னா இத்தனையும் கடந்து இப்போ நாங்க ஒருமித்த கருத்தோடு எந்த சண்டை சச்சரவும் இல்லாமல் வாழ்ந்துட்டு இருக்கோம்னு சொல்லலாம்… எப்படி உணவுல அறுசுவையும் நம்மோட உடம்புக்கு தேவையோ அப்படி புருஷன் பொண்டாட்டிக்குள்ள, இனிப்பு மட்டுமே இருந்தா தெகட்டிடும் மகா..”
“கொஞ்சம் காரம், கசப்புன்னு எல்லாமே இருந்தா தான் பேலன்ஸ் ஆகும்.. இது உங்களோட கசப்பான நேரமா இருக்கலாம் ஆனா குழந்தைகளோட வரவு நிச்சயமா இனிப்பா மாத்தும்னு நான் நம்புறேன். அதே நம்பிக்கையோடு மாப்பிள்ளைக்கு கூப்பிடு..”
“நான் கூப்பிட்டு தான் வருவாரா? அவரா வர மாட்டாரா? இதுலயும் உங்க மாப்பிள்ளைக்கு தான் வக்காலத்து வாங்குவீங்களா? உங்க பொண்ணு பக்கம் நிற்க மாட்டீங்களா ம்மா?” என்று செல்லமாக கோபித்தாள்.
மகளின் பேச்சில் எழுந்த புன்னகையோடு, “நான் எப்பவுமே என் மகளோட பக்கம் தான் மகா..” என்றார்.
“சும்மா எனக்காக சொல்லாதீங்க ம்மா..”
“நிஜமாவே தான்டி சொல்றேன். என் பொண்ணுக்கு மாப்பிள்ளை மேல எவ்ளோ அன்புன்னு எனக்கு தெரியும். கோபத்துல அந்த நிமிஷ உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து பின்னாடி என் பொண்ணு இதை நினைச்சு வருந்த கூடாது…” என்றவரை மகா ஆச்சர்யத்தோடு பார்க்க,
“என்ன சரியா சொன்னேனா?” என்று அவளை நெட்டி முறித்தவர்,
“என் பொண்ணு அவ ஆசைப்பட்ட வாழ்க்கையை அவளுக்கு பிடிச்சவரோடு இறுதி வரை அவ வாழனும் என்பது தான் என்னோட ஆசை.. கோபம் கண்ணை மறைக்கும்னு சொல்லுவாங்க அப்படி கோபத்துல மாப்பிள்ளையோட நல்ல பக்கத்தை நீ மறந்திருக்கலாம் ஆனா நான் அப்படி விட முடியாதே!”
“உன்னோட சந்தோஷத்துக்காக தான் பேசறேன், என் பெண்ணோட அருமை நிச்சயமா மாப்பிள்ளைக்கு ஒருநாள் புரிய வரும். இப்போ எங்களோடு நீ இருக்கிறது வேற ஆனா அப்படி அவர் உன்னோட அருமை உணர்ந்து வரும் போது சட்டபடியான பிரிவு உங்களுக்கான இடையில் தடையா இருந்திட கூடாது..”
“எப்படிம்மா நீங்க இந்தளவுக்கு யோசிக்கிறீங்க?”
“உன்னை பெத்தவடி. வேற யோசனை இருந்திடுமா என்ன?பிள்ளைகள் மேல எங்களுக்கு இல்லாத அக்கறை வேற யாருக்கு இருந்திட போகுது?! இப்போவாவது மாப்பிள்ளைக்கு பேசறியா?” என்றிட மகிழ்ச்சியோடு கணவனுக்கு அழைத்தாள்.
ஆனால் அரை மணி நேரமாக தொடர்ந்து மகாலட்சுமி அழைப்பு விடுத்தும் மறுபுறம் அது ஏற்கப்பட வில்லை.
“டாக்டர் வந்தாச்சு மகா லேபர் வார்ட் போகலாமா?” என்று அவளை அழைத்து சென்று Induce செய்வதற்கான இன்ஜெக்ஷன் செலுத்தி சிகிச்சையை தொடங்கினர்.
Comments
Post a Comment