தீராத காதல் தொல்லையோ - 4.2
இரவு இருளின் நடுவில் மங்கலான மின் விளக்குகள் மட்டும் துடித்துக் கொண்டிருந்தன.
அடுத்த நாள் நடைபெறப் போகும் விசேஷத்திற்காக ஒரு வீட்டின் முன் பெரிய ஷாமியானா கட்டப்பட்டிருந்தது.
வெள்ளை, மஞ்சள் துணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த துணிகள் இரவு காற்றில் மெதுவாக அசைய அதன் கீழ் நாற்காலிகள் ஒழுங்காக அடுக்கப்பட்டிருந்தன.
வீட்டின் மாடியில் ஓரிருவர் இருக்க வாசலில் சுற்றி கட்டபட்டிருந்த சைட்வால் உள்ளே ஒரு மூலையில் மேடை அலங்காரத்திற்கான பொருட்கள் மற்றொரு மூலையில் டேபில் மற்றும் பாத்திரங்கள் இருந்தது.
அந்த அமைதிக்குள் நடந்து கொண்டிருந்த ரிஷி மீது சரக்கு லாரி மோதி எழுந்த அந்த மிரள வைக்கும் சத்தம் இரவை கிழித்தது.
அடுத்த கணம் ரிஷியின் உடல் காற்றில் தூக்கி எறியப்பட்டது.
‘என்ன நடந்தது தனக்கு?..’ என்று அவன் உணரும் முன்னமே சுழன்றவனின் உலகம் அவன் கண்களில் புரண்டது.
ஆனால் தரையில் விழ வேண்டியவன் உடல் நேராக அந்த ஷாமியானாவின் மேல் பாய்ந்தது. அவன் விழுந்த வேகத்தில் துணிகள் திடீரென கீழே தாழ இரும்புக் கம்பிகள் சற்றே வளைந்தன.
சட்டென அவன் கீழே விழாமல் கட்டப்பட்ட கயிறுகள் அவனை தாங்கிக் கொண்டன. அதனால் அவன் உடல் நேராக தரையில் மோதி சிதறாமல் அந்த ஷாமியானா ஒரு மெத்தையைப் போல அவனை ஏற்றுக் கொண்டது.
ஒரு நொடியில் அது முழுவதும் கீழே சுருண்டு அவனை மெதுவாக தள்ளி, கீழே இருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளின் மீது வீழ்த்தியது.
அதில் சில நாற்காலிகள் உடைந்து சில புரண்டன. ஆனால் உயிரை பறிக்கும் அதிர்ச்சி தணிந்தது.
லாரி இடித்த வேகத்தில் நெற்றியிலும் நல்ல காயம் முழங்கை ஃப்ராக்ச்சராகி இருந்தது.. குழந்தைகள் பிறந்த நேரம் அவன் உயிருக்கு எந்த ஆபத்து இல்லையென்றாலும் கை முறிந்தது. எலும்பு சிதறிய உணர்வு. கால் அசாதாரணமாக வளைந்து கிடந்தது.
முழு உடலும் கீறல்களால் நிரம்பியது.
ஷாமியானா துணி அவன் மீது பாதியாக விழுந்து, அவனை மூடியது. வெள்ளை துணியில் இரத்தம் மெதுவாக பரவியது.
மூச்சை இழுத்த ரிஷிக்கு துணியின் வழியே மங்கலான விளக்கு ஒளி கண்களில் பட்டது.
அந்த ஒளி ‘உயிர் இன்னும் அவனுடன் இருப்பதை’ நினைவூட்டியது.
ரிஷி வீட்டை விட்டு கிளம்பிய பின்னர் எப்போது சிவபாலன் உணர்வு பெற்றார் என்று தெரியாது ஆனால் மகன் வீட்டில் இல்லை என்பதை உணர்ந்த அடுத்த நொடியே அவனுக்கு அழைக்க மறுபுறம் அழைப்பு ஏற்கப்படவில்லை.
இந்திராவின் முகத்தை கூட பார்க்க பிடிக்காதவராக உடனே வண்டி எடுத்துக்கொண்டு மகன் பின்னே சென்றார்.
‘எங்கே சென்றிருப்பான்?..’ என்று அனுமானமே இல்லாமல் தெருவில் வண்டியை செலுத்தியவர் ஒரு கட்டத்தில் ‘மகாவின் வீட்டிற்கு சென்று இருப்பானோ?’ என்று தோன்ற வண்டியை திருப்பி ஹைவேஸிற்கு சென்றவர் கண்டது என்னவோ லாரியில் அடித்து தூக்கி எறியப்பட்ட மகனை தான்.
இக்காட்சியை கண்ட சிவபாலனுக்கு இருதய துடிப்பே சில கணங்களுக்கு நின்று போனது.
மகனின் நிலை கண்டு சிவபாலன் ஓடி வர அதற்குள் மேலே இருந்தவர்கள் ஓடி வந்து ஷாமியானா துணியை கிழித்து அவனை தூக்கி இருந்தனர்.
மற்றொருவர் அவன் கையை தொட முயன்றார் உடனே ரிஷி வலியால் அலறினான்.
“கை முறிஞ்சுருக்கு போல மெதுவா தூக்குங்கப்பா”
“உயிர் இருக்கா பாருங்க ஆம்புலன்சுக்கு கூப்பிடுங்க..” என்று ஆளாளுக்கு சொல்ல சிவபாலன் மகனை நெருங்கிய போது ரிஷி முழு மயக்கத்திற்க்கு சென்றிருந்தான்.
அங்கிருந்து அரசு மருத்துவமனை தொலைவு என்பதோடு ஆம்புலன்ஸ் வரும் வரையில் தாமதிக்க வேண்டாம். ‘ரிஷி தன் மகன் தான்’ என்றவர் அவனை உடனே வண்டியில் ஏற்றுமாறு சொன்னார்.
“ஸார் உங்க அவசரம் புரியுது. ஆனா டூவீலர்ல எப்படி கூட்டிட்டு போக முடியும்?.” என்று ஒருவர் சொல்லிக் கொண்டிருக்க மற்றொருவர் கார் எடுத்து வர ரிஷியை ஏற்றி அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
வழி நெடுக இந்திரா சிவபாலனுக்கு அழைத்து கொண்டே இருந்தவர் அவர் காரில் சென்ற போதும் அழைக்க அவர் அதை துண்டித்து கொண்டே இருந்தார்.
“ஸார் எடுத்து பேசுங்க. இவருக்கு கல்யாணமாகி இருந்தா வைஃப்புக்கும் சொல்லுங்க..” என்றனர்.
ஆனால் மருமகள் தற்போது இருக்கும் நிலையில் விபத்து செய்தியை சொல்லி அவளை கலவரப்படுத்த விரும்பாதவர் இந்திராவிற்கு விபத்து செய்தியை சொல்லி,
“இப்போ சந்தோஷமாடி? இதுக்கு தான் காத்திருந்தீங்களா?” என்று கத்திவிட்டு வைத்துவிட்டார்.
மருத்துவமனையின் அவசர பிரிவு:
ஸ்ட்ரெச்சரில் ரிஷி கொண்டு வரப்பட அவன் உடல் முழுவதும் காயங்களால் மூடப்பட்டிருந்தது. அதிர்ச்சியில் அவன் மூச்சு தள்ளாடியது.
டாக்டர்கள் அவனை உடனே அவசர அறைக்குள் எடுத்துச் சென்றனர்.
“ஐவி லயன் ஃபிக்ஸ் பண்ணுங்க… ஃப்லூயிட்ஸ் ஸ்டார்ட் பண்ணுங்க!” என்று மருத்துவ குழுவின் குரல்கள் வேகமாக ஒலித்தன.
ரிஷியயை பரிசோதித்த மருத்துவர், “Compound fracture… உடனே stabilization தேவை. Leg fracture severe… X-ray ரெடி பண்ணுங்க.”
சிவபாலன் அவசர சிகிச்சை பிரிவின் வெளியில் பதட்டத்தோடு நடந்து கொண்டிருந்தார். மனம் முழுக்க பயத்தோடு மகன் குணமடைய வேண்டும் என்று கண்களை மூடி வேண்டி கொண்டிருந்தார்.
கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது.
அதேநேரம் ரிஷியின் கைப்பேசி ஒளிர்ந்தது. எடுத்து பார்க்க மகாவின் தந்தை தான் அழைத்திருந்தார்.
நிச்சயம் இப்போது அவரிடம் பேசினால் தன்னை மீறி உடைந்து போய் உண்மையை சொல்லி மருமகளை அச்சுறுத்தி விடுவார் என்பதால் அழைப்பை ஏற்கவில்லை.
குறைந்த பட்சம் மகனுக்கு பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை ஒன்றிரண்டு வாரங்களில் எழுந்து நடந்து விடுவான் என்று உறுதியாக தெரிந்தாலும் பக்குவமாக விஷயத்தை சொல்லலாம்.
அதுவும் மருமகளின் நிலை அவரை எவ்வித விஷபரிட்ச்சைக்கும் உட்படுத்த தயாராக இல்லை.
அந்தளவு மனதவில் வலுவிழந்து போயிருந்தார் சிவபாலன்.
மகன் எந்தளவு முக்கியமோ அதே அளவு அவருக்கு மருமகளின் உடல் நிலையும் மன நிலையும் அவருக்கு முக்கியம். ஏற்கனவே மருமகள் அனுபவிக்கும் வேதனையை அறிந்ததாலேயே அவள் வீட்டை விட்டு செல்வதற்கு அனுமதித்தார்.
இப்போதும் மருமகளின் நலனுக்காகவே விஷயத்தை அவர்களுக்கு தெரியபடுத்தவில்லை.
நிமிடங்கள் ஒவ்வொன்றும் நரகமாய் நகர்ந்தது சிவபாலனுக்கு.
‘மகனுக்கு எதுவும் ஆக கூடாது, உள்காயம் எதுவும் பலமானதாக இருந்துவிடக்கூடாது. அதைவிட மகனின் விபத்து கனவாக இருந்து விடக்கூடாதா?’ என்று ஏதேதோ எண்ணங்கள் எழுந்து அவரை அழுத்தியது.
மீண்டும் அவன் கைப்பேசி ஒலித்தது. ராம் தான் ஏதோ சந்தேகம் கேட்கவென்று அவனுக்கு அழைத்திருந்தான்.
ராமின் அழைப்பு என்றதுமே உடனே ஏற்றவர், “ராம்..” என்று கதறிவிட்டார்.
“அப்பா என்ன ஆச்சு? ரிஷி எங்கே? எதுக்கு அழறீங்க?”
“ராம் என் புள்ளை பேச்சு மூச்சு இல்லாம படுத்துட்டு இருக்கான்டா..” என்று குழந்தையாய் தேம்பி அழுதார்.
“என்னப்பா ஆச்சு அவனுக்கு?” என்றவனுக்குமே பதற்றம் தொற்றிக்கொண்டது.
ரிஷி வீட்டில் நடக்கும் பிரச்சனைகள் அவனுக்கு ஓரளவு தெரியும். அவன் பட்டிருக்கும் கடனும் அதனால் அவன் கொண்டிருக்கும் அழுத்தமும் அவனுக்கு அத்துபடி அதனால் அழுத்தம் தாளாமல் ஏதாவது தவறான முடிவிற்கு வந்துவிட்டானா என்ற அச்சம் எழுந்தது.
“ஆக்சிடென்ட் ஆகிடுச்சுப்பா.. “ என்றவரால் அதற்கு மேல் பேச முடியவில்லை.
அதற்குமேல் ‘ஏன்? எப்படி? எதனால்?’ என்று எந்த கேள்வியும் கேட்காமல் “எந்த ஹாஸ்பிட்டல்னு சொல்லுங்கப்பா?” என்று தெரிந்து கொண்டவன் உடனே கிளம்பிவிட்டான்.
அடுத்த கால் மணி நேரத்தில் ஓட்டமும் அழுகையுமாக மருத்துவமனைக்கு வந்தனர் இந்திரா, வனிதா மற்றும் சிந்து.
ஆம் ரிஷிக்கு உண்மை தெரிந்து சிந்துவிடம் விசாரிக்க ஆரம்பித்த போதே மகளுக்கு விஷயத்தை சொல்லிவிட்டார் இந்திரா.
சிந்து ஒரு பையனை காதலிக்கிறாள் என்ற செய்தியை கேட்டு ஆடிப்போன வனிதா உடனே கிளம்பிவிட்டாள்.
சிவபாலன் ரிஷிக்கு விபத்து நடந்தது பற்றி சொன்ன போது தான் வீட்டிற்கு வந்தவள் விஷயத்தை கேள்விப்பட்டு மற்றவர்களையும் அழைத்து கொண்டு இங்கே வந்து விட்டார்கள்.
“என்னங்க, என் பையன்… அவனுக்கு எதுவும் இல்லையே…”
“அப்பா தம்பிக்கு என்ன ஆச்சு?” என்று அவள் கேட்டதும் தான் தாமதம் மகளை ஓங்கி அறைந்திருந்தார் சிவபாலன்.
“எதுக்கு இப்போ அவளை அடிக்கிறீங்க?”
“என் மகன் இந்த நிலைமையில தள்ளின இவளை அடிக்காம என்ன பண்ண? ஏய் உன் கூட பிறந்தவனை ஏமாத்த எப்படி உனக்கு மனசு வந்தது?”
“ப்பா இப்போ இதெல்லாம் பேசற நேரமா? தம்பிக்கு என்னாச்சு சொல்லுங்க?” என்ற அதே நேரத்தில் அவசர சிகிச்சை பிரிவின் கதவு திறந்தது.
“பேஷன்ட் ரிலேடிவ்ஸ் யாரு?” என்றார் மருத்துவர்.
சிவபாலன் உடனே முன் வந்து, “நான் அவன் அப்பா…” என்றார்.
இந்திரா கண்ணீருடன், “நான் அம்மா… டாக்டர்… என் பையன் எப்படி இருக்கான்?”
“பயப்படாதீங்க, அவர் உயிருக்கு உடனடி ஆபத்து இல்லை…” என்ற ஒற்றை வாக்கியம் அவர்களின் உள்ளத்தை சற்றே இலகுவாக்கியது.
“ஆனா… injuries serious தான். கை, கால் இரண்டிலும் fracture இருக்கு. குறிப்பாக கால் ஃப்ராக்ச்சர் கொஞ்சம் severe. நாங்க already stabilization பண்ணிட்டோம். Surgery தேவையாக இருக்கும்.”
“லாரி இடிச்சதுல தலையில் பெரிய காயம் இல்லை… அது நல்ல விஷயம். Internal bleeding எதுவும் பெரிய அளவில் இல்லைன்னு இப்போதைக்கு தோணுது. ஆனா இன்னும் observationல வைக்கணும்.”
“டாக்டர்…” சிவபாலன் குரல் தளர்ந்தது,
“அவன் சரியா ஆகிடுவானா…?”
“நேரம் ஆகும்… ஆனா முழுதா குணமாக நேரம் எடுக்கும். அவர் ஸ்ட்ராங்கா இருக்கணும்… நீங்களும் ஸ்ட்ராங்கா இருக்கணும்.”
இந்திரா அழுதபடி, “ஒரு தடவை அவனை பார்க்கலாமா…?”
“சர்ஜரி முடிஞ்ச பிறகு பார்க்கலாம்..” என்றவர் மீண்டும் அவசர சிகிச்சையின் கதவை திறந்து சென்றார்.
அவர் சென்ற சில நிமிடங்களிலேயே வெளியில் வந்த செவிலியர், “ஸார் இதுல இருக்கிற மருந்தெல்லாம் வாங்கிட்டு முன்பணம் கட்டிடுங்க.. சர்ஜரி ஆரம்பிச்சுடுவாங்க..” என்றார்
“எவ்ளோ சிஸ்டர்..”
“மருந்துகளுக்கே எப்படியும் பதிமூன்றாயிரம் ஆகும் ப்ளஸ் முன்பணம் ஐம்பதாயிரம்..” என்றதில் செய்வதறியாது பார்த்தார்.
‘ஐம்பதாயிரம் இப்போது அவரிடம் ஏது? ஆனால் பணம் கட்டி தான் ஆக வேண்டும்..’
“சிஸ்டர் காலையில கட்டலாமா?” என்றார்.
“ஸார் உயிருக்கு சேதமில்லைனாலும் இன்டெர்னல் டேமேஜஸ் இருக்கு. போதாததுக்கு வலது கை எலும்பு முறிஞ்சிருக்கு. உடனே ஆப்ரேட் பண்ணியாகணும்…”
“விழுந்த வேகத்துல நாக்கை பலமா கடிச்சிருக்கார் அதற்கு தையல் போடணும். உடனே பேச முடியாது..” என்று அவனுக்கு இருக்கும் பிரச்சனைகளை சொல்லி,
“ரொம்பவே கிரிட்டிகலான சர்ஜரி என்பதால இன்னொரு டாக்டரையும் வெளியில இருந்து வர சொல்லி இருக்கோம். இது முன் பணம் தான்.. இன்னும் நீங்க கட்ட வேண்டியது நிறைய இருக்கு..” என்றிட செயலற்று போனார் சிவபாலன்.
“என்ன அமைதியா உட்கார்ந்துட்டீங்க? போய் பணத்தை கட்டுங்க சீக்கிரம் ஆரம்பிக்கட்டும்..” என்றாள் இந்திரா.
“ஏன்டி இங்கே என்ன கொட்டியா கிடக்கு? வாரி கொண்டு வந்து இறைக்க? என்கிட்ட இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல பணம் இல்லை. மாச கடைசி ரிஷி கிட்டயும் இருக்காது எங்கிருந்து கட்ட சொல்ற?” என்றவருக்கு மனம் ஒரு நிலையில் இல்லை.
“இந்தா இவ தானே வீட்டை விற்க வச்சு பத்து சவரனை கொள்ளை அடிச்சவ அந்த நகைகளை வித்து பணத்தை கட்ட சொல்லு..” என்றார் பல்லைக்கடித்து கொண்டு.
“நகையா? இப்போ என்கிட்டே ஏது?” என்று வனிதா சொல்ல அதிர்ந்து போனார் சிவபாலன்.
“ஏன் எங்க போச்சு? இப்போ என் பிள்ளை உசுரு முக்கியம்...” என்றார் கண்ணீரோடு.
“நான் எங்கேப்பா தம்பி முக்கியம் இல்லைன்னு சொன்னேன்? ஆனா நகை எதுவும் என்கிட்டே இல்லை..”
“உன்கிட்ட இல்லாம எங்க போச்சு?” என்றிட ஒருநொடி திணறியவள்,
“அது.. அதெல்லாம் என் புருஷன் கிட்ட கொடுத்துட்டேன்..”
“என்னது? குடிகாரன் கிட்ட நகையை கொடுத்தியா? உன் பொண்ணுங்க எதிர்காலம்ன்னு என் மகனை ஏமாத்தி நகையை வாங்கினது குடிகாரன் கிட்ட கொடுத்து அழிக்கவா? இதோ பார் நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது உன் புருஷனுக்கு சொல்லி ஏதாவது ஏற்பாடு பண்ணி உடனே பணத்தை அனுப்ப சொல்லு..” என்றார்.
“அப்பா அவர் ஊருல இல்லை..”
“எங்க இருந்தா என்ன ஃபோன் பண்ணு..” என்று அவர் கர்ஜிக்க வேறு வழியில்லாமல் வெளியில் சென்று கணவனுக்கு அழைத்தாள்.
விஷயத்தை சொல்லி முடிக்க, “உன் தம்பி இப்போ எப்படி இருக்கான்?”
“நான் பயந்த மாதிரி உயிருக்கு எந்த ஆபத்துமில்லை. லேசான காயம் கை காலில் முறிவு. எங்கப்பா செலவுக்கு நகையை கேட்கிறார்..”
“நான் நாளைக்கு நகையை வச்சு ஜிபே பண்றேன்..”
“வாயை மூடுங்க. அது நம்மோட சொத்து, அதை எதுக்கு தூக்கி கொடுக்கறீங்க?” என்றாள் ஆவேசத்தோடு.
*************
எப்படியும் ரிஷி வந்திருப்பான் என்ற நம்பிக்கையோடு பிரசவத்தை எதிர்கொண்டு இரு குழந்தைகளையும் சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்து இருந்தாள் மகாலட்சுமி.
இரண்டு மணி நேரத்திற்கு பிறகு அறைக்குத் திரும்பி குழந்தைகளை வாங்கியவளின் விழிகள் முதலில் தேடியது கணவனை தான்.
“ம்மா அவர் எங்க?”
“இங்க தானே ம்மா இருந்தார். நீ வர இன்னும் லேட்டாகும்னு சொன்னதுல ஒருவேளை அவங்க அப்பா அம்மாவை அழைச்சுட்டு வர போயிருப்பார்..” என்று சமாளித்தார்.
மேலும் இரண்டு மணி நேரம் கடந்த போதும் ரிஷி வராமல் இருக்க ஒருவர் விடாமல் அனைவரிடமும் கேட்க எல்லாருமே ‘மருத்துவரை பார்க்க சென்றான் மாத்திரை வாங்க சென்று இருக்கிறான், அலுவலகத்தில் இருந்து அவசர அழைப்பு’ என்று விதவிதமாக மழுப்பிக் கொண்டு தான் இருந்தனர்.
முதலில் அதை நம்பியவள் கொண்டிருந்த அசதியிலும் மயக்கத்திலும் தன்னை மீறி தூங்கி விட்டாள்.
ஆனால் மீண்டும் விழித்தவளுக்கு அப்போதும் கணவன் அருகில் இல்லாததில் அண்ணனை அழைத்து உண்மையை சொல்லுமாறு கேட்டாள்.
அவன் இனியும் தங்கையை ஏமாற்ற மனம் இல்லாமல் உண்மையை உடைத்து சொல்லி விட்டான்.
“உனக்கு தெரியாது மகா அம்மா சொன்ன வார்த்தைக்காக எத்தனை கால் பண்ணி இருப்பேன் தெரியுமா? ஒரு ஃபோன் காலை கூட அட்டென்ட் பண்ணவே இல்ல. உனக்காக, குழந்தைகளுக்காக, நீ கண் முழிச்சு பாக்குறப்போ உனக்கு ஏமாற்றம் இருக்கக் கூடாதுன்னு அவனை கையோடு கூட்டிட்டு வந்துடலாம்ன்னு நடுராத்திரி அவங்க வீட்டுக்கும் போனேன் ஆனா யாருமே இல்ல. வீடு பூட்டி இருந்தது..”
“இப்படியும் ஒருத்தன் இருப்பானா? என்று எனக்கு மனசு வெறுத்துப் போச்சு மகா. இவங்க அவன் குழந்தைங்க தானே?! குழந்தைகளை விட பெரிய சொத்து வேற என்ன இருந்திட முடியும்? அதைவிட உன்னோட அருமை அவனுக்கு சுத்தமா தெரியல. இந்த மாதிரி நேரத்துல கூட ஒருத்தன் பொண்டாட்டியை தேடி வரலை அவளோட உணர்வுக்கு மதிப்பு கொடுக்கலைன்னா இதுக்கு மேலயும் அவன் உனக்கு தேவையான நீ முடிவு பண்ணிக்கோ மகா…”
“மத்தவங்களை மாதிரி நான் எந்த சப்பை கட்டும் கட்ட விரும்பல. இதுதான் நிஜம்! என்னைக்கு இருந்தாலும் நீ தெரிஞ்சுக்க வேண்டிய நிஜம். உனக்காக நாங்க இருக்கோம் அவனுக்காக ஏங்கி என் தங்கச்சி பாதிக்கப்படுவதை நான் விரும்பல..”
“வீடு பூட்டி இருந்ததுன்னு சொன்னிங்களே எங்க போயிருக்காங்கன்னு தெரிஞ்சதா அண்ணா?”
“கழுதை கெட்டா குட்டிச் சுவரு!! வேற எங்க போயிருப்பான்? குடும்பத்தோட எல்லாம் பெங்களூருக்கு வேற ஏதாவது முறை செய்ய கிளம்பி இருப்பாங்க அதை பற்றி நமக்கு என்ன?” என்றான் சிவந்த விழிகளோடு.
“கதிர் என்னடா பேசுற அவளை இந்த மாதிரி நேரத்துல உணர்ச்சி வசப்பட வைக்கக் கூடாது..”
“யாரு நானா அந்த வேலையை செய்யறது? உன் அருமை மருமகன் ம்மா. என் தங்கச்சி பாதிக்கப்படக்கூடாதுன்னு தான் அவ கிட்ட பேசிட்டு இருக்கேன்.. இன்னொரு முறை கண்டதையும் பேசி அவ மனசை குழப்பாதீங்க..”
“அத்தை தம்பி சொல்றது ஒரு விதத்துல சரிதான் மகா நம்ம வீட்டுக்கு வந்ததிலிருந்து இன்னிக்கு வரையிலும் அண்ணன் ஒருமுறை கூட வந்து பார்க்கலை. அட்லீஸ்ட் ஒரு ஃபோன் பண்ணியாவது பேசி இருக்கலாம் அதையும் செய்யல குழந்தைகளுக்காக கூட இறங்கி வராதவர் இனியும் வருவார் என்று தோணல மகாவுக்கு இப்போ நிம்மதி முக்கியம்..”
“குழந்தைகளுக்கு மகா முக்கியம். இந்த விஷயத்தை இப்படியே விட்டு விடுவது அவங்களுக்கு நல்லதுன்னு தோணுது. அண்ணனா என்னைக்கு வரணும்னு நினைக்கிறாரோ அப்போ வரட்டும் அன்னைக்கு மகாவோட முடிவு என்னன்னு சொல்லட்டும் அதுவரைக்கும் அவளை யாரும் தொந்தரவு பண்ண வேண்டாமே..” என்றாள் சுமதியும்.
தினகரனும் “நம்மளை விட வேற யாரும் அவளை சிறப்பாக பார்த்து விட முடியாது அதனால நீ கொஞ்ச நாள் என் பொண்ண நிம்மதியா இருக்க விடு..” என்று கண்டிப்பாக மனைவியிடம் சொல்லிவிட்டார்.
intha vanthava yentha catagirila sekka ithu manusha genmam thana
ReplyDelete