வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

வாழ்க்கைத்துணை - 28.2


“லட்சுமிக்கு குழந்தைகள் பிறந்த போது அவர்களை பார்க்கிறதுக்காக வந்தப்போ தான் ரிஷிக்கு ஆக்சிடென்ட் ஆனது…”

“அன்னைக்கு எங்க வீட்ல எவ்வளவோ பிரச்சனை.. நாங்க நினைச்சு கூட பார்க்காத அளவு என்னென்னமோ நடந்து முடிஞ்சிடுச்சு. மனசு வெறுத்துப்போன ரிஷி லட்சுமி மட்டும் தனக்கு போதும்னு தான் வீட்டை விட்டு கிளம்பி போனவனை விதி படுக்க வச்சுடுச்சு..”

“அன்னைக்கு சம்மந்தி கூப்பிட்டப்போ நிச்சயமா நான் அழுது உடைந்து விஷயத்தை சொல்லி இருப்பேன்..” 

“மகா டெலிவரி ரூம்ல இருந்தாப்போ ரிஷி அவளுக்கு அத்தனை முறை ஃபோன் பண்ணி இருந்ததை பார்த்துட்டு தான் நான் இங்க வீட்டுக்கே தேடி வந்தேன். அப்போ வீடு பூட்டி இருந்ததால நீங்க உங்க பொண்ணு வீட்டுக்கு போய் இருப்பீங்கன்னு நினைச்சேன் ஆனா இப்படி ஆகிருக்கும் என்று நான் எதிர்பார்க்கல..” 

“வலி இப்போ எப்படி இருக்கு ரிஷி?”

“பொதுவா இரண்டு மூணு வாரத்துல பேச்சு சரளமா வந்துடுமாம். ஆனா ரிஷிக்கு நரம்புல ஏதோ பிரச்சனை இருக்கிறதால குணமாக தாமதமாகுமாம்.. இன்னும் கொஞ்ச நாளில் பேச்சு நல்லபடியா திரும்பும்னு சொல்லி இருக்காங்க..”

“ரொம்ப சிரத்தை எடுக்கக் கூடாது, அதனால டாக்டர் சொல்றபடி தான் எல்லாமே பண்ணிட்டு இருக்கோம்.. ஆக்ஸிடென்ட் நடந்து ஒரு மாசம் ஆகிட்டதால மருமகளுக்கு சொல்லிடலாம்னு நானும் ஒரு வாரமா சொல்லிட்டு இருக்கேன் தம்பி ஆனா ரிஷி ஒத்துக்கவே இல்லை..” என்று அவன் தரப்பையும் சொன்னார். 

தன் தவறை உணர்ந்து, மகாவிற்காக பார்க்கும் ரிஷியை அதற்கு மேலும் அவனால் எந்த கேள்வியும் கேட்க முடியவில்லை.

“நான் நிறைய தப்பு பண்ணியிருக்கேன். உங்க தங்கச்சியோட கண்ணீருக்கு பலமுறை காரணமாகி இருக்கேன், உங்களால் முடிஞ்சா என்னை மன்னிச்சுடுங்க கதிர்” என்று ரிஷி எழுதி காண்பிக்க, அவன் கையை பிடித்து, “எல்லாம் சீக்கிரமே சரியாகும் ரிஷி.. டோன்ட் வொரி..” என்றான். 

“நான் நல்லபடியா குணமான பிறகு தான் மகாவை சந்திக்க விரும்பறேன். என்னால அவளுக்கு இன்னொரு கஷ்டம் வேண்டாம் கதிர். என் மேல சத்தியம் மகாவுக்கு எதையும் சொல்ல வேண்டாம்..” என்று மீண்டும் அழுத்தி சொல்ல அவன் சிவபாலனை பார்த்தான்.

“நான் தான் சொன்னேனே தம்பி… லட்சுமிக்கு அவனால எந்த கஷ்டமும் இருக்க கூடாதாம். இவ்ளோ நாளா இப்படி தான் என்னையும் தடுத்துட்டு இருக்கான்..” என்றவரிடமிருந்து விடை பெற்று கிளம்பியவன் பெற்றோரிடம் விஷயத்தை சொல்லி அழைத்து வந்து விட்டான். 

“மகாவுக்கு தானே தெரிய கூடாது அதுதான் அப்பாம்மாவை கூட்டிட்டு வந்திருக்கேன்..” என்றான் ரிஷியின் பார்வை புரிந்து. ரிஷியை பார்த்தவர்களிடம் சில நிமிடங்களுக்கு அசைவில்லை. 

கை காலில் கட்டு போடப்பட்டு வாய் ஓரத்தில் தையல் போட்டதற்கான அடையாளம் தாடையில் தோல் பெயர்ந்து நிறம் மாறி சரியான உணவில்லாமல் இளைத்து கருத்து என்று ஆளே வெகுவாக உருமாறி போயிருந்தான். 

“ஏன் மாப்பிள்ளை ஒரு வார்த்தை சொல்ல விடாம பண்ணிட்டீங்க” என்ற பாக்கியலட்சுமி “கதிர் வரலைன்னா எங்களுக்கு கடைசி வரைக்கும் சொல்லி இருக்க மாட்டீங்க தானே ண்ணா. அந்த அளவுக்கு நாங்க வேண்டாதவங்களா போயிட்டோமா?”

“மகாவுக்கு தெரிய வேண்டாம்னு சொல்லி எங்களுக்காவது தெரியபடுத்தி இருக்கலாமே சம்மந்தி?” என்றார் தினகரன். 

“அந்நேரத்துக்கு எனக்கு என் மருமகள், பேரன், பேத்தி உசுரு முக்கியமா இருந்தது சம்மந்தி.. இவன் உயிர் பிழைச்சதே தெய்வ சங்கல்பம்.. மூணு உசுரா இருக்கிற லட்சுமிக்கு விஷயம் தெரிய வந்து ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தா என்னால தாங்கிக்க முடியாது, என்னையே என்னால மன்னிக்கவும் முடியாது..” என்றார் கண்ணீரோடு. 

தங்கள் மகளுக்காக சிவபாலன் பார்த்தது சரி என்றாலும் மருமகனை பற்றி அவர்கள் வரையிலாவது தெரிவித்திருக்கலாமே என்ற ஆதங்கம் குறையவே இல்லை அவர்களுக்கு. 

அதிலும் பெண் துணை இல்லாமல் வயதானவர் எப்படி மருமகனையும் பார்த்துக்கொண்டு அனைத்தையும் சமாளிக்க முடியும்? அதற்காகவாவது அவர்களுக்கு சொல்லி இருக்கலாமே…

அதை தினகரனும் கேட்டுவிட, “மருமகளை இந்த நிலையில வீட்டை விட்டு அனுப்பிட்டு பிறகு சுயநலமா எதையும் உங்க கிட்ட இருந்து எதிர்பார்க்க என் மனசாட்சி ஒதுக்கலை சம்மந்தி..”

“பணத்துக்கு என்ன மாமா பண்ணினீங்க?” என்றான் கதிர்.

“ராம் மூலமா ஏற்கனவே வீட்டை அடமானம் போட்ட இடத்துல திரும்பவும் பணம் வாங்கி தான் ரிஷியை காப்பாத்தினேன்..”

“அண்ணா அவர் எங்களோட மாப்பிள்ளை, என் பேரன் பேத்திக்கு அப்பா!! உங்க மருமகளுக்காக நீங்க பார்க்கிற மாதிரி எங்க மருமகனுக்காக நாங்க பார்க்க மாட்டோமா? அவருக்கு இல்லாதது என்ன இருக்கு? எதுக்கு அண்ணா உங்களுக்கு இவ்ளோ வீம்பு?” என்ற பாக்கியாவின் பேச்சில் நெக்குருகி போனார் சிவபாலன். 

“உங்க சம்பந்தம் கிடைக்க நாங்க ரொம்ப கொடுத்து வச்சுருக்கணும் சம்மந்தி. தெரிஞ்சோ தெரியாமலோ என் மருமகளுக்கு கஷ்டம் வர நானும் காரணம் என்னை மன்னிச்சுடுங்க” என்று கைகூப்பினார் மனிதர். 

“ப்ச் ண்ணா, குடும்பம்னா ஆயிரம் இருக்கும்.. சரி அதை விடுங்க, மாப்பிள்ளையை நீங்க மட்டும் தனியா எப்படி ண்ணா பார்த்துப்பீங்க? என்ன பிரச்சனையா இருந்தாலும் சம்மந்தியம்மாவை..” என்றவரை இடையிட்டு, 

“இல்லை ம்மா, என் பையனை ஏமாத்தி அவன் ரத்தத்தை உறிஞ்சு குடிச்சதோடு அவன் படுத்த படுக்கையா இருந்தப்பவும் பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிற அக்கா, அவளை விடாம தாங்கி பிடிக்கிற அம்மா.. சொல்லவே எனக்கு அசிங்கமா இருக்கு.. இப்பேர்பட்டவங்க என் பிள்ளை பக்கத்துல இல்லாம இருக்கிறது தான் நல்லது..”  

“என்னைக்கு அவளுக்கு என் பிள்ளை முக்கியம் இல்லாம போனானோ அதுக்கு மேல அவளை இங்க வைக்க நான் தயாராக இல்லை. என் புள்ளைக்கு நான் இருக்கேன் என்னால முடிஞ்சளவு பாத்துக்கறேன்…”

“மாப்பிள்ளையை கவனிக்கவே சரியா இருக்குமே., அதுக்கும் மேல மற்ற வேலைகள் அதைவிட சாப்பாட்டுக்கு என்ன ண்ணா பண்றீங்க?” என்றவர்,

“நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா நான் இங்கேயே இருந்து உங்களுக்கு சமைச்சு கொடுத்து.. மாப்பிள்ளையை பாத்துக்கறேன் அவரும் எனக்கு இன்னொரு மகன் தானே!!” என்றதில் உடைந்து போய் விட்டான் ரிஷி. 

ரிஷியின் கண்களில் இருந்து கண்ணீர் கரகரவென இறங்க வேகமாக நோட்டை எடுத்து எழுதி பாக்கியாவிடம் கொடுத்தான். 

“நீங்க நினைக்கிற அளவுக்கு நான் நல்லவன் இல்லை அத்தை. இத்தனை மாசமா என் பொண்டாட்டியை  மட்டுமில்லை குழந்தைகளை கூட மறந்து ஓடிட்டு  இருந்தவன் தான் நான்!!.. அதுக்கு தண்டனையா தான் ஆண்டவன் என் குழந்தைகளை தூக்கி கொஞ்ச மட்டுமில்லை பார்க்க கூட முடியாத படி செய்துட்டான்..”

“சத்தியமா உங்களோட பாசம் என்னை கூறு போடுது அத்தை. ப்ளீஸ் இதுக்கெல்லாம் நான் தகுதியானவனே கிடையாது. என்னால இப்போ குனிய முடியாது இல்லன்னா உங்க கால்ல விழுந்திருப்பேன்…” என்றதை பாக்கியலட்சுமி படிக்க ரிஷியோ கண்ணீரோடு அவர் முன் கைகூப்பினான்.

“உங்க பொண்ணு உங்களை மாதிரியே ரொம்ப நல்லவ த்தை.. ஆனா அவளோட அருமை தெரியாமல் இருந்துட்டேன். அவ எத்தனையோ முறை சொல்லியும் எதையுமே நான் கேட்காம போயிட்டேன். அதுக்கான தண்டனையை அனுபவிச்சுட்டேன்..” 

“என்ன தான் என் தரப்பில் இருந்து நான் நடந்துகிட்ட விதத்துக்கு ஒரு காரணம் சொன்னாலும் அது எதுவுமே அவளோட அன்புக்கு ஈடாகாது.. நீங்க கேட்டதே போதும்!! ஒரு அம்மாவோட துரோகத்துக்கு பிறகு எனக்கு இன்னொரு அம்மாவா நீங்க இருக்கீங்க என்ற சந்தோஷமே எனக்கு அதிகம்..”

“இதுக்கு மேல நான் எதையும் எதிர்பார்க்கலை.. நீங்க என் பொண்டாட்டியையும் குழந்தைகளையும் நல்லா பாத்துக்கோங்க” என்றான். 

ஆனால் தினகரனும் பாக்கியலட்சுமி அதற்கு தயாராக இல்லை. 

கதிரோடு வேலை செய்பவனுக்கு விபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் அவன் தந்தை மட்டுமே உடன் இருப்பதால் சாப்பாட்டுக்கு கஷ்டப்படுகிறார்கள் என்று சுமதி, மகாவிற்கு தெரிவித்து விட்டு மூன்று வேளையும் பாக்கியலட்சுமி தன் வீட்டில் இருந்து சமைத்து கொடுத்து அனுப்பினார். 

ரிஷி அதிகமான காரம் எடுக்கக் கூடாது என்பதால் அவனுக்கு தனியாக பக்குவமாக சமைத்துக் கொடுத்தார். கதிர் மனைவியோடு நல்ல உறவில் இல்லாததால் அவளிடம் இந்த விஷயத்தை தெரிவிக்கவில்லை.

எங்கே சுமதிக்கு தெரிந்தாலும் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் மகாவிடம் சொல்லி விடுவாளோ என்று விஷயத்தை மூவரும் தங்களுக்குள் ரகசியமாக வைத்துக் கொண்டனர். 

“நீ ரெஸ்ட் எடு மகா செக்காப்புக்கு தானே வர சொல்லி இருக்காங்க உனக்கு எதுக்காக தேவையில்லாத அலைச்சல்?” என்று இரண்டு முறை மருத்துவமனைக்கு குழந்தைகளை அழைத்து சென்று திரும்பும் வழியில் ரிஷிக்கும் சிவபாலனுக்கும் காண்பித்தனர். 

ஓரளவு கை காயம் குணமாகி பேச்சும் ஓரளவு சரளமாகவே இருக்க யார் துணையும் இல்லாமல் அவனே நடக்கத் தொடங்கி இருந்த நேரம் அது!!

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகி கொண்டிருக்கும் நிலையிலும் புத்தம் புது ரோஜாவாக மலர்ந்திருந்த பிள்ளைகளை முதல்முறை கையில் ஏந்த பயந்து போனான் ரிஷி. 

சிவபாலன் பேரனை தூக்கி கொஞ்சி கொண்டிருக்க இவனோ, “அப்பா பார்த்து குழந்தை அழறான், மெதுவா..” என்று பயத்துடன் அவரை பார்த்திருந்தான். 

“இரண்டு மாசம் ஆகிடுச்சு பயப்படாம தூக்குங்க மாப்பிள்ளை..” என்ற பாக்கியா ‘குழந்தையை எப்படி தூக்க வேண்டும்..’ என்று சொல்லி கொடுத்த போதும் “நீங்க மடியில வைங்க அத்தை நான் மெதுவா தூக்கி ப்ராக்டிஸ் பண்றேன்..” என்றான். 

மகளை தன் மடியில் கிடத்திய அந்த நொடி மனைவியை நினைக்காமல் இருக்க முடியவில்லை.

மகன் அவன் ஜாடை என்றால் மகள் அப்படியே மகாவின் நிறம், வடிவம் கொண்டிருந்தாள்.

‘ப்ச் மடையன் டா ரிஷி நீ!!’ என்று அவன் மனசாட்சியே அவனை வறுத்து கொட்டியது. 

“ஸாரி லச்சு..” என்று மனதார மனைவியிடம் மன்னிப்பு கேட்டபடி மடியில் இருந்த மகளை ஆசை தீர கொஞ்சி மகிழ்ந்தான். 

மெல்ல குழந்தையை தூக்க பழக்கி கொண்டவன் அடுத்து மகனை ஆசையோடு கையில் வாங்கிய போதும் அதிக நேரம் வைத்திருக்க முடியாது அவர்களை படுக்கையில் வைத்து அழகு பார்த்து கொஞ்சி ரசித்து மகிழ்ந்தான். 

“நேரமாச்சு மாப்பிள்ளை மகா ரெண்டு முறை ஃபோன் பண்ணிட்டா..” என்று பிள்ளைகளைக் கேட்க அவனோ தன் சொத்தை தான் உரிமை கொண்டாட முடியாத நிலையை என்னும் நொந்து போனான். 

மருமகனின் நிலை அறிந்து, “நீங்க கஷ்டப்பட வேண்டாம் மாப்பிள்ளை, நான் மகாவுக்கு சொல்லி புரிய வச்சு..” என்றவர் ஆரம்பிக்கவுமே, “வேண்டாம் அத்தை தயவு செஞ்சு அப்படி எதுவும் செஞ்சுடாதீங்க..” என்றான் அவசரமாக. 

“...”

“என்னோட பாரம் எதுவுமே என் பொண்டாட்டி பிள்ளைகள் சுமக்க கூடாதுன்னு நினைக்கிறேன் அதுக்கு இந்த பிரிவு அவசியம்..” என்றவன் வெளிநாட்டிற்கு செல்லும் முடிவை அவர்களிடம் தெரிவிக்க, 

“ஒரே ஒருமுறை மகாவை பார்த்துட்டு கிளம்பலாமே?! அவ புரிஞ்சுப்பா..” என்றனர். 

“எனக்கு அந்த தகுதி இருக்குன்னு நினைக்கறீங்களா மாமா? ஏற்கனவே அவளோட பணத்தையும் சொத்தையும் கேட்டு அவளோடு சண்டை போட்டவன் நான், திரும்ப அவ முன்னாடி நிற்கும் போது அதற்காக தான்னு என் பொண்டாட்டி நினைக்கிறதை என்னால தாங்க முடியாது...”

“என்னோட பாரத்தை அவளோட தலையில சுமத்த நான் விரும்பலை. என்னோட பாரத்தை இறக்கி வைக்க ஒரே ஒருமுறை போயிட்டு வந்துடுறேன், அதோடு உங்க மகளுக்கு பிடிச்ச புருஷனா அவ முன்னாடி நிற்க விரும்பறேன்.. ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோங்க..” என்றதில் ஒப்புக்கொண்டனர். 

அதன்பின் குழந்தைகளுக்கு முடி இறக்குவதை பற்றி கேள்விப்பட்டதும் “என் பொண்டாட்டியோட விருப்பம் எதுவா இருந்தாலம் செஞ்சு குடுங்க.. எதுக்காகவும் தடுக்காதீங்க..” என்றான் கறாராக. 

“இல்ல மாப்பிள்ளை இதுவரைக்கும் எந்த விசேஷமும் நீங்க இரண்டு பேரும் சேர்ந்து இருந்ததில்லை..” 

“அத்தை எப்படி பார்த்தாலும் என்னால இப்போ இந்தியா வர முடியாது. அதுக்காக இன்னும் இரண்டு வருஷம் கழிச்சு செய்தாலும் நல்லா இருக்காது. என் மகளுக்கு கம்மல் போட்டு அழகு பார்க்க நினைக்கிற என் பொண்டாட்டியோட ஆசை சீக்கிரம் நிறைவேறனும்னு விரும்பறேன்..” என்றிட அவர்களும் மகிழ்ச்சியோடு விசேஷத்திற்கு ஏற்பாடு செய்தனர். 

அனைத்தையும் கேட்டு முடித்த மகா “அப்போ நீங்க எல்லாரும் ஒண்ணா சேர்ந்து என்கிட்டே இருந்து மறைச்சு நாடகமாடி இருக்கீங்க.. அப்படிதானே!!” 

“உன்னோட நல்லதுக்காக தான்டி!!” 

“என்னம்மா என் நல்லது? அப்போ இருந்து இப்போ வரை உனக்கு உன் மாப்பிள்ளை முக்கியமா இருந்தளவு நான் இருந்ததே இல்லை. என் கண்ணு முன்னாடியே சமைச்சு கொடுத்து கண்கட்டு வித்தை காமிச்சு இருக்க.. பேசாத நீ!”

“அப்படி இல்லடா மகா மா..  மாப்பிள்ளையோட நிலைமை அப்போ ரொம்ப மோசமா இருந்தது.. உன்னால தாங்கி இருக்க முடியாது அதுவே உனக்கு ஸ்ட்ரெஸ் கொடுக்கிறதை மாப்பிள்ளை விரும்பலை..”

“அப்பா நீங்களுமா?!” என்று மகா கேட்ட நேரம் ரிஷிவரதன் அங்கே வந்து சேர்ந்தான்.

மற்றவர்கள் அவனை ஓடி சென்று வரவேற்க மகா கொலை வெறியோடு பார்த்து கொண்டிருந்தாள்.

Comments

Post a Comment

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17