“ம்மா அக்காக்கு என்னம்மா ஆச்சு ஏன் இப்படி
இருக்காங்க..? நீங்களும் ஏன் எதுவும் சொல்லாம அழுதுட்டே
இருக்கீங்க” என்று பள்ளியில் இருந்து திரும்பிய தென்றல் சிவந்த விழிகளும் வீங்கிய
முகமுமாக தளிர் இருந்த கோலமும் அதற்கு நிகராக கண்ணீரில் கரைந்து கொண்டிருந்த
தாயையும் கண்டு மிகவும் பயந்து போய் கேட்டிருந்தாள்.
ஆனால் இளைய மகளை பார்த்த சீதாவிற்கு எதையும் பேசும் சக்தி
இல்லாது போக அவளை கட்டிக்கொண்டு மெளனமாக கண்ணீர்
வடித்தார்.. “என்ன பண்ற சீதா..?” என்று அதட்டல் போட்ட
மீனாக்ஷி தென்றலை தன்புறம் இழுத்து, “ஒண்ணுமில்ல கண்ணு
அக்காக்கு வயிறு வலி அதான் இப்படி இருக்கா நீ நைட் க்ளாஸ் போகணுமே சீக்கிரம் போய்
முகம் கழுவிட்டு வா நான் காஃபி போடுறேன் குடிச்சுட்டு கிளம்புவ” என்று பத்தாம்
வகுப்பில் இருக்கும் தென்றலை பள்ளிக்கு கிளப்பிவிடுவதற்காக எழுந்து கொண்டார்
மீனாக்ஷி.
“அக்காக்கு வயிறுவலிக்குது அதனால அழறாங்க ஆனா
அம்மா ஏன் த்தை அழறாங்க..” என்ற தென்றலுக்கு தாய் தமக்கையின் நிலையை கண்டு
தன்போக்கில் கண்களில் இருந்து நீர் இறங்கி கொண்டிருந்தது.
“ப்ச் உன் அக்கா படுற அவஸ்த்தையை பார்த்து
என்னமோ ஏதோன்னு அவ பயந்துட்டா எங்க உனக்கும் இந்த மாதிரி வலி வந்துடுமோன்னு உன்னை
பார்த்ததும் அவ அழுகை அதிகமாகிடுச்சு.., அதுதான் வேறொண்ணுமில்ல
நீ சீக்கிரம் போ கண்ணு” என்று சொல்லவும் இரவு வகுப்பிற்காக தயாராகிய தென்றல் அவர்
கொடுத்த காஃபியை குடித்துவிட்டு மீண்டும் பள்ளிக்கு கிளம்பி
சென்றாள்.
தென்றல் கிளம்பவுமே ஒருமுடிவோடு எழுந்துகொண்ட சீதா “என்னோட
கிளம்பு” என்று மகளின் கையை பிடித்துகொண்டு வெளியேற போனார்.
“எங்க போற சீதா..?” என்று
வழி மறித்து நின்றார் மீனாக்ஷி.
“போலீஸ் ஸ்டேஷனுக்கு சித்தி” என்றார் கண்களை
துடைத்துக்கொண்டு...
“என்ன பேசுற சீதா..? பொட்டபுள்ள
விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை போனா நாளைக்கு அவ வாழ்க்கை என்னாகும்னு யோசிக்க
மாட்டியா..? டிவி பேப்பர்ல எல்லாம் நம்ம புள்ள பேர்
அடிபடும்.. அந்த பையன் வசதியானவன்னு சொல்றீங்க இத்தனை
நாள் கூட இருந்த பசங்களையே விலைக்கு வாங்கி இவ்ளோ தூரம் வந்திருக்கவன்
போலீஸ்காரங்களை மட்டும் விட்டு வைப்பானா..? நாலு ஆம்பளை
பசங்களோடு ஏன் போனான்னு நம்ம பிள்ளையை தான் முதல் கேள்வி கேட்பானுங்க அதோட
நிறுத்தாம கண்ட நேரத்துல விசாரணைன்னு இங்க வந்து நிற்பானுங்க, இஷ்டத்துக்கு கேள்வி கேட்பானுங்க அதை பார்க்கிற அக்கம் பக்கத்தாருக்கும் ஊருக்கும்
களங்கமில்லாத நம்ம புள்ள மனசு தெரியாது நாளைக்கு அவங்க சொல்றது தான் உண்மைன்னு
நம்புவாங்க தயவுசெய்து அவசரபடாத கொஞ்சம் நிதானமா யோசி...”
“அதுக்காக அவனை சும்மா விட சொல்றீங்களா
சித்தி..?” என்று அழுகையோடு கேட்டவர், “கூட படிக்கிறவங்க சின்ன வயசுல இருந்து ஒண்ணா வளர்ந்தவங்கன்னு நம்பிதானே
அனுப்புனேன் எப்படி இந்த காரியத்தை செய்ய முடிஞ்சது..? எப்படி
இருந்த என் பொண்ணை இப்போ இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்காங்க இத்தனைக்கும் அவங்க
என் கையாள சாப்பிட்டவங்க.. அப்படி இருக்கப்போ உண்ட வீட்டுக்கே எப்படி இரண்டகம்
செய்ய முடிஞ்சது..? இல்ல சித்தி என்னால முடியல தப்பே செய்யாத
என் பொண்ணுக்கு எதுக்கு இந்த தண்டனை..? அவளுக்கு செய்த
அநீதிக்கு நியாயம் கிடைச்சாகணும் தயவுசெய்து என்னை போகவிடுங்க” என்றார் சீதா
ஆக்ரோஷமாக.
“அக்கம் பக்கம் வீடு இருக்கு ஏற்கனவே ஆளுங்க
வந்து போயிட்டாங்க கொஞ்சம் நிதானமா பேசு சீதா. உன் பொண்ணுக்கு நியாயம்
கிடைக்கணும்னு சொல்லி அவ வாழ்க்கையை நீயே அழிச்சுடாத..”
“என்ன சித்தி பேசறீங்க..? என் பிள்ளையை நான் ஒழுக்கமா வளர்த்திருக்கேன் அந்த கழிசடையை ஒழுங்கா
வளர்க்காதவங்க என் பெண்ணை ஏமாத்தி கல்யாணம் பண்ணினதுக்கு எனக்கு பதில் சொல்லியே
ஆகணும்” என்று தளிரை தன்னோடு இழுத்தார்.
“என்னது கல்யாணமா..? ஏன்டி
புத்திகெட்டு போச்சா உனக்கு..? பொம்பளை தானே தாலியை
கட்டிட்டா பின்னாடியே வந்துடுவான்னு இளக்காரம் அதான் அந்த பேடிப்பய காதலை சொல்ல
தைரியம் இல்லாம என் புள்ளையோட கழுத்துல ஏமாத்தி தாலி கட்டியிருக்கான் அதுக்கு பேர்
கல்யாணமா..? இப்போ அவனை தண்டிக்கிறதை விட நம்ம பிள்ளையை
காப்பாத்துறது தான் முக்கியம்... அன்னைக்கு அந்த நாய் செய்த தப்புக்காக கங்கா
வாழ்க்கையை ஊர்கூட்டி அவ அம்மாவே அழிச்ச மாதிரி என் புள்ளைக்கு நடந்த கொடுமையை
கல்யாணம்னு சொல்லி அவ வாழ்க்கையை நீயே அழிச்சிடாத, விடுடி அவ
கையை” என்று ஆவேசமாக சீதாவின் கையை உதறி தளிரை தன்னோடு அணைத்து கொண்டவர்,
“என்ன நியாயம் கேட்க போற..? இதோபார் அவளுக்கு நடந்ததுக்கு பேர் கல்யாணமே கிடையாது நீ அவன் வீட்டுக்கு
போய் நியாயம் கேட்கிறன்னு இன்னும் பிள்ளையை கஷ்டபடுத்தாத சீதா.. யார் செஞ்ச
புண்ணியமோ தளிரு நல்ல படியா வீடு வந்து சேர்ந்தாச்சு, அவசரப்பட்டு
தப்பு பண்ணாத சீதா” என்று மீனாக்ஷி சீதாவை எச்சரித்த அதேவேளை,
“அவன் அப்படி செய்வான்னு நான் சத்தியமா
எதிர்பார்க்கலை ம்மா தெரிஞ்சிருந்தா நான் அவங்களோட போயிருக்க மாட்டேன்.. இத்தனை
வருஷமா ரொம்ப நல்ல ஃப்ரெண்டா தான் இருந்தான் எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணுவான்
எனக்கு சந்தியா, அஜய், லேகா, எப்படியோ அப்படிதான் சரத்தும்.. ஆ.. ஆனா என்கிட்டே எதுவுமே கேட்காம இப்படி
ஒரு துரோகம் நான் எதிர்பார்க்கலை... ஒருவேளை நீங்க சொன்ன மாதிரி நான் அவங்களோட
பழகியிருக்க கூடாதோ..? எல்லாம் என்னால தான்..! என்னோட தப்பு
தான் நீங்க காரணமில்ல ம்மா ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுங்க” என்று தளிர் சீதாவின்
கால்களை இறுக பற்றிக்கொள்ளவும் கண்ணீரோடு அத்தனை நேரம் தன் வளர்ப்பு தான் தவறு..!
தன்னாலேயே தன் மகள் இந்நிலைக்கு ஆளாகி போயிருக்கிறாள் என்று குற்ற உணர்வில் பேசிய
சீதாவிற்கு மகளின் நிலை தாளமுடியவில்லை.
“அம்மாடி தளிரு” என்று சீதாவிற்கு முன்பாகவே
அவளை தூக்கி நிறுத்திய மீனாட்சி “நீ என்ன
தப்பு பண்ணின தாயீ..? ஒருத்தனை நம்பி போற புள்ளையோட மானத்தை
காப்பாத்த வேண்டியது ஒரு ஆம்பளையோட கடமை அதை செய்யாம நம்பி வந்த புள்ளைக்கு
துரோகம் பண்ணின அவன் ஆம்பளையே கிடையாது அவன் கட்டினதுக்கு பேர் தாலியும்
கிடையாது... இங்க அவன்தான் தப்பு நீயில்ல..” என்றவர் அவள் உடல் சூடு
அதிகரித்திருப்பதை கண்டு அருகே இருந்த மருத்துவரிடம் அழைத்து சென்று ஊசிபோட்டு
மாத்திரை வாங்கி கொண்டு வந்தார்.
“போதும் இதுக்கு மேல எதுவும் பேசாத சீதா..”
என்று மீனாக்ஷி சொல்லி சொல்ல ஆற்றாமையில் இருந்த சீதாவை மகளின் நிலை வெகுவாக
அசைத்துவிட்டிருந்தது. இப்போது தளிர் மட்டுமே அவருக்கு பிரதானமாகி போக மாத்திரை
எடுப்பதற்காகவாவது அவள் வயிற்றுக்கு கொடுக்க வேண்டுமே என்று சீதா இட்லி செய்து
மகளுக்கு ஊட்ட ஒரு கவளம் கூட இறங்க மறுத்தது தளிருக்கு. “கொஞ்சம்
சாப்பிடு அம்மூ அப்போதான் மாத்திரை போட முடியும்” என்று சீதா கண்ணீரை துடைத்து
கொண்டு சொல்ல அவரை கட்டிக்கொண்ட தளிரின் நெஞ்சம் அச்சத்தில் பலமடங்கு வேகமாக
துடித்து கொண்டிருந்தது.
கடினப்பட்டு அவர் இரண்டு வாய் ஊட்டி இருப்பார் ஆனால் தளிரால்
அதற்கு மேல் முடியாமல் போக வேறு வழியின்றி காய்ச்சல் குறைய மாத்திரையை கொடுத்து
அவளை படுக்க வைத்த வேலை பள்ளியில் இருந்து வந்த தென்றல் தமக்கையை பார்க்க அவள்
மீனாக்ஷியின் மடியில் தலை வைத்து சுருண்டு படுத்திருந்தாள்.
“ம்மா அக்காக்கு வலி எப்படி இருக்கு..?”
“மழையில நனைஞ்சதால அவளுக்கு காய்ச்சல் தென்றல்
இப்பதான் டாக்டர் கிட்ட போயிட்டு வந்தோம் நீ சாப்பிடு” என்றவர் அவளுக்கு உணவு
கொடுக்க தளிர் அருகே அமர்ந்துகொண்டு உணவை
முடித்தவள் கேட்ட கேள்விகளுக்கு ஒருவாறு பதில் சொல்லி சமாளித்த மீனாக்ஷி அவளை
உறங்க வைத்தார்.
தென்றல் பேசியதெல்லாம் கேட்டுக்கொண்டே கண்மூடி படுத்திருந்த
தளிருக்கு தான் நல்ல மகள் மட்டுமல்ல நல்ல அக்காவும் இல்லை என்ற எண்ணம் மேலோங்க
அவள் குற்றஉணர்வு அதிகரித்தது. இரவு முழுவதும் உறங்க முடியாது தவித்த இளந்தளிர்
அடிக்கடி அலறி அடித்து கொண்டு எழுந்து அமர்ந்திருந்தாள்.
தென்றல் விரைவாக உறங்கிவிட ஹாலில் தளிரோடு படுத்திருந்த
சீதாவும் மீனாக்ஷியும் அவள் படுபாட்டை கண்டு கண்ணீரோடு அவளை அணைத்து கொண்டு
ஆளுக்கு ஒருபுறமாக படுத்த போதும் தளிரால் உறங்க முடியவில்லை... மீண்டும் மீண்டும்
இன்றைய நினைவுகள் படையெடுக்க சரத் அவள் புகைப்படத்தை உள்ளாடையில் அவன் உடலில்
பச்சை குத்தியிருந்தது எல்லாம் மனகண்ணில் விரிய மீண்டுமொருமுறை வாந்தி எடுத்து
இருந்தாள்.
“போதும் இப்படியே ஒருத்தர் மாற்றி ஒருத்தர்
அழுதுட்டு இருந்தா தளிரால எப்படி இதுல இருந்து வெளியே வரமுடியும்..? பிள்ளை ஒரு ராத்திரிக்கே தாங்கல இதுக்கு மேல இவ இங்க இருக்க வேண்டாம்
சீதா.. இவளை பார்த்து தென்றலும் பயந்துடுவா நான் என்னோட வேலூருக்கு கூட்டிட்டு
போறேன் நல்லா ஆனதுக்கு பிறகு கூட்டிட்டு வரேன்” என்ற மீனாக்ஷி அதிகாலையே முதல்
பஸ்ஸில் வேலூருக்கு கிளம்பிவிட அவர்களை சத்தமே இல்லாமல் பின்தொடர்ந்திருந்தான்
சரத்.
ஆனால் வேலூருக்கு சென்ற மூன்றாம் நாளே தற்கொலைக்கு முயன்ற
தளிரை சரியான நேரத்தில் ‘அடிப்பாவி மகளே என்ன காரியம் செய்ய பார்த்த..?’ என்று
ஈரக்குலை நடுங்க விதிர்விதிர்த்து போய் தடுத்து பிடித்திருந்தார் மீனாக்ஷி.
இன்று இரண்டாம் நாள் கவுன்சிலிங் கொடுப்பதற்காக
மீனாக்ஷியும் சீதாவும் இளந்தளிரை அழைத்து வந்து டாக்டர் சிவசங்கரியின் முன்
அமர்த்தியிருந்தனர்.
மீனாக்ஷியோடு வேலூருக்கு வந்த தளிரிடம் எந்த மாற்றமும்
இல்லை.. மூன்று நாட்களுக்கு முன் வாழ்க்கை குறித்த
எத்தனை எத்தனையோ கனவுகளோடும் ஆசைகளோடும் வயதிற்கே உரிய துள்ளலோடு பட்டாம்பூச்சியாய்
பறந்து திரிந்த பெண்ணின் இறக்கைகளை வெட்டி போட்டு இருந்தான் நண்பன் என்ற
போர்வையில் கிடைக்கபெற்ற துரோகி.
எதிரியை எளிதாக இனம் காணலாம் ஆனால் துரோகியை இனம் காண்பது
கடினம் அதுவும் பத்தொன்பது வயதேயான பெற்றோரின் அரவணைப்பில் பள்ளி, வீடு,
கல்லூரி, நண்பர்கள் என்று இருந்த தளிருக்கு
அது மிகவும் கடினமாகி போயிருந்தது தான் அவள் விதியை மாற்றி எழுத வைத்து அவளை
தற்கொலைக்கு தூண்டி இருந்தது.
ஆம் மீனாக்ஷியின் எந்த ஆறுதலும் சமாதானமும் அவளிடம்
எடுபடவில்லை உணவை மறுத்து உறக்கம் தொலைத்து சதா சர்வகாலமும் கண்ணீர் சுமந்த
விழிகளோடு நடந்த அத்தனைக்கும் தன்னையே குற்றம்சாட்டி கொண்டவளுக்கு ஏன் வாழ
வேண்டும் என்ற எண்ணமே அதீதமாக தலை தூக்கியதன் விளைவே இரண்டு நாட்களும் தளிரை
விட்டு எங்குமே நகராமல் அடைகாக்கும் கோழியாக அவளை காத்து
கொண்டிருந்த மீனாக்ஷி மூன்றாம் நாள் சற்று கண் அசந்த நேரம் தளிர் தற்கொலைக்கு
முயன்றது.
ஒருகணம் மீனாக்ஷியின் இருதயதுடிப்பே நின்று போனது. தம்பியோடு
கணவனையும் பிள்ளைகளையும் சேர்த்து பறிகொடுத்துவிட்ட மீனாக்ஷி வாழ்வின் ஆதாரமே
தம்பி மகள்கள் தான். இப்போது தளிர் செய்யவிருந்த காரியத்தில் பதைபதைத்து போனவர் அவள் கட்டியிருந்த
புடவையை அவிழ்த்தெறிந்து தளிரை
ஹாலிற்கு கூட்டிவர அவளோ,
“என்னை விடுங்க அத்தை நான் வாழவே தகுதி இல்லாதவ
என்னால எல்லாருக்கும் எவ்ளோ கஷ்டம் நான் போயிடுறேன்.. படிப்பு, விளையாட்டு, டான்ஸ்ன்னு எப்பவும் அக்கா மாதிரி
வரணும்னு தென்றல் கிட்ட அப்பா சொல்லிட்டு இருப்பாரு ஆனா தென்றல் என்னை மாதிரி
வரவேண்டாம் அத்தை நான் அவளுக்கு ஒரு தப்பான முன்னுதாரணம்.. தென்றலை நல்லபடியா
படிக்க வைங்க அம்மாவை பார்த்துக்கோங்க..” என்று தளிர் தன் போக்கில் அரற்றி
கொண்டிருக்க அவள் வேதனையை கண்ட மீனாட்சியின் கண்களும் உடைப்பெடுத்தது.
என்ன ஆறுதல் சொல்லியும் கேட்காதவளை ‘வாயை மூடுடி’ என்ற
மீனாக்ஷி ஓங்கி அவள் கன்னத்தில் ஒன்று வைக்கவும் தான் தளிர் தன் பிதற்றலை
நிறுத்திட அவளின் அதிர்ந்த கோலம் கண்ட மீனாக்ஷி தளிரை வாரி அணைத்துக்கொண்டார்.
“நீங்க என்ன சொன்னாலும் என்னோட அஜாக்கிரதை,
தப்பான நபர்கள் மேல நான் வச்ச கண்மூடித்தனமான நம்பிக்கை இதெல்லாம்
தானே காரணம்.
நான் இருக்கிற வரை உங்க யாருக்குமே நிம்மதி இருக்காது அம்மா
அப்பாவை தலை நிமிர்ந்து வாழ வைக்கலைன்னாலும் அவங்க தலைகுனியற மாதிரி
நடந்துக்க கூடாது ஆனா நா.. நான்... எனக்கு.. என்னை விட்டுடுங்க அத்தை நான் போறேன்..”
என்றவளிடம் இருந்து பெருங்கேவல் புறப்பட தளிரை எப்படி தேற்றுவது
என்று புரியாது அலமலந்து போன மீனாக்ஷி இறுதியில் சிவசங்கரியிடம் தஞ்சம்
புகுந்திருந்தார்.
கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கும் மேலாக அவரை மீனாக்ஷிக்கு
தெரியும்,
தம்பியோடு சேர்த்து கணவன் பிள்ளைகளை வாரிகொடுத்த பின் தன்
வீட்டில் சூழ்ந்திருந்த வெறுமை அவரை பித்து பிடிக்க செய்ய அவருக்குமே
ஒருகட்டத்தில் ஏன் வாழ வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்கி மீனாக்ஷியின் மனதோடு உடல்
நிலையும் மோசமாகி போனது.. அப்போது அவர் பக்கத்து வீட்டில் இருந்த ஆசிரியர்
அவருக்கு மனநல மருத்துவரின் உதவி தேவை என்பதை உணர்த்தி மீனாக்ஷியை மருத்துவரிடம்
அழைத்து சென்றிருந்தார்.
அதன்பின்பே சென்னையில் பாதி நாள் வேலூரில் மீதி நாள் என்று
தம் ஜாகையை மீனாக்ஷி மாற்றி அமைத்ததில் இழந்த தன் பிள்ளைகளின் மகிழ்ச்சியை தம்பி
மகள்களின் முகத்தில் கண்டுகொள்பவர் வாழ்க்கையே அவர்களால் அர்த்தமுள்ளதாக மாறியது.
Comments
Post a Comment