மீனாட்சியின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் கண்ணீரோடு அவரை பார்த்தார் சீதாலட்சுமி.
“நம்பாதவங்க அதோட நிற்காம அதைத்தொட்டு
அவனுக்கும் இவளுக்கும் எப்படி பழக்கம், ஏன் கம்ப்ளைன்ட்
கொடுக்கல, இப்போ அவன் எங்கே..? தாலி
மட்டும் தானா இல்ல சேர்ந்து வாழ்ந்தாங்களான்னு எத்தனை கேள்விகள் முளைக்கும்
தெரியுமா...? இப்போவரை யாருக்கும் தெரியாம இருந்த விஷயம்
அக்கம் பக்கம் தெரியவரும், உலை வாயை மூடலாம் ஊர் வாயை மூட
முடியுமா.. ? இதை வச்சு எப்படியும் திரிப்பாங்கடி அதனால நம்ம
புள்ளை வாழ்க்கை தான் அல்லாடி போகும்..”
“அப்படியே உண்மையை சொல்லி அதை புரிஞ்சுகிட்டு
எந்த மகராசனாவது அவளை கட்டிக்க முன்வந்தாலும் அதுக்கு அப்புறமும் இவளை கேள்வி
கேட்காம இருப்பான்னு நினைக்கிறியா..? இவங்க எல்லாம்
கூட்டாளிங்களா இருந்ததால ஒருநேரம் அவன் தளிரை சந்தேகமா பார்த்தாலும் நம்ம புள்ளை
என்னாகும்ன்னு யோசிச்சு பாரு சீதா” என்றவர்,
“தப்பே பண்ணாத பிள்ளை இவ்வளவு நாள் பட்டது
போதாதா..? எந்த ஆம்பளையும் தனக்கு வரப்போறவ புதுசா இருக்கணும்னு
நினைப்பானே தவிர இரண்டாவதா கட்டிக்க விரும்பமாட்டான். இப்பவும் உன் பெண் உன்னோட
பெண்ணா பவித்ரதோட தான் இருக்கா அப்புறம் ஏன் இதை சொல்லணும்..?”
“ஆனா மறைக்கிறது தப்பில்லையா சித்தி...?”
“சீதா நான் மறைக்க சொல்லல மொத்தமா மறந்துடுன்னு
சொல்றேன்..”
“சித்தி...”
“இதோபார் சீதா நம்ம வீட்டுல குப்பை
சேர்ந்துட்டா அதை பெருக்கி வாரி கொட்டிட்டு போயிட்டே இருப்போமே தவிர கொட்டின
குப்பையை நினைச்சுட்டு இருக்க மாட்டோம்... அவளோட மனசுல இருந்த தேவையில்லாத குப்பைகளை
டாக்டரம்மா தூக்கி போட்டுட்டாங்க அவ இனி அதை நினைக்கணும்னு அவசியமில்லன்னு
சொல்லியிருக்காங்க.. நாம மட்டும் ஏன் அதை பற்றி ஏன்
நினைக்கணும்..?”
“நல்லதை தான் நினைவு வச்சுக்கணும் கெட்டதை
கடந்து போக கத்துக்கணும் அப்பத்தான் வாழ முடியும் புரியுதா..? டாக்டரம்மா
சொன்ன மாதிரி நம்ம பிள்ளை புது ஜென்மம் எடுத்து வந்திருக்கு அவளே கொஞ்சம் கொஞ்சமா
எல்லாம் மறந்து தன் மேல நம்பிக்கை வச்சு வாழற ஆசையில இருக்கா நீ அதுல மண்ணள்ளி
போட்டுடாத உன்னை கெஞ்சி கேட்கிறேன்.. உன் குழந்தை வாழனும்னு நினைச்சா
எல்லாத்தையும் மறந்துடு இல்ல உன் இஷ்டம் போல செய்து அவ வாழ்க்கையை நாசம் பண்ணு போ”
என்று அவர் கோபமும் கண்ணீருமாக சொல்ல,
“என்ன சித்தி பேசுறீங்க என் பெண் வாழ்க்கையை
நானே அழிப்பேனா..?” என்று சீதா கேட்க இதுநேரம் வரை இவர்கள்
பேச்சை கேட்டுக்கொண்டு இருந்த தளிர் மீனாக்ஷியின் கண்ணீரை மெளனமாக துடைக்கவும்
அவளை கட்டிக்கொண்டவர்,
“அப்படி நினைக்காதவ இன்னொரு முறை இதைப்பற்றி
பேசாதடி... ஒரு கல்யாண வாழ்க்கைக்கு முழு தகுதியோட தான் உன் பெண் இருக்கா அதை நீ
நம்பு.., ஆயிரம் பொய்யை சொல்லி கல்யாணம் செய்யலாம்னு
சொல்லுவாங்க இங்க நான் உன்னை எந்த பொய்யும் சொல்ல சொல்லலை.. உண்மையையும் மறைக்க
சொல்லல, மறந்துடுன்னு சொல்றேன் அவ்ளோதான்” என்றவர்
தளிரை ஆவேசமாக முத்தமிட்டு,
“துஷ்ட்டன் கிட்ட இருந்து தூர விலகி
வந்துட்டோம், ஒருவேளை நாளைக்கு அவன் என் குழந்தையை தேடி
திரும்ப வந்து தொந்தரவு கொடுக்க நினைச்சான்னா நீ என்னடி போலீஸ் கம்ப்ளைன்ட்
கொடுக்கறது அந்த நாயை கண்டந்துண்டமா வெட்டி
போட்டுட்டு ஜெயிலுக்கு நான் போறேன் என் பிள்ளைக்கு நீ ஜாம்ஜாம்ன்னு கல்யாணத்தை
நடத்து” என்று சொல்ல “சித்தி” கண்ணீரோடு அவரை கட்டிக்கொண்டார் சீதா.
“ஒருவிஷயம் புரிஞ்சுக்கோ சீதா ஆண்டவன் உனக்கு
தாலியை மட்டும் பறிச்சான் ஆனா நான் வாழறதுக்கான அர்த்தமே நீங்க மூணு பேரும்
தான்டி... அவ வாழறதுக்காக நான் ஜெயிலுக்கும் போக தயார்” என்றவர்
சீதா தளிர் இருவரையும் ரகுபதியின் புகைப்படத்தின் முன் நிறுத்தி சத்தியம்
பெற்றுக்கொண்டார்.
இன்று :
அண்ணாமலையை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்திருக்க அவருக்கு
உடனடியாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பது குறித்து
மருத்துவர்கள் சொல்லவும் உடனே செய்ய சொல்லிவிட்டார் அம்பலவாணன். அதேநேரம் கணவரின்
நிலையை கண்ட அன்னபூரணி அவர் வயதிற்கு அடுத்தடுத்து நிகழ்ந்த அதிர்ச்சிகளில் மயங்கி
விழ அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆண்கள் அனைவருக்குமே அலைபேசி அழைப்புகள் தொடர்ந்து வந்து
கொண்டேயிருக்க மற்றவர்கள் கைபேசியை அணைத்துவிட்ட போதும் அம்பலவாணனால்
முடியவில்லை.., மிகவும் முக்கியஸ்தர்களின் அழைப்பை மட்டுமே ஏற்று பதில்
அளித்த அம்பலவாணன் ஒருகட்டத்தில் முகம் இறுக தோய்ந்து அமர்ந்துவிட்டார்.
கைக்குழந்தையை வைத்திருக்கும் நிவி மருத்துவமனை சூழலில்
இருக்க வேண்டாம் என்று ராகவன் மனைவியை வீட்டில் விட்டுவிட்டு அண்ணாமலை
அனுமதிக்கபட்டிருந்த தளத்திற்கு செல்ல அங்கே மீண்டுமொரு பதற்றம் தொற்றிக்கொள்ள
வைஷுவை தூக்கி கொண்டு ஓடிய சரவணனின் பின்னே மற்றவர்கள் செல்ல ராகவனும் உடன்
சென்றான்.
பின்னே நிலைமையின் தீவிரம் உணராத வைஷு திருமணம் நின்று போனதை
ஏற்றுகொள்ள முடியாமல் இன்று இந்நேரம் தன்னோடு தளிர் இல்லாது போன ஏமாற்றத்தை தாங்க
முடியாது ஓயாது அழுதுகொண்டிருந்தவளுக்கு ஒருகட்டத்தில் மூச்சிரைப்பு ஏற்பட
அவளுக்கு சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
தளிர் மீதான கோபம் மறைந்து இப்போது ஜெகாவிற்கு மாமனார்
மற்றும் கணவரின் நிலையே பிரதானமாகி போனதில் தளிருக்காக பேசி குடும்பத்தையே படுக்க
வைத்திருக்கும் மகன் மீது ஜெகாவிற்கு சொல்லிலடங்கா ஆற்றாமை. யாரிடமும் கொட்ட
முடியாத ஆத்திரத்தை ராஜியிடம் கொட்டி தீர்க்க அவரோ ஆறுதல் சொல்லாமல் தளிர் மீதான
கோபத்திற்கு இன்னும் தூபம் போட்டு கொண்டிருந்தார்.
அண்ணாமலை அபாயகட்டத்தை தாண்டிவிட்டார் என்ற செய்தியை அறிந்த
பின் தான் அனைவரும் இயல்பிற்கு திரும்பினர். உணர்வுகள் தொலைத்து ஒருவித
இறுக்கத்தோடு மெளனமாக வலம் வந்த உதயாதித்தனின் முகத்தில் மெல்லிய கீற்றாய்
ஆசுவாசம் விளைந்தது.
தந்தையின் நிலையை கண்டு நள்ளிரவில் அனைவரையும் வீட்டிற்கு
அனுப்பிய உதய் தானே அண்ணாமலையை பார்த்து கொள்வதாக கூறிட அவனுடன் ராகவனும் சரவணனும்
இருந்துகொண்டனர்.
அண்ணாமலை அனுமதிக்கபட்டிருந்த அறையை பார்த்த உதய்யின்
விழிகளில் வலியை மிஞ்சிய ஒரு உணர்வு.. சரத்தை ஏதும் செய்ய முடியாத கோபத்தோடு
தென்றலை மணமகளாக பார்த்த அதிர்ச்சியில் அவரிடம் அதிகமாக வாதிட்டு விட்டோமோ.. சற்று
நிதானித்து பொறுமையாக எடுத்து சொல்லியிருந்தால் அவர் புரிந்து கொண்டிருப்பார்
அதைவிட்டு அவர் முடிவை உறுதியாக மறுத்து அவரை எதிர்த்து என்று தளிர் மீது
கொண்டிருந்த எரிச்சல், ஆற்றாமை சரத் மீதிருந்த ஆத்திரம் என்று
மொத்தமாக அவரிடம் காட்டிவிட்டதை எண்ணி இறுகி போயிருந்தவன் அவர் சிகிச்சை
வெற்றிகரமாக முடிந்ததில் தான் சற்று தளர்ந்தான்.
நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடிய உதய் அருகே அமர்ந்த
சரவணன்,
“மாப்பிள்ளை அடுத்து என்ன செய்ய போற..?” என்று
கேட்க ஆழ்ந்த மூச்சை வெளியேற்றி முகத்தை அழுந்த துடைத்து,
“தாத்தாவை நல்லபடியா வீட்டுக்கு கூட்டிட்டு
போகணும் மாமா” என்று அழுத்தமாக விழுந்த உதய்யின் வார்த்தையில் இருந்த வலியை
உணர்ந்தவர் அவனை ஆறுதலாக அணைத்துகொள்ள சரவணனுக்கு சுஜியிடம் இருந்து அழைப்பு
வந்தது.
நேரம் இரண்டை தாண்டியிருக்க மனைவியின் அழைப்பை ஏற்று வைஷுவின்
நிலையை கேட்டறிந்தவர் “மாப்பிள்ளை பேசு” என்று கைபேசியை உதய்யிடம் கொடுத்தார்.
“அம்மா அப்பா எல்லாரும் எப்படி இருக்காங்க க்கா
பாட்டி சாப்பிட்டாங்களா..?”
“எல்லாரையும் சமாளிச்சு தூங்க வச்சுட்டேன் ஆனா
வைஷுவை சமாளிக்க முடியலடா.. வீட்டுக்கு வந்த பிறகும் அழுகையை நிறுத்தல” என்று தன்
சொல் பேச்சு கேட்காமல் அடைமழையாக கண்ணீர் சொறியும் மகள் குறித்து சுஜி தம்பியிடம்
புலம்பி தள்ளினார்.
“நீ வைஷும்மா கிட்ட கொடுக்கா” என்றதும் “மாமா
உன்கிட்ட பேசணுமாம் வைஷு அழாம பேசு” என்றதும் தாயின் மடியில் கவிழ்ந்திருந்த வைஷு
வேகமாக கைபேசியை வாங்கி அதில் தெரிந்த உதயாதித்தனிடம்..,
“ஐ ஹே ட் யூ மாமா! நான் மேம் கிட்ட எவ்ளோ
கான்பிடென்ஸா சொன்னேன் தெரியுமா பட் நீங்க என்னை சீட் பண்ணிட்டீங்க.. நீங்க என்
மாமாவே கிடையாது யூ ஆர் எ சீட்டர் ஐ டோன்ட் வான்ட் டூ ஸீ யூ, டோன்ட் வான்ட் டூ ஸ்பீக் வித் யூ எனிமோர்” என்று அழுகையினூடே வைஷு சத்தமாக
மாமனை பேசவும்..,
“வைஷு என்ன பேச்சு இது எங்கிருந்து
கத்துகிட்ட..? மாமாகிட்ட ஸாரி கேளு ..” என்ற சுஜி கையை
ஓங்கவும், “அக்கா” என்று அழுத்தமாக வந்தது உதயனின் குரல்
அதில் தன் கையை கீழே இறக்கியவர் “ஸாரி உதய் அவ ஏதோ புரியாம பேசுறா நீ தப்பா
எடுத்து...”
“அக்கா குழந்தைக்கு என்ன தெரியும்..? நான் தளிரை கல்யாணம் செய்துக்க போறேன் சொன்னபோது அவளோட சந்தோஷத்தை
பார்த்ததானே நீ..! இப்போ செய்யமாட்டேன் சொன்னா அவளோட ஏமாற்றம் இப்படிதான்
இருக்கும் ஆனா நான் வேண்டாம்னு சொன்னதுக்கு பின்னாடி இருக்க காரணத்தை
புரிஞ்சுக்கிற அளவு மெச்சுரிட்டி அவளுக்கு இல்லை அதுதான் இவ்வளவு அடம்..! நீ
திட்டாம அவளுக்கு சாப்பாடு கொடுத்து தூங்கவை நான் காலையில வந்து பேசுறேன்”
“சரி உதய் ஆனா அவ தளிர் நம்ம வீட்டுக்கு வராம
சாப்பிட மாட்டேன்னு ஒரே அடம் கௌஷிக்கையும் சாப்பிட கூடாதுன்னு சொன்னதுல அவனையும்
சமாளிக்க முடியலை.. அக்கா சாப்பிட்டா தான் சாப்பிடுவேன்னு அவனும் அதிசயமா அக்காவோட
கூட்டணி போட்டு என்னை படுத்துறங்க”
“க்கா ஃபோன் வைஷு கிட்ட கொடு” என்றவன்,
“வைஷும்மா என்னைக்கு இருந்தாலும் தளிர் தான் உன்னோட மாமி இதுல
மாற்றம் கிடையாது” என்றான்.
“நிஜமாவே எங்க மேம்மை கல்யாணம்
செய்துப்பீங்களா..?”
“நிச்சயமாடா ம்மா”
“அப்போ ஏன் மாமா இன்னைக்கு கல்யாணம்
செய்யமாட்டேன்னு சொன்னீங்க.. எங்க மேம்க்கு எவ்ளோ ஷேம்மா இருந்திருக்கும், நீங்க மேம்மை அழ வச்ச அங்கிளை பனிஷ் பண்ணுவீங்கன்னு ஆசையா இருந்தேன் ஆனா
நீங்க தப்பு செய்யாத எங்க மேம்மை பனிஷ் பண்ணிட்டீங்க அவங்க எப்படி அழுதாங்க
தெரியுமா..?"
"எங்க மேம் எப்பவும் ஸ்மைலிங் ஃபேஸ்ஸா இருப்பாங்க
இன்னிக்கு அவங்க க்ரையிங் ஃபேஸ் எனக்கு பிடிக்கவே இல்ல.. உங்களால தான் அவங்க
அதிகமா அழுதாங்க” என்று மீண்டும் தன் அழுகையை தொடர்ந்த குழந்தைக்கு எப்படி
சட்டப்படி நடைபெற்ற திருமணத்தில் இருந்து தளிரை வெளிக்கொணர்ந்த பின் தான் திருமணம்
செய்ய முடியும் என்று புரிய வைக்க முடியாமல் திண்டாடிப்போனான் உதயாதித்தன்.
“அக்கா வைஷுக்கு எப்படியாவது பால் கொடுத்து
மாத்திரையை கொடு நல்லா தூங்கட்டும் நான் வீட்டுக்கு வந்த பிறகு பேசுறேன்” என்று
அழைப்பை துண்டித்து விட்டான்.
பூஜையறையில் இருந்த மகளை பார்த்தவாறே தென்றலிடம் அத்தனையும்
சொல்லிமுடித்த சீதா, “எதெல்லாம் நடக்க கூடாதுன்னு உங்கத்தை போராடி
உன் அக்காவை மீட்டு எடுத்தாங்களோ அது எல்லாமே நான் நினைச்சு பார்க்கவே முடியாதளவு
மோசமாவே நடந்து முடிஞ்சுடுச்சு தென்றல்.. உன் பெரியப்பா குடும்பத்துக்கே இதை
தெரியவிடாம பார்த்துக்கிட்டாங்க ஆனா இப்போ ஊர் முழுக்க என் பெண்ணை அசிங்கபடுத்திட்டான்..”
என்றவரின் கண்களில் இருந்து கண்ணீர் கரகரவென இறங்கிட,
“ம்மா” என்று தொண்டைகுழி ஏறி இறங்க சீதாவை
கட்டிக்கொண்ட தென்றலுக்கு வார்த்தை எழவில்லை.
“ஆனா இத்தனை வருஷத்துல ஒருமுறை கூட வராதவன்
எப்படி திடீர்னு வந்தான்னே புரியலை தென்றல்..”
“ம்மா அக்கா பிரெண்ட்ஸ்க்கு அத்தை, பெரிப்பாவை பற்றி தெரியும் தானே, நாம சென்னைல
இல்லன்னா விழுப்புரம் இல்ல வேலூர்ல இருப்போம்னு தெரிஞ்சிருக்குமே, அப்படி அவன் நமக்கே தெரியாம நம்மளை கண்காணிச்சு இருக்கான் ம்மா.. இல்லன்னா
இதெல்லாம் சாத்தியம் இல்ல..”
“வேலூர்னு தெரிஞ்சிருக்குமே தவிர யாருக்கும்
எந்த இடம் அட்ரெஸ்லாம் தளிர் சொல்லலைன்னு சொன்னா... இவன் மட்டுமில்ல மத்த பசங்க
கூடவும் தளிர் எந்த பேச்சு வார்த்தையும் வச்சுக்கலை அப்புறம் எப்படி இவன் இங்க...”
என்று குழப்பத்தோடு சீதா பேச,
“இத்தனை வருஷத்துல எப்படி ம்மா ஒருமுறை கூடவா
அவன் அக்காவை தேடி வரலை...”
“இல்ல தென்றல் ஆனா சித்தி சொன்ன மாதிரி அவன்
வந்திருந்தா அவங்க அவனை சும்மா விட்டிருக்க மாட்டாங்க.. டிசி வாங்க போனது கூட
காலேஜ் லீவ் நாள்ல தான் அப்புறம் எப்படி சரியா என் பொண்ணு கழுத்துல தாலி ஏறுற
நேரம் அதை நடத்தவிடாம...” என்றவரின் முகத்தில் கோபமும், ஆதங்கமும்
ஒருசேர முகிழ்த்தது.
“எனக்கு ஒருப்பக்கம் மாப்பிள்ளைக்கும் அண்ணன்
குடும்பத்துக்கும் என்ன பதில் சொல்வேனோன்னு இருக்கு இன்னொரு பக்கம் டாக்டர்
எதுவும் நடக்காதுன்னு சொன்ன பிறகும் எங்க உன் அக்கா திரும்ப ஏதாவது பழையபடி
ஆகிடுவாளோன்னு பயமா இருக்கு” என்று மகளின் தோளில் சாய்ந்து கண்ணீர் உகுக்க, “ம்மா”
என்றவளுக்குமே தளிர் கடந்து வந்த பாதை நெஞ்சை கனக்க செய்திருந்தது.
“ப்ச் நான் ஒரு மடச்சி என் பொண்ணு என் பெண்ணாவே
இருக்கிறதால எதுக்கு நானே அவகிட்ட ஏதோ குறை இருக்கிறதா நினைக்கணும்னு
எல்லாத்தையும் தலையை சுத்தி தூக்கி போட்டுட்டேன்.."
"ஆனா அண்ணன் கிட்ட ஒரு வார்த்தை
சொல்லி இருந்தா இன்னைக்கு அவங்களுக்கு இந்த அவமானம் வந்திருக்காதே.. அப்பாக்கு
எப்படி இருக்குன்னு யாரையாவது கேளு தென்றல் அவருக்கு எதுவும் ஆகிடகூடாது இல்ல நானே
என்னை மன்னிக்க மாட்டேன்..” என்று கண்ணீரோடு சொன்னவரின் நினைப்பெல்லாம்
இப்போது அண்ணாமலையை சுற்றியே வந்திருந்தது.
Comments
Post a Comment