“ம்மா நான் அத்தானுக்கு ஃபோன் பண்ணினேன் ஆனா
அவர் எடுக்கலை.. சுஜி அண்ணி நிவி அண்ணி யாருமே எடுக்கலை எமெர்ஜென்சில
இருப்பாங்கன்னு நினைக்கிறேன் நான் கொஞ்ச நேரம் கழிச்சு ட்ரை பண்றேன்” என்றாள்.
அதேநேரம் தளிரின் நினைவுகளோ பின்னோக்கி சென்றது.
"எங்க
இருக்கீங்க சந்தியா..?” என்றான் அஜய்.
“வந்துட்டே இருக்கோம் இன்னும் பத்து நிமிஷம்”
என்ற தளிரும் சந்தியாவும் அன்று ரகுபதியின் நினைவு நாளை முன்னிட்டு அவரை வணங்கிய
பின் பாஸ்போர்ட்டிற்கு விண்ணபிக்க சென்று கொண்டிருந்தனர்.
அரக்கபரக்க இருவரும் உள்ளே வர, “எவ்ளோ
நேரம் உங்களுக்காக வைட் பண்ண..? சரத் கார் எடுத்துட்டு
வரேன்னு சொல்லியும் வேண்டாம் சொல்லிட்ட டைமாச்சு சீக்கிரம் சைன் பண்ணுங்க” என்ற
லேகா விண்ணப்பத்தை தளிரிடம் கொடுத்து கையெழுத்து போட சொல்ல,
வியர்த்த முகத்தை துப்பட்டாவால் துடைத்துக்கொண்டே, விண்ணப்பத்தை
வாங்கி முதல் பக்கத்தை சரி பார்த்தவள் இரண்டாம் பக்கத்தை படித்து கொண்டிருந்த
நேரம் சந்தியா எதையும் சரிபார்க்காமல் வழக்கம் போல கையெழுத்து போட்டு
முடித்திருந்தாள்.
“ப்ச் எவ்ளோ நேரம் பார்த்துட்டு இருப்ப தளிர்
ஏற்கனவே லேட் ஆகிடுச்சு இப்போ சப்மிட் பண்ணினாதான் மத்ததெல்லாம் முடிச்சிட்டு
வீட்டுக்கு போக முடியும் சீக்கிரம் கையெழுத்து போடு” என்று சரத்தின் கண்ணசைவில்
தீனா அவசரபடுத்தினான்.
“அதுக்காக படிக்காம எப்படி போட கொஞ்ச நேரம் இரு
தீனா..” என்றவள் அடுத்த பக்கத்தில் அவசரமாக விழிகளை ஓடவிட அவளருகே வந்த அசோக்
மற்றவர்களிடம் கொடுத்துவிட்டு “இந்தா தளிர் காஃபி..” என்றவன் அவள் வாங்கும்
முன்பாக அவள் உடையில் பாதி காபியை கொட்டிவிட்டான்.
“ஸ்ஸ்ஸ்ஆஆ..” என்று தளிர் சூடு பட்டதில்
பதறிக்கொண்டு எழவும்,
“ஸாரி ஸாரி தளிர் தெரியாம பட்டுடுச்சு வா வாஷ்
பண்ணிட்டு வந்துடுவ” என்று அவன் அழைக்கவும் அவளோ சூடு பட்ட இடத்தில் உடை பட்டு
எரிச்சல் கூடியதில் அவனோடு புறப்பட்டாள்.
“தளிர் வாஷ்ரூம் ரொம்ப தூரம் நீ வர
வரைக்கும் இங்க நேரமில்ல... கையெழுத்து போட்டுட்டு போ..” என்று தீனா சொல்ல,
“நானும் லேகாவும் தான் தளிர் ஃபில் பண்ணி
அட்டாச் பண்ணினோம் எல்லாம் கரெக்ட்டா இருக்கு நீ சைன் பண்ணிட்டா கொடுத்துடுவோம்”
என்றான் சரத் சாதாரண குரலில்.
“ஆமா தளிர் ஏற்கனவே ஒருமுறை கூப்பிட்டாங்க
நாங்க தான் எல்லாரோடதும் ஒண்ணா கொடுக்கணும்னு காத்துட்டு இருந்தோம்.. சரத் ஃபில்
பண்ணினான் நான் வெரிஃபை பண்ணிட்டேன் எல்லாமே சரியா இருக்கு சைன் பண்ணிடு..” என்று
லேகா சொல்லவும் நேரம் போவதை எண்ணி சரத் சொன்ன இடத்தில் கையெழுத்து அவசரமாக
போட்டுவிட்டு வாஷ்ரூம் சென்றிருந்தாள் தளிர்.
நினைவில் இருந்து மீண்டவளுக்கு இப்போது அவன் எப்படி
சட்டபூர்வமாக திருமணத்தை பதிவு செய்திருந்தான் என்பது புரிந்தது. சிறுவயது முதலே
தளிருக்கு பழிவாங்கவோ, காயப்படுத்துவோ தெரியாது.. தனக்கு
பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி கொள்வாள் இல்லை அதிகபட்சமாக அமைதியாக விலகி
சென்றுவிடுவாள்..
இப்போது சரத்தால் அவள் சந்தித்த அவமானத்தை தடுக்க மீனாட்சி
நடத்திய போராட்டத்தை எண்ணி பார்த்தவளின் விழிகளில் வெறுமை படர அவள் இதழ்களில்
கசந்த முறுவல்..!
இனி எதையும் மாற்ற முடியாது ஆனால் அடுத்து என்ன செய்ய
வேண்டும் என்ற முடிவோடு ஓரளவு தன்னை மீட்டுக்கொண்ட தளிரின் மனதை மொத்தமாக
ஆக்கிரமித்து இருந்தது என்னவோ உதயாதித்தன் மட்டுமே..! இப்போது அவளுக்கு நேர்ந்த
அவமானத்தை விட அவனுடையது பன்மடங்கு அதிகமல்லவா..!
எந்த தவறும் செய்யாதவன் மீது எத்தனை எத்தனை அவதூறுகள்
அத்தனையும் தன்னால் தானே என்ற எண்ணமே அவளை கூறு போட கண்ணீரோடு இருந்தவளை கண்டு
சீதா தான் மிகவும் பயந்து போனார்.
மேலும் இரண்டு நாள்கள் கடந்த நிலையில் தளிருக்கு காவல்துறையில்
இருந்து அழைப்பு வர இதையெல்லாம் எதிர்பார்த்திருந்தவள் உடனே கைப்பையை
எடுத்துக்கொண்டு கிளம்பினாள். மகள் தனியே செல்வதை கண்டு பயந்து போன சீதாவை தளிர்
சமாதானபடுத்த, “அக்கா நான் கூட வரேன்” என்ற தங்கையை முறைத்தவள் “அம்மாவை
பார்த்துக்கோ” என்று சொல்லி சென்றாள்.
முதல்முறை காவல்நிலைய படிகளை ஏறிய தளிருக்கு சுற்றி
இருந்தவர்களின் பார்வை அவளை துரத்துவது போலவே இருந்தது. சில பெண் காவலர்கள் ஏளனமாக
அவளை பார்க்க அத்தனையும் நிதானமாக எதிர்கொண்டவள் அவளிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு
பதில் அளித்து தன் தரப்பை எடுத்து வைக்க, அங்கிருந்தவர்களோ சரத்தோடு அவள் சென்ற
வீடியோவை எடுத்து காட்டி,
“ஏம்மா உங்களுக்கெல்லாம் வேலையே இதுதானா..!”
என்று முகசுளிப்போடு கேட்க தளிர் மௌனமாக அமர்ந்திருந்தாள். பின்னே தன்னை
நிருபிப்பதற்கு அவள் வார்த்தைகளை தவிர வேறு எந்த சாட்சியும் ஆதாரமும் தளிரிடம்
இல்லை... ஒருவேளை அன்றே அவள் காவல் நிலையம் சென்று புகார் அளித்திருந்தால் கூட
நம்பியிருப்பார்கள் ஆனால் இத்தனை வருடங்கள் கழித்து இன்று தன்னால் அசையவே
முடியாதளவு சரத் அவளை திட்டமிட்டு பொறியில் சிக்கவைத்திருக்கும் நிலையில் யாருமே
நம்பமாட்டார்கள் என்பது புரிய அமைதி காத்தாள்.
“உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கு ஊர் சுத்த,
செலவு செய்ய, டைம் பாஸ் பண்ண பசங்க வேணும்..
நல்லா வசதியானவனா தேர்ந்தெடுத்து அவனோட நல்லா சுத்திட்டு வீட்ல பார்த்த பையனை
கமுக்கமா கட்டிகிட்டு அவனுக்கு டாட்டா காட்டிடுவீங்க அப்படி தானே..? அந்த பையன் பாவம் இப்பவும் என் பொண்டாட்டியை என்னோட சேர்த்து வைங்கன்னு
தான் கேட்கிறான். ஏம்மா இந்த மாதிரி பசங்க வாழ்க்கையில விளையாடுறீங்க..?” என்று கேட்டவர் அவன் தாலி கட்டிய முறையை பற்றி கண்டுகொள்ளவே இல்லை.
“மேடம் நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க”
“ஏம்மா தெரியாம தாலி கட்டினான்னா அன்னைக்கே
வந்து புகார் கொடுத்திருக்கணும்.. அதை விட்டுட்டு இன்னைக்கு நீ கையும் களவுமா
மாட்டின பிறகு அவன் மேல பழி போட்டு இப்படி தப்பிக்க பார்த்தா என்ன அர்த்தம்..?
பொண்ணுங்க சொன்னா உடனே எதையும் விசாரிக்காம உள்ள தூக்கி
வச்சிடுவோம்னு யார் சொன்னா..? இப்போல்லாம் படிக்கிற வயசுல
பாக்கெட் மணிக்காக பசங்களை யூஸ் பண்ற பொண்ணுங்க தான் அதிகம்.. தேவையான வரை கூட
சுத்தி ஆட்டம் போட்டுட்டு கடைசியில அவங்களை மாட்ட வச்சிட்டு ஒன்னும் தெரியாத
அப்பாவி வேஷம் போட வேண்டியது” என்று கடுப்போடு அவளை பார்த்தவர்,
“நீ சொல்ற கதையை நம்ப நம்ப இங்க யாரும்
இளைச்சவாயங்க கிடையாது... கல்யாணத்துக்கு தயாரா பட்டு கட்டி பூ வச்சு அவனோட
சிரிச்சு பேசிட்டு போயி தாலி வாங்கிட்டு கையெழுத்து போட்டவ இப்ப வந்து எதுவும்
தெரியாதுன்னு நடிக்காத உன்னை மாதிரி எத்தனை பேரை பார்த்திருப்போம்...” என்றவர்
மேலும் பேசிக்கொண்டே செல்ல இதை எல்லாம் எதிர்பார்த்த தளிரின் முகத்தில் உணர்வுகள்
முற்றிலுமாக துடைத்து வைக்கபட்டிருந்தது.
இறுதியாக, “அவன்கூட சுத்தும் போது இனிச்சதா..? அவனை விட பணக்காரனா இன்னொருத்தன் கிடைச்சதும் அவன் கசந்துட்டானா..?
இதோபார் உன்கிட்ட ஃபார்மலிட்டிக்கு கையெழுத்து வாங்கி அனுப்ப சொல்லி
ஏகப்பட்ட ப்ரெஷர்... அந்த பையன் பாவம்டி..! உனக்காக அடி வாங்கி மிதி வாங்கி
ஹாஸ்பிட்டல்ல கிடக்கறான் இனியாவது ஒழுங்கா அவனோட குடும்பம் நடத்துற வழியை பாரு
தேவையில்லாம எங்க உயிரை எடுக்காதீங்க..” என்று சற்று கடுமையாக அவர் பேச மௌனமாக
கையெழுத்து போட்டுகொடுத்த தளிர் வீட்டிற்கு கிளம்பி சென்றாள்.
“என்னா பொண்ணும்மா நீ..! இப்படியா எங்கய்யா
வாழ்க்கையில விளையாடுவ..? அவர் தங்கமான மனசுக்கு உன்னை
மாதிரி சாதாரண குடும்பத்துல இருந்து பெண் எடுத்ததே பெரிய விஷயம் அவருக்கு துரோகம்
பண்ண எப்படிம்மா மனசு வந்துச்சு..?” என்று தாகத்திற்காக
குடிநீர் வாங்க சென்ற இடத்தில் இருந்த பெண்மணி கேட்ட கேள்வியில் தண்ணீர் அமிலமாக
தளிரின் தொண்டை குழிக்குள் இறங்கியது.
நெஞ்சம் கனக்க அவரை பார்த்தவள் முயன்று தன் கண்ணீரை
உள்ளிழுத்து நிதானிக்க, “எங்க சின்ன அய்யாவை எத்தனை பேர் ஏளனமா
பேசுறாங்க தெரியுமா..? அவர் கல்யாணத்துக்காக எங்க
குடும்பத்துக்கே புதுத்துணி எடுத்து கொடுத்து குடும்பத்தோட வரணும்னு சொல்லி
பத்திரிகை வச்சார்.. அதுவும் பெரியாளுங்க சின்ன ஆளுங்கன்னு, வீட்ல
வேலை செய்யற வேலையாளுங்கன்னு எந்த வித்யாசமும் இல்லாம எங்களையும் அவங்க உறவா
நினைச்சு ஒரே மாதிரி பத்திரிகை..”
“ஒரு பத்திரிகை விலையே ஆயிரகணக்குல இருக்கும்,
அந்த மனசு இன்னைக்கு என்ன பாடுபடுதுன்னு உனக்கு தெரியுமா..? எப்படி இருந்த குடும்பத்தை இன்னைக்கு ஹாஸ்பித்திரியே கதியா கிடக்க
வச்சுட்டியே உன் குடும்பத்துக்கு என்ன பாவம் பண்ணார் அவங்களை இப்படி அலைக்கழிக்கிற..?”
என்ற பெண்மணி ஒருகட்டத்தில் கண்ணீரை கட்டுபடுத்த முடியாமல் தேம்பி
அழத்தொடங்கி விட்டார்.
அவர் பல வருடங்களாக அம்பலவாணனின் வீட்டில் வேலை செய்து
வருபவர். தளிருக்கு அவரை அடையாளம் தெரியவில்லை ஆனால் அப்பெண்மணியின் கண்ணீர் அவளை
வெகுவாக தாக்கியது.
தளிர் கிளம்பிய பின்னர் சீதா அரற்றிகொண்டே இருக்க உதய்யை
விட்டால் வேறு மார்க்கம் இல்லாததால் தென்றல் ஒருகட்டத்தில் உதய்க்கு
அழைத்துவிட்டாள். அவன் மருத்துவரை சந்திக்க சென்றிருந்ததால்
அழைப்பை எடுக்காது போனவன் ஒருமணி நேரம் கழித்து தென்றலுக்கு அழைத்து அண்ணாமலை நிலையை
விவரித்து சீதாவின் கண்ணீரை நிறுத்தியிருந்தவன் தளிர் காவல் நிலையம் சென்றிருப்பதை
அறிந்து,
“நான் தான் அங்கிள் கிட்ட பேசியிருந்தேனே
அப்புறம் எப்படி..? என்று நெற்றியை நீவியவன், ப்ச் எதுக்கு அவளை தனியா அனுப்பினீங்க..?” என்று
பல்லை கடித்துக்கொண்டு தளிருக்கு அழைக்க கண்ணீரோடு அவன் அழைப்பை துண்டித்தாள்.
சீதா வாசலிலேயே காத்திருக்க சோர்வோடு வீட்டினுள் நுழைந்த
தளிர் அவர் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அமைதியாக சோபாவில் அமர்ந்தாள்.
சீதா பரிதவிப்போடு மகளையே பார்த்திருக்க, “அக்கா
என்னக்கா கேட்டாங்க நீ என்ன சொன்ன..?” என்று தென்றல் கேட்க
கலங்கிய விழிகளை கடினப்பட்டு அவளிடம் இருந்து மறைத்தவள் மெளனமாக கண்களை மூடி
சாய்ந்து கொண்டாள்.
இடையில் தளிரை எழுப்பி சீதா அவளுக்கு உணவை கொடுக்க அவர் மனம்
நோக கூடாது என்று ஒரு தோசையை மட்டும் உண்டவள் மீண்டும் சோஃபாவில் சரிந்து சுருண்டு
கொண்டாள்.
“அக்கா எனக்கு மேம்மை பார்க்கணும் அக்கா ஒரே
ஒருமுறை காட்டுங்க ப்ளீஸ்” என்று வைஷு கேட்க “அக்கா தூங்கிட்டு இருக்காங்க டா வைஷு
அப்புறமா கால் பண்ணு” என்றாள் தென்றல்.
“ப்ளீஸ் க்கா எனக்கு மேம் பாக்கணும்” என்று
கண்ணீரோடு சொல்லவும்,
“சரி வீடியோ கால் பண்றேன்” என்றவள் வீடியோ
காலில் வைஷுவுக்கு தளிரை காண்பித்தாள்.
“மேம் இப்போ அழுகை நிறுத்திட்டாங்களா க்கா..!
அவங்க எங்க வீட்டுக்கு வரதுக்கு இன்னும் கொஞ்சம் நாள் ஆகும்னு மாமா சொன்னாங்க மேம்
கிட்ட சொல்லிடுறீங்களா..? ஏன் இவ்ளோ சீக்கிரம் தூங்குறாங்க..?
சாப்பிட்டாங்களா இல்லையா?"
"ப்ளீஸ் கொஞ்ச நேரம் அப்படியே காட்டுங்க. எனக்கு அவங்களை பார்த்துட்டே இருக்கணும் போல இருக்கு..” என்ற தன் போக்கில்
பேசிக்கொண்டு சென்ற வைஷுவிற்கு என்ன ஆறுதல் கூறுவது என்று புரியாத தென்றல்
அமைதியாக தளிரை அவளுக்கு காண்பித்து நின்றாள்.
அதே நேரம் வீட்டின் காலிங் பெல் அடிக்க, “யாரோ
கூப்பிடறாங்க வரேன் இரு வைஷு” என்ற தென்றல் சென்று கதவை திறக்க வாசலில் சரத்
நின்றிருந்தான்.
Comments
Post a Comment