“உனக்காகவே வாழ்ந்துட்டு இருக்கேன்னு சொல்றேனே
அப்படி என்னடி இல்ல என்கிட்ட..? என்னை வேண்டாம்னு
தூக்கி போட்டுட்டு இன்னொருத்தனை கட்டிக்க கிளம்பிட்ட..? தெரியாம
தான் கேட்கிறேன் எப்படி தளிர்..? எப்படி..?
உன் புருஷன் நான் இருக்கிறப்போ கண்டவனுக்கு முத்தம் கொடுக்கிற
அசிங்கமா இல்ல உனக்கு! அதுவும் நீ அவனுக்கு தலை துவட்டிவிட்டதை பார்த்து எனக்கு
அப்படியே உடம்பெல்லாம் பத்திகிட்டு வந்தது தெரியுமா..?” என்று
கேட்க மூவருமே அதிர்வோடு அவனை பார்த்தனர்.
பின்னே தளிரின் திருமணம் முடிவானதுமே முக்கிய தருணங்களில்
வேலூருக்கு வருபவன் தளிர் சுஜியின் வீட்டுக்கு சென்றதில் இருந்து அவளை தொடர்ந்து
கண்காணித்து வருகிறான். கொரொனோ பாதிப்பால் இன்னுமே பலர் பொது இடங்களுக்கு மாஸ்க்
போட்டுக்கொண்டு சுற்றுவதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டவன் ரிசப்ஷனில்
அவர்களுக்கு முன்பாகவே ஆஜாராகிவிட்டான்.
நலங்கு முடிந்ததும் கிளம்பியவன் திருமண மண்டபத்தின் அருகில்
இருந்த ஹோட்டலில் மணமகள் அறையை பார்த்தவண்ணம் ரூம் எடுத்திருக்க, தளிர்
மாடிக்கு செல்வதை கண்டு அவனுமே அவளை பின்தொடர்ந்திருந்து ஹோட்டல் மாடிக்கு
சென்றிருந்தான்.
“ஏன் இவ்ளோ ஷாக்காகற..? என்கிட்டே
இல்லாதது அப்படி என்ன அவன்கிட்ட இருக்குன்னு நீ அவனை கட்டிக்க ஒத்துக்கிட்ட..?
உன்னோட அழகுக்கும் அறிவுக்கும் அவன் பொருத்தமே இல்ல தளிர் அதைவிடு
என்கிட்ட இல்லாத பணமா அவன்கிட்ட இருந்திட போகுது.. அவனை விட பத்து மடங்கு சொத்து
என்கிட்டே இருக்கு அப்படி இருந்தும் உனக்கு ஏன் என்னை பிடிக்காமல் போச்சு..?
உனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது, பிடிச்ச
சாப்பாடுல இருந்து உனக்கு எது சந்தோஷம் தரும், எது உன்னை
கோபப்படுத்தும்னு உன்னை பற்றி ஆதியந்தமா புரிஞ்சு
வச்சிருக்கவன் நான் அவனுக்கு உன்னை பற்றி என்ன தெரியும்..?” என்று
கேட்க தளிருக்கு வார்த்தை எழவில்லை.
பின்னே சிறுவயது முதலே தளிரோடு பழகி வருபவனுக்கு அவள்
விருப்பு வெறுப்பில் இருந்து அத்தனையும் அத்துபடி... அவளை ஆதியந்தமாக
அறிந்திருப்பவனுக்கு தளிரின் பிடிவாதம் குறித்தும் நன்கு தெரியும்... அவள்
முடிவுகளை அத்தனை எளிதாக மாற்றிக்கொள்ளாதவள் அவளாகவே மனம் இறங்கினால் மட்டுமே
உண்டு..!
அதனாலேயே அவள் காலில் விழுந்து கெஞ்சி அவள் மனதை மாற்றும்
முயற்சியில் இறங்கியிருந்தான் ஒருவேளை அவள் மனமிறங்காவிட்டால் அடுத்து என்ன
செய்வது என்றும் திட்டமிட்டு வைத்திருந்தான். நடந்ததை வீட்டில் சொன்னாலும்
சீதாவும் மீனாக்ஷியும் தன்னோட வாழ சொல்லி வலியுறுத்துவார்கள் என்று நம்பியிருந்தவனுக்கு
மீனாக்ஷி செய்தவை அனைத்துமே அதிர்ச்சி தான்.
ஒருவேளை ரகுபதி இருந்திருந்தால் கூட அன்று தளிரை போக விடாது
கடத்தி சென்றிருப்பான். ஆனால் தலைவன் இல்லாத வீடு, மூன்று பெண்கள் என்ன
செய்துவிட முடியும்..? என்ற அலட்சியமே தளிரை விட்டுபிடிக்க
செய்திருந்தது.
“உனக்காக நான் எதையும் செய்ய காத்திருக்கும் போது அவன் உனக்கு
வேண்டாம் தளிர்... கொஞ்சமும் டீசன்சி இல்லாம அடுத்தவன் பொண்டாட்டிக்கு முத்தம்
கொடுக்கறான், உனக்கு இதெல்லாம் பிடிக்காது தானே அப்புறம்
ஏன் அமைதியாவே நின்னுட்டு இருந்த..? அன்னைக்கு என்னை அடிச்ச
மாதிரி அவனையும் செருப்பால அடிச்சிருக்கலாம் இல்ல.. சரியான அலைஞ்சான்..” என்ற நொடி அவனை ஓங்கி அறைந்த தளிர்..,
“ராஸ்கல் யாரை என்ன பேசுற..? இன்னொரு வார்த்தை அவரை பேசின கொன்னுடுவேன்டா..” என்று ஆவேசமாக எழுந்த
தளிர் இருக்கன்னங்களிலும் அவனை கை வலிக்கும் வரை அறைந்திட தடுக்காமல்
வாங்கிக்கொண்டவன் அவள் அடித்த கன்னத்தை தடவிக்கொண்டே,
“இதுதான் தளிர் உனக்கு என்மேல இருக்கிற இந்த
உரிமை தான் எனக்கு ரொம்ப பிடிச்சதே..! இதோ இது நம்ம வீடு இவங்க என் அத்தை, இது என் மச்சினிச்சி இவங்க முன்னாடி என்னை நீ அடிக்கலாம், உதைக்கலாம், கொஞ்சலாம் ஆனா குமார்..?” என்று சிவந்த விழிகளோடு தளிரை பார்த்தவன்,
“என்கிட்டே கைகட்டி சம்பளம் வாங்கறவன் தளிர்
ஆனா அவன் முன்னாடி என்னை அடிக்கும் முன்ன யோசிக்க மாட்டியா..?” என்று கேட்க தன் உணர்வுகளை கட்டுபடுத்திக்கொண்டு அவனை பார்த்தாள் தளிர்.
“குமார் அவன் பொண்டாட்டிய ஸ்கூல் படிக்கும்போதே
தாலி கட்டி தூக்கி இருக்கான் இப்போ அவங்களுக்கு மூணு பசங்களாம் ஒரு டிரைவரோட காதலை
புரிஞ்சுகிட்டு அவன் பொண்டாட்டி சந்தோஷமா வாழுறானா உனக்கு ஏன் என் காதல் புரியலை..?” என்று
பிதற்றிக்கொண்டே சென்றான்.
*********************
தென்றல் மூலமாக தளிர் காவல் நிலையம் சென்றிருப்பதை அறிந்த
உதய் உடனே நண்பனுக்கு தான் அழைத்தான். ஆனால் ராகவன் எடுக்காது போகவும் நிவேதாவிற்கு
அழைத்தவன் ராகவன் வந்ததும் அவனை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வரசொல்லி ஆணையிட
உதய்யின் குரலில் இருந்த அழுத்தத்தில் கணவன் வந்ததும் குழந்தையை மாமியாரிடம்
விட்டுவிட்டு உடனே கிளம்பியிருந்தாள் நிவேதா.
அடுத்து உதய் தளிருக்கு அழைக்க தண்ணீர் வாங்கியவள் அழைப்பை
துண்டித்தாள்... மீண்டும் தளிருக்கு உதய் அழைக்க சிலநொடிகள் கைபேசியை வெறித்தவள்
மீண்டும் அழைப்பை துண்டித்து அவளிடம் பேசிய பெண்மணியின் கண்ணீரில் வெதும்பியவள்
நாசி விடைக்க இம்முறை வாட்ஸப்பில்
‘எதுக்குடி கால் கட் பண்ற..? மரியாதையா
அட்டென்ட் பண்ணு’ என்ற உதய்யின் வாயிஸ் நோட் கேட்டதில் இமைமீற
துடித்த கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டே உதய் எண்ணை ப்ளாக்கில்
போட்டுவிட்டாள் தளிர்.
ராகவனை காரிடாரின் கோடிக்கு அழைத்து சென்ற உதய் “நான்
உன்கிட்ட என்ன சொல்லியிருந்தேன் நீ என்னடா செஞ்சு வச்சிருக்க.. இப்போ அவ தனியா
போலீஸ் ஸ்டேஷன் போயிருக்கா ஒரு வேலையை உருப்படியா செய்ய மாட்டியா..?” என்று நண்பனை
அடிக்குரலில் கடிய, எதுவும் புரியாத நிவி,
“அண்ணா என்னன்னா ஆச்சு..? யார் போலீஸ் ஸ்டேஷன் போனா ஏன் உங்களுக்கு இவ்ளோ கோபம்..?” என்றவள் “நீங்க என்ன செய்தீங்க..?” என்றாள் கணவனிடம்.
“மச்சான் நீ சொன்னமாதிரி எங்க வீட்டுக்கு
கூட்டிட்டு போறேன் சொன்ன எதையும் ஏத்துக்கிற நிலைமையில் தளிர் இல்லடா..”
“எதையுமா..? என்னடா
சொல்ற..?” என்றவனின் புருவம் நெறிபட, விழிகள்
இடுங்கியது.
“எதையுமே தான்..! என் வீட்டுக்கு வரமாட்டேன்
சொன்னதுல இருந்து நானும் போலிஸ் ஸ்டேஷன் வரேன் சொன்ன வரை எதையும் ஏத்துக்கலை நானே
பார்த்துக்கறேன் சொல்லறப்போ நான் என்னடா செய்ய முடியும்....” என்று ராகவன் சொல்லி
முடிக்க உதய்யிடம் அத்தனை சீற்றம்.
“ஏன்டா இதை எல்லாம் என்கிட்டே முன்னாடியே
சொல்லலை” என்ற உதய் தென்றலிடம் பேசுவதற்கு முன்பு வரை அவர்கள் ராகவனின் வீட்டில்
பாதுகாப்பாக இருக்கின்றனர் என்றே நம்பியிருந்தான்.. ஆனால் முதல் நாளே தளிர் தன்
வீட்டிற்கு சென்றதே அவனுக்கு இப்போது தான் தெரியும்.
“அவ சொன்னா உனக்கு எங்கடா போச்சு புத்தி..!
நான் சொன்னதை செய்ய வேண்டியது தானே.. சொன்னதையும் செய்யலை, செய்ததையும்
என்கிட்டே சொல்லலை என்னடா நினைச்சுட்டு இருக்க..?” என்று
உதய் குரல் உயர்த்த,
“அண்ணா ஏன் டென்ஷனாகறீங்க..? மெதுவா பேசுங்க இது ஹாஸ்பிட்டல்” என்ற நிவியை அமைதியாக இருக்க சொன்ன
ராகவன்,
“மச்சான் சொல்ல கூடாதுன்னு இல்லடா ஏற்கனவே
தாத்தா இப்படி இருக்கப்போ இதையெல்லாம் சொல்லி உன்னை இன்னும் டென்ஷனாக்க வேண்டாம்
நானே சமாதானபடுத்திடலாம்னு நினைச்சேன் ஆனா தளிர்...” என்று ராகவன் தயக்கத்தோடு
நிறுத்த..,
“என்னடா ஆனா, ப்ச் எனக்கு
புரியற மாதிரி சொல்லி தொலை” என்று சீறினான்.
“தளிர் எங்க வீட்டுல இருக்கிறதுக்கு
ஒத்துக்கலை. என்னோட பிரச்னையை நானே பார்த்துக்கறேன் இனியும் என்னால் உங்களுக்கு
அவமானம் வேண்டாம், தேவையில்லாம ஏற்கனவே உங்களையும் சேர்த்து
கஷ்டப்படுத்திட்ட குற்ற உணர்ச்சியே போதும் இனியும் தொந்தரவு கொடுக்க விரும்பலைன்னு
சொல்லிடுச்சு”
“ஆனா அப்படியே விடவும் எனக்கு மனசில்ல, அதுதான் அவங்களுக்கு பாதுகாப்பு இருக்கட்டும்னு இரண்டு நாளா நம்ம பசங்களை
காவலுக்கு வச்சிருந்தேன் இன்னைக்கு அவங்களை விசாரிச்சுட்டு இருந்தப்போ வெளியில
வந்த தளிர் என்னை பார்த்துட்டு கேட்கவும் நான் உண்மையை சொல்லிட்டேன்.. ஆனா
திரும்பவும் தன்னால யாருக்கும் கஷ்டம் வேண்டாம்னு தளிர் கையெடுத்து கும்பிடவும்
வேற வழியில்லாம பசங்களை அனுப்பிட்டு நான் போலீஸ் ஸ்டேஷன்க்கு கூட வரேன்
சொன்னேன்..”
“ஆனா அவ தனியா போனதா தானே ப்ரீஸீ சொன்னா..?”
“ப்ச் நான் எவ்ளோ எடுத்து சொல்லியும் எதையும்
கேட்காம நானே பார்த்துக்கறேன்னு சொல்லி கிளம்பியாச்சுடா.. உனக்கு தகவல்
சொல்லிடலாம்னு கூப்பிட்டா உடனே உன்னை ரீச் பண்ண முடியலை, சைட்ல
இருந்து கால் வந்துட்டே இருக்கவும் வந்து பேசிக்கலாம்னு கிளம்பிட்டேன்” என்று ராகவன்
சொல்லி முடிக்க கண்களை இறுக மூடிதிறந்த உதய்..,
“உண்மையை சொல்லு இது மட்டும் தான் சொன்னாளா
இல்ல வேறே என்ன சொன்னா..? இப்பவரை என் கால் அட்டென்ட் பண்ண
மாட்டேங்கிறா.. மெசேஜ்க்கும் எந்த ரெஸ்பான்ஸ் இல்ல..” என்று உதய் பல்லைகடிக்க..,
“அது... அது வந்து மச்சான்.. இனி தளிர்..”
என்று தயங்கிய ராகவன், “டேய் நீ டென்ஷன் ஆகாம கேளுடா
சொல்றேன்” என்றான் நண்பனின் முகத்தில் குடியிருக்கும் சீற்றத்தை கண்டு.
“சரி சொல்லு”
“இனி தளிரோட விஷயத்துல நீ தலையிடாம உன்னோட
வாழ்க்கையை பார்க்கனுமாம் அதோட வேற நல்ல பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிக்க
சொல்லிடுச்சுடா” என்று சொல்ல தாடை இறுக நின்றிருந்த உதய்யின் கோபம் பன்மடங்கு கூட,
“நான் தளிரை பார்த்துட்டு வரேன் நீங்க
தாத்தாவோட இருங்க” என்றவன் கிளம்ப அங்கே அவசரமாக வந்த செவிலியர் மருத்துவர்
உதயாதித்தனை அழைப்பதாக கூறி கையோடு அழைத்து சென்றார்.
என்னதான் அண்ணாமலை அபாயகட்டத்தை தாண்டி இருந்தாலும் இன்னும்
மருத்துவ உபகரணங்களின் உதவியோடு தான் சுவாசித்து கொண்டிருக்கார்.. அவர் வயதிற்கு சில
மருந்துகள் ஒவ்வாமை ஏற்படுத்த அதற்கேற்றவாறு அவருக்கு அளிக்கும் சிகிச்சையில் புது
சிக்கல்கள் முளைத்தன.
இரண்டாம் முறையாக அவருக்கு ஆபரேஷன் நடத்த வேண்டும் என்று
மருத்துவர் சொன்னதும் உதய் தந்தைக்கு அழைத்து சொல்ல அரண்டு போன அம்பலவாணன்
மீட்டிங்கை ரத்து செய்துவிட்டு உடனே மருத்துவமனைக்கு விரைந்தார்.
உதய் அம்பலவாணனுக்கு இடையில் தந்தை மகன் என்ற உறவை தாண்டி
அழகிய நட்பு உண்டென்றால் அதற்கு நேர்மாறானது அம்பலவாணனுக்கு தன் தந்தையுடனான
உறவு..! அம்பலவாணனுக்கு
தன் தந்தையின் சொல்லே வேதம் பெரும்பாலும் அவர் முடிவை எதிர்த்து செயல்படாத
மனிதருக்கு அண்ணாமலை மீது மரியாதையும் பக்தியும் அதிகம். அவர் வார்த்தைக்கு
மறுவார்த்தை பேசி பழக்கமில்லாதவர் சிறுவயதில் அன்னபூரணி மூலமாக தான் தனக்கு
தேவையான எதையும் தெரிவித்து பெற்றுக்கொள்வது.
அவருக்கு திருமணம் முடிந்த பின்னர் தான் ஓரளவு தானே
அண்ணாமலையிடம் நேரடியாக பேச கற்றுக்கொண்டவர் அப்போதும் கருத்து பேதம் இருந்தால்
அதை அவர் மனம் புண்படுத்தாத வகையில் பேசுபவருக்கு தன் தந்தைக்கும் மகனுக்கு
இடையில் நடந்த வாக்குவாதம் பெரிதும் அதிர்ச்சியடைய செய்திருந்தது.
தளிரை புகைப்படத்தில் பார்த்த அண்ணாமலை அவள் தங்கள் பள்ளியில் பணிபுரிவதை
அறிந்து அங்கு பல வருடங்களாக வேலை பார்த்துக் கொண்டிருப்பவரிடம் தளிரை பற்றி
விசாரிக்கவும் தவறவில்லை.
பள்ளி அலுவலகத்தில் பணிபுரிபவரோ தளிரை வானளவுக்கு புகழ்ந்து
‘இதுவரைக்கும் இப்படி ஒரு டீச்சரை என்னோட சர்வீஸ்ல பார்த்ததே இல்லங்கையா...
சேர்ந்து நாலஞ்சு வருஷம் தான் இருக்கும் ஆனா இதுவரை அவங்களால சின்ன பிரச்சனை கூட
வந்ததில்லை,
கூட வேலை செய்யக்கூடிய டீச்சருங்களுக்கே தளிர் டீச்சரை ரொம்ப
பிடிக்கும் அவங்க குறை பேசாத ஒரே ஆள் இவங்க தான்.. பசங்களை பற்றி சொல்லவே வேண்டாம்
அவங்க தன்னோட கிளாஸ்க்கு வரமாட்டாங்களான்னு எதிர்பார்க்கிறவங்க அதிகம்’ என்று
தளிர் பற்றி சொல்லவும் மனப்பூர்வமாக திருமணத்திற்கு ஒப்புகொண்டிருந்தார்.
தந்தை குறித்த நினைவிலேயே மருத்துவமனை வந்து சேர்ந்த
அம்பலவாணன் மருத்துவரிடம் பேசி சிகிச்சையை உடனே தொடங்க செய்திருந்தார்.
அண்ணாமலையின் சிகிச்சை முடியும் வரை காத்திருந்த உதய் வேகமாக படியிறங்க முயல அவனை தடுத்து
நிறுத்தியது “எங்க போற உதய்..?” என்ற அம்பலவாணனின் குரல்.
“தளிரை பார்த்துட்டு வரேன் ப்பா” என்று சொல்ல
ஜன்னல் வழியே கவிழ்ந்திருந்த இருட்டை பார்த்தவாறே, “இல்ல நீ
போக வேண்டாம்” என்றார்.
“ப்பா..”
“அவசரப்படவேண்டாம் கொஞ்சம் நிதானிக்க
சொல்றேன்... இப்போ இதை பேசக்கூடிய நேரமில்ல அப்பா வீட்டுக்கு வந்த பிறகு
பார்த்துக்கலாம் பொறுமையா இரு” என்று அழுத்தமான குரலில் சொல்ல..,
“என்னப்பா பேசறீங்க..? தாத்தா
முக்கியம் அதேநேரம் இப்போ தளிர் தனியா என்ன செய்வா..? அவரை
டிஸ்சார்ஜ் பண்ண நாளெடுக்கும் இதோ இவனையும் அங்க இருக்க வேண்டாம் சொன்னவ என்
கால்ஸும் அட்டென்ட் பண்ண மாட்டேங்கிறா.. நான் பார்த்துட்டு உடனே வந்துடு...” என்று
ஆற்றாமையோடு பேசிக்கொண்டே சென்றவனை இடைமறித்தவர்,
“போதும் உதய்..! போனது போகட்டும் இனியும்
எதையும் இழக்க நான் தயாரா இல்லை, நீ தளிர் விஷயத்துல
தலையிடறதால இன்னும் நம்ம பெயர் கெடும்.. இனி தளிர் பற்றின பேச்சை எடுக்காம
இருக்கிறது நம்ம குடும்பத்துக்கு நல்லது புரிஞ்சுக்கோ”
“அப்பா இதை லீகலா மூவ் பண்ணி அவளுக்கு டிவோர்ஸ்
வாங்கணும் ப்பா... ஆனா தளிர் எப்படி தனியா..?” என்ற மகனின்
தவிப்பு அவருக்கு புரியாமல் இல்லை ஆனால் இப்போது அனைவரையும் யோசிக்க வேண்டிய
நிலையில் இருப்பவர்,
“நீ சின்ன குழந்தை இல்ல நான் ஒவ்வொன்னும்
உனக்கு சொல்லி புரிய வைக்க.., ஆனா எனக்கு நீ எந்த அளவு
முக்கியமோ அதே அளவு எங்கப்பாவும் முக்கியம்.. என் அப்பாவோட இழப்புக்கு என் மகன்
காரணமாகிட கூடாதுன்னு நினைக்கிறேன் நான் சொல்றது உனக்கு புரியும்னு நம்பறேன்”
என்று கலங்கிய குரலில் சொல்ல உதய்யால் அதற்கு மேல் எதுவும் பேச முடியாது இருதலை
கொள்ளி எறும்பாக தத்தளித்து போனான்.
அடுத்த நாள் காலை மருத்துவரை சந்தித்துவிட்டு வீட்டிற்கு
கிளம்பும் முன், “என் மகன் என்னை மீறி நடக்க மாட்டான்னு நம்பறேன்” என்றவர்
செல்ல கைகள் கட்டப்பட்ட நிலையில் அண்ணாமலையின் அறையின் முன் நின்றிருந்த
உதயாதித்தன் “என்னடி ஆச்சு ஏன் ஃபோனை எடுத்து தொலைய மாட்டேங்கிற..?” என்று வாய்ஸ் நோட் அனுப்பிவிட்டு நண்பனை முறைக்கவும் தவறவில்லை.
Comments
Post a Comment