தீராத காதல் தொல்லையோ - 4.2
மகாலட்சுமி கதிரை அழைத்து கேட்க அவன் இனியும் தங்கையை ஏமாற்ற மனம் இல்லாமல் உண்மையை உடைத்து சொல்லி விட்டான்.
“உனக்கு தெரியாது மகா அம்மா சொன்ன வார்த்தைக்காக எத்தனை கால் பண்ணி இருப்பேன் தெரியுமா? ஒரு ஃபோன் காலை கூட அட்டென்ட் பண்ணவே இல்ல. உனக்காக, குழந்தைகளுக்காக, நீ கண் முழிச்சு பாக்குறப்போ உனக்கு ஏமாற்றம் இருக்கக் கூடாதுன்னு அவனை கையோடு கூட்டிட்டு வந்துடலாம்ன்னு நடுராத்திரி அவங்க வீட்டுக்கும் போனேன் ஆனா யாருமே இல்ல. வீடு பூட்டி இருந்தது..”
“இப்படியும் ஒருத்தன் இருப்பானா? என்று எனக்கு மனசு வெறுத்துப் போச்சு மகா. இவங்க அவன் குழந்தைங்க தானே?! குழந்தைகளை விட பெரிய சொத்து வேற என்ன இருந்திட முடியும்? அதைவிட உன்னோட அருமை அவனுக்கு சுத்தமா தெரியல. இந்த மாதிரி நேரத்துல கூட ஒருத்தன் பொண்டாட்டியை தேடி வரலை அவளோட உணர்வுக்கு மதிப்பு கொடுக்கலைன்னா இதுக்கு மேலயும் அவன் உனக்கு தேவையான நீ முடிவு பண்ணிக்கோ மகா…”
“மத்தவங்களை மாதிரி நான் எந்த சப்பை கட்டும் கட்ட விரும்பல. இதுதான் நிஜம்! என்னைக்கு இருந்தாலும் நீ தெரிஞ்சுக்க வேண்டிய நிஜம். உனக்காக நாங்க இருக்கோம் அவனுக்காக ஏங்கி என் தங்கச்சி பாதிக்கப்படுவதை நான் விரும்பல..”
“வீடு பூட்டி இருந்ததுன்னு சொன்னிங்களே எங்க போயிருக்காங்கன்னு தெரிஞ்சதா அண்ணா?”
“கழுதை கெட்டா குட்டிச் சுவரு!! வேற எங்க போயிருப்பான்? குடும்பத்தோட எல்லாம் பெங்களூருக்கு வேற ஏதாவது முறை செய்ய கிளம்பி இருப்பாங்க அதை பற்றி நமக்கு என்ன?” என்றான் சிவந்த விழிகளோடு.
“கதிர் என்னடா பேசுற அவளை இந்த மாதிரி நேரத்துல உணர்ச்சி வசப்பட வைக்கக் கூடாது..”
“யாரு நானா அந்த வேலையை செய்யறது? உன் அருமை மருமகன் ம்மா. என் தங்கச்சி பாதிக்கப்படக்கூடாதுன்னு தான் அவ கிட்ட பேசிட்டு இருக்கேன்.. இன்னொரு முறை கண்டதையும் பேசி அவ மனசை குழப்பாதீங்க..”
“அத்தை தம்பி சொல்றது ஒரு விதத்துல சரிதான் மகா நம்ம வீட்டுக்கு வந்ததிலிருந்து இன்னிக்கு வரையிலும் அண்ணன் ஒருமுறை கூட வந்து பார்க்கலை. அட்லீஸ்ட் ஒரு ஃபோன் பண்ணியாவது பேசி இருக்கலாம் அதையும் செய்யல குழந்தைகளுக்காக கூட இறங்கி வராதவர் இனியும் வருவார் என்று தோணல மகாவுக்கு இப்போ நிம்மதி முக்கியம்..”
“குழந்தைகளுக்கு மகா முக்கியம். இந்த விஷயத்தை இப்படியே விட்டு விடுவது அவங்களுக்கு நல்லதுன்னு தோணுது. அண்ணனா என்னைக்கு வரணும்னு நினைக்கிறாரோ அப்போ வரட்டும் அன்னைக்கு மகாவோட முடிவு என்னன்னு சொல்லட்டும் அதுவரைக்கும் அவளை யாரும் தொந்தரவு பண்ண வேண்டாமே..” என்றாள் சுமதியும்.
“மகா மாப்பிள்ளைக்கு என்ன சூழலோ..” என்று பாக்கியலட்சுமி ஆரம்பித்தது தான் தாமதம்,
“தயவு செஞ்சு எதையும் பேசாதீங்க ம்மா.. தெளிவான முடிவு எடுத்திருந்தேன் ஆனா டெலிவரி நேர ப்ரெஷர், பயம் எல்லாம் சேர்ந்து என்னை குழப்பிடுச்சுன்னு பார்த்தா அதுக்கு மேல நீங்க என்னை குழப்பிட்டீங்க..” என்றவளிடம் இப்போது கண்ணீர் வற்றி போயிருந்தது. இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற வெறுமையோடு பேச்சை தொடர்ந்தவள்,
“அன்னிக்கு நீங்க சொன்னதெல்லாம் கேட்டு நானும் முட்டாள் மாதிரி அவர் கிட்ட சின்ன கரிசனத்தை எதிர்பார்க்க ஆரம்பிச்சிட்டேன். வேண்டாம், என்னை நானே இனியும் ஏமாத்திக்க தயாராக இல்லை. எனக்கு என் குழந்தைங்க போதும் அவர் எனக்கு தேவையே கிடையாது..”
“இனி இங்கிருந்து யாரும் அவருக்கு ஃபோன் பண்ணவோ அவரை பார்த்து எனக்கு வாழ்க்கை பிச்சை கொடுக்க சொல்லி கெஞ்சவோ கூடாது. உங்களால முடியாதுன்னா சொல்லுங்க உங்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் நான் தனியா வீடு எடுத்து என் குழந்தைகளோடு இருந்துக்கிறேன்..” என்றதில் பாக்கியா பதறி போய் விட்டார்.
“என்ன மகா நாங்க இத்தனை பேர் இருக்கிறப்போ இப்படி பேசுற? நீயும் குழந்தைகளும் என்னைக்குமே எங்களுக்கு பாரமில்லை. அந்த வீட்ல என் மூணு பிள்ளைகளுக்குமே உரிமை இருக்கு..” என்றார் கட்டுபடுத்தபடாத கண்ணீரோடு.
“வேற எப்படி ம்மா பேச சொல்றீங்க? நான் கொஞ்சம் கூட அவருக்கு முக்கியமே இல்லாமல் போயிட்டேன் அதைவிட குழந்தைகள்.. அவங்க பிறந்து முழுசா இரண்டு நாளாச்சு ஆனா இன்னமும் வரலை. ப்ச் இன்னைக்கு நேத்து கிடையாது இத்தனை மாசமும் அவருக்கு அவருடைய ஈகோவும் குடும்பமும் முக்கியமாக இருந்த அளவுக்கு நானும் என் பிள்ளைகளும் இருந்தது கிடையாது..”
“அப்படி இருந்திருந்தா தேடி வந்திருப்பார்.. அட்லீஸ்ட் குழந்தைகளுக்காகவாவது அப்பா மேல இருக்கிற கோபத்தை விட்டு வீடு தேடி வந்திருப்பார். பட் இப்போ வரை வரலையே அவருக்கு அவரோட குடும்பம் முக்கியம்னா எனக்கு என்னோட குழந்தைங்க முக்கியம் என்னோட சுயமரியாதை முக்கியம்..” என்றவள் அதே கோபத்தோடு கைபேசியை வாங்கி கணவன், மாமனார், மாமியார், நாத்தனார் என்று அத்தனை பேரின் என்னையும் பிளாக்கில் போட்டு விட்டாள்.
குழந்தைகளின் முகத்தை பார்க்கும் போதெல்லாம் கணவன் முகம் நினைவு வர அவள் கொண்டிருக்கும் வேதனையை அவள் தான் அறிவாள்.
“என்னமோ விவாகரத்துக்கு அவசரப்படுவது பற்றி பேசுனியே, அதெல்லாம் மத்தவங்க விஷயத்தில் பொருத்தமா இருக்கலாம் ஆனா எங்க விஷயத்துக்கு கொஞ்சம் கூட பொருந்தாது. இப்போதைக்கு உங்களுக்கு தெரிய வேண்டான்னு நினைச்சிருந்தேன் ஆனா இனி மறைச்சு உபயோகமில்லை. நிச்சயமா நான் அவரை விவாகரத்து பண்ண தான் போறேன் அதுல எந்த மாற்றமும் இல்லை..”
“இனி எனக்கு அவர் வேண்டாம். இன்னைக்கு மாறிடுவார் நாளைக்கு என்னை புரிஞ்சுப்பார்ந்னு ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து எனக்கு நானே பொய்யான நம்பிக்கையை கொடுத்துட்டு இன்னும் முட்டாளாக விரும்பலை..”
“என்னோட டேட் அவருக்கு நல்லா தெரியும் அதுக்கும் மேல எத்தனை போன் கால் பண்ணி இருப்பேன் அதுக்கும் இதுவரை எந்த ரெஸ்பான்ஸும் இல்லைன்னா என்ன அர்த்தம். அவரை எதிர்பார்த்து ஏமாந்து எதுக்கு கஷ்டப்பட்டுகிட்டு.. இல்லை எதுக்கு எனக்கு இந்த நரக அவஸ்தைன்னு கேட்கிறேன்?!”
“எல்லாருக்கும் எல்லாமே கிடைச்சுடாது. யார் யாருக்கு என்னென்ன கிடைக்கும்னு இருக்கோ அதன் படி தான் அமையும். எனக்கான வாழ்க்கை என் குழந்தைகள் மட்டும் தான்னு ஆண்டவன் எழுதி வச்சிருக்கான் அதை யாரால மாத்திட முடியும்?”
“என்னைக்குமே எடுத்து விடுற பூனை எலி பிடிக்காது. நீங்கள் எல்லாரும் புத்தி சொல்லி கட்டாயப்படுத்தி கூட்டிட்டு வந்து அவரை என்னோட வாழ வைக்க முடியாது. அவருக்கு பிடிச்ச வாழ்க்கையை அவர் வாழட்டும் எனக்கு அதைப் பற்றி கவலையே இல்லை, ஆனா எங்க வாழ்க்கையை எங்களை வாழ விடுங்க ம்மா..”
“எனக்கு நீங்க செய்யகூடிய மிகப்பெரிய உதவி இனி அவரை பற்றி பேசாம இருக்கிறதும் என் முடிவை மாற்ற நினைக்காம இருக்கிறதும் தான். இல்லை முடியாது என்றால் இப்போவே சொல்லிடுங்க எங்க வாழ்க்கையை நாங்க பார்த்துக்கிறோம்..”
“சரி சரி மகா நீ டென்ஷன் ஆகாத. பிள்ளை பெத்த பச்சை உடம்பு அதிகம் அலட்ட கூடாது. இனி நான் எதுவும் பேசல… நிச்சயமா எதுவும் பேச மாட்டேன் எனக்கு நீயும் என் பேரன் பேத்தியும் தான் முக்கியம் உன் வாழ்க்கை நல்லபடியா மாறினா எனக்கு சந்தோஷம் தான் ஆனா இனி உன்னை எந்த விதத்திலும் நான் கட்டாயப்படுத்த மாட்டேன்..” என்று கண்ணீரோடு வாக்கு கொடுத்தார்.
Comments
Post a Comment