தீராத காதல் தொல்லையோ - 4.2
மகாவிடம் விடைபெற்ற ரிஷி அலுவலகத்தில் இருந்து வெளியில் வர அவனுக்கு ராமிடமிருந்து அழைப்பு.
“சொல்லு டா..”
“ரிஷி எங்கடா இருக்க? எவ்ளோ நேரம் கால் பண்றது?”
“இன்டர்வியூக்கு வந்திருக்கேன் மச்சான்.. அதுதான் ஃபோன் சைலென்ட்ல போட்டிருந்தேன்.. ஏழு மிஸ்ட் கால் இருக்கு, சொல்லு என்ன விஷயம்?”
“இன்டர்வியூவா என்னடா சொல்ற? எங்கே? எப்ப?”
“மகாலட்சுமியோட ஆஃபீஸ்ல அப்ளை பண்ணி இருந்தேன். மற்ற ரவுண்ட்ஸ் முடிச்சுட்டு இன்னைக்கு ஃபைனல் இன்டர்வியூ! அதையும் முடிச்சுட்டேன்..”
“டேய், என்னடா இதெல்லாம்? என்கிட்டே சொல்லவே இல்ல. அப்போ இங்க பேப்பர் போட போறியா? ஏன்டா? எதனால இந்த முடிவு?” என்றவனுக்கு ரிஷியின் செயல்கள் ஆச்சரியமாக இருந்தது.
வெளிநாட்டில் இருந்து வந்த பின்னர் முதல் நாள் அலுவலகத்திற்கு வந்து சென்றதோடு சரி ஒரு வாரம் கழித்து அவனை பணியில் சேர சொல்லி இருந்தனர்.
ஆனால் இன்று வரையிலும் ரிஷி பணியில் சேரவில்லை. சிவபாலன் மூலம் ராமுக்கும் மகாலட்சுமியின் முடிவு குறித்து தெரிய வர உடனே நண்பனை காண ஓடி வந்தான்.
ரிஷி முழுதாக உடைந்து உருக்குலைந்து போயிருப்பதை கண்டவன் “இப்படியே இருந்தா எதுவும் மாறாது. முதல்ல நீ ஆஃபீஸ்க்கு வா, உனக்கு சேன்ஜா இருக்கும்..” என்று அழைத்தான்.
ஆனால் ரிஷி அதற்கு சம்மதிக்கவில்லை.
“எதுவுமே நிலை கிடையாது ரிஷி, இந்த சூழலும் மாறும் டா. நீ ஏன் மனச போட்டு குழப்பிக்கிற? அன்னைக்கே மகாலட்சுமிக்கு சொல்லிட்டு ஃபாரின் கிளம்புன்னு சொன்னேன் பட் நீ தான் கேட்கல..”
“உன் ஆக்ஸிடென்ட் தொடங்கி, சிந்து விஷயம், ஃபாரீன் ட்ரிப் எல்லாமே மகாவுக்கும் பெரிய அதிர்ச்சியா இருக்கும். அதை ஏத்துக்க கொஞ்சம் நேரம் எடுக்கும், அதனால இப்படியே இருந்து உன்னை நீயே கஷ்டப்படுத்திக்காத…”
“உன்னோட குற்ற உணர்ச்சியே உன்னை அரித்து தின்னுடும் ரிஷி, சொன்னா கேளுடா..” என்றவன் பேச்சு எதுவுமே அவனிடம் எடுப்படாததில் அவனுக்கு ஒரு மாதம் மெடிக்கல் லீவ் கொடுத்து இருந்தான் ராம்.
“எந்த நம்பிக்கையில் இதை செய்ற? நான் தான் வாழவே பிடிக்கலைன்னு சொல்லிட்டு இருக்கேனே மச்சான். உனக்கு புரியலையா?”
“வாயை மூடுடா! விரக்தியில கண்டதையும் பேசாத, இப்போதைக்கு நான் லாங் லீவ் கொடுத்து வைக்கிறேன், ஒழுங்கு மரியாதையா வந்து ஜாயின் பண்ற வழிய பாரு..”
“ராம்!!”
“இப்போ உனக்கு கிடைச்சிருக்கிற ஹைக், ப்ரமோஷன், உன்னோட டெஸிகனேஷன் எதுவுமே சுலபமா கிடைச்சுடலை. இதை உதறினா திரும்ப இந்த பொசிஷனுக்கு வர எத்தனை வருஷம் ஆகும்னு தெரியாதாடா உனக்கு?! முட்டாள்தனமா மிஸ் பண்ணிட்டாத..” என்றதில் கசந்த புன்னகை ரிஷியிடம்.
“வாழ்க்கையையே மிஸ் பண்ணிட்டேன் இதெல்லாம் பெருசாடா?!..”
“புரியுது மச்சான், ஆனா மனசு ஒரு நிலையில் இல்லாத போது எந்த முடிவும் எடுக்காத அது சரியா இருக்காது..” என்று அவனை தேற்றி இருந்தான்.
ஆனால் இப்படி ரிஷி வேறு கம்பெனிக்கு அப்ளை செய்வான் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.
“சொல்லுடா, ஏன் இந்த முடிவு? எப்போ எடுத்த?” என்றவனிடம் காரணத்தை சொன்னான்.
“ஆர் யூ ஷூர்? ரிசல்ட் என்னாச்சு?”
“லச்சு ஒத்துக்கலை, ஆனாலும் அவளுக்காக கேண்டீன்ல கூட ஜாயின் பண்ணுவேன்னு சொல்லி இருக்கேன்..”
“என்னடா சொல்ற?”
“எனக்கு என் பொண்டாட்டியோடு இருக்கணும் மச்சான். அவளுக்காக அவளோடு நான் இருந்தாகணும், அதற்கு எனக்கு வேற வழி தெரியலை. பார்க்கலாம் ஃபார்மல் ரிசல்ட் நாளைக்கு தெரிஞ்சுடும்..” என்றான் நம்பிக்கையோடு.
“அப்போ இங்கே பேப்பர் போட போறியா?”
“இன்னும் போடல, லச்சு முடிவு என்னன்னு பார்த்துட்டு தான் போடணும்.. நீ சொன்ன வேலை, சம்பாத்தியம், டெசிக்னேஷன், ஹைக் இதெல்லாம் விட லச்சு தான் எனக்கு பெருசு!” என்றான் நெகிழ்வோடு.
நண்பனின் மனம் புரிந்தவன், “சரி உன் மனசு போல செய்!! நாளைக்கு என் பையனுடைய பர்த்டே ஃபங்க்ஷன் இருக்குன்னு சொன்னேனே ஞாபகம் இருக்கா?”
“இருக்குடா..”
“இன்னும் அரேஞ்ச்மெண்ட்ஸ் முழுசா முடியலை.. நீ ஃப்ரீயா இருந்தா எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா?”
“என்னடா இப்படி கேட்டுட்ட? உனக்கு செய்யாம வேற யாருக்கு செய்யப் போறேன்?! இதோ நான் இப்பவே வரேன்..” என்றவன் உடனே ராமின் வீட்டிற்கு சென்றான்.
அவன் வீட்டிலிருந்து இரண்டு தெருக்கள் தள்ளி தான் இந்திரா குடி வைக்கப்பட்டிருந்தார்.
என்ன தான் ரிஷி தந்தையின் முடிவை மதித்து அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டாலும் இந்திராவை அப்படியே அனாதரவாக விடுவதற்கு அவன் மனம் இடமளிக்கவில்லை.
“ஏன் அவ பொண்ணு வீட்ல போய் இருக்கட்டுமே இல்லை அவ அம்மா வீட்டுக்கு போகட்டும். நீ ஏன்டா அவளுக்காக இவ்ளோ மெனக்கெடுற?!..” என்றார் சிவபாலன்.
“தப்பு பண்ணாத மனுஷங்க இல்லை ப்பா. எனக்கு அவங்க செய்தது ரொம்பவே பெரிய துரோகம், நான் இல்லைன்னு சொல்லலை ஆனா அம்மாவை எப்படிப்பா நடுத்தெருவில் விட முடியும்?! இனியும் அவங்க நம்ம வீட்ல இருந்தா என் வாழ்க்கை தழைக்காது..”
“நான் மறுக்கலை, அதுக்காக குப்பை மாதிரி வீசிடக்கூடிய உறவு கிடையாது.. யார் என்ன சொன்னாலும் அவங்க என் அம்மா ப்பா!! அந்த உறவுக்கு உண்டான மரியாதையை கொஞ்சமாவது கொடுக்கணுமா இல்லையா?!”
“நீ சொல்றது சரி ஆனா அவளுக்கு அந்த மரியாதை தெரியலையே ரிஷி.. லட்சுமியை என்ன பேச்சு பேசினான்னு பார்த்த தானே?!”
“ஆமா ப்பா இன்னுமே அவங்க மாறலை எனக்கும் புரியுது. ஆனா நானும் என் பொண்டாட்டியோட உறவுக்கு உண்டான மரியாதை தெரியாம தானேப்பா இத்தனை நாள் இருந்துட்டேன். அப்போ அவ எனக்கு கொடுத்த தண்டனை சரிதானே!! பிறகு ஏன் என்னை மட்டும் அவளோடு சேர்த்து வைக்க நீங்க இந்த பாடு படறீங்க?” என்று கேட்க அவரால் பதிலளிக்க முடியவில்லை.
“மகாவோட பார்வையில மட்டுமில்லை நீங்க ஏத்துக்காம போனாலும் நிதர்சனத்துல கர்ப்பிணி பொண்டாடியோடு துணை இல்லாம போன நான் ரொம்பவே மோசமானவன். ஆனா அதுக்காக நீங்க என்னை தூக்கி எறிஞ்சிட்டீங்களா என்ன?”
“ரிஷி!!”
“உங்க பிள்ளை என்பதால என்னுடைய தப்பை மன்னிச்சு உங்களால என்னை ஏத்துக்க முடியும் போது, என்னால அவங்களை அம்போன்னு எக்கேடோ கெட்டு போகட்டும்னு விட முடியல…”
“நிச்சயமா இனி இங்க இருந்தா என்னோட நிம்மதி மட்டுமல்ல உங்களோட நிம்மதியும் போயிடும். அது புரிஞ்சதால தான் நீங்க சொன்ன எல்லாத்துக்குமே நான் சம்மதிச்சேன். ஆனா இது மட்டும் என்னோட திருப்திக்காக…” என்றான்.
“அம்மாவும் மகளும் கூட்டு களவாணிகள் ரிஷி, இப்போ வரையிலுமே அவங்க தப்பை உணர்ந்து திருந்தவே இல்ல டா. அவங்களுக்கு அய்யோன்னு பார்த்தா கையோடு சுத்திக்கும். அப்புறம் ஏன் ரிஷி நீ இப்படி?!”
“அப்பா இப்போ நான் திருந்தி நல்லவனாகி இருக்கலாம் ஆனா நானும் அந்த கூட்டத்தில் ஒருத்தனா தான் இத்தனை நாள் இருந்தேன். அவங்க கேட்கிற பணத்தை கொடுத்துடலாம் அவங்க வாழ்க்கையை அவங்க பார்த்துக்கட்டும், என்னை நிம்மதியா இருக்க விட்டா போதும்..” என்றவன் இந்திரா தங்குவதற்கான ஏற்பாடும் செய்திருந்தான்.
ரிஷி மற்றும் ராம் இருக்கும் ஏரியா வெவ்வேறானது. ரிஷிக்கு தான் அலுவலகம் பக்கம் ஆனால் அவனுக்கு குறைந்தது இரண்டு மணி நேரம் ஆகும்.
அன்று ராம் அழைத்து வந்த போது இந்திரா மிகவும் மனம் தளர்த்து போயிருந்தார். தன் வாழ்வில் இப்படி ஒரு திருப்பம் நிகழும் என்று அவர் நினைத்து கூட பார்க்கவில்லை.
அதைவிட தன் மீது உயிராக இருக்கும் மகன் தன்னை மன்னித்து சேர்த்துக் கொள்வான், சிவபாலன் எத்தனை ஒதுக்க முயன்றாலும் தனக்கு துணை இருப்பான் என்ற பெரும் நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும் கிளம்பி வந்தவரின் எண்ணத்தில் மண்ணை அள்ளி கொட்டி இருந்தான் ரிஷி.
தனக்கு ஒன்று என்றால் துடிதுடித்துப் போகும் மகனின் ஒதுக்கம் அவனது விட்டேர்த்தியான பேச்சு, உடல் மொழி அனைத்தும் ரிஷியின் புதிய பரிமாணத்தை அவருக்கு உணர்த்தியது.
ஒன்றரை வருடத்திற்கும் மேலாக தன்னை ஒதுக்கி வைத்திருந்த சிவபாலன் நிச்சயம் தன்னை சேர்த்துக் கொள்ள மாட்டார் என்று அவருக்கு தெரியும். அதனால் அவர் மலை போல நம்பி இருந்தது தன் மகனை தான்!!
அவனும் கைவிட்ட நிலையில் நிச்சயம் பிறந்த வீட்டிற்கு செல்ல முடியாது, அதேநேரம் மகளைத் தவிர்த்து அவருக்கு வேறு ஆதரவு கிடையாது. ஆனால் அங்கு சென்றால் எந்த அளவுக்கு தான் கீழ்தரமாக நடத்தப்படுவோம் என்பதை பட்டு தெரிந்து கொண்டிருப்பவர் இன்னொரு முறை அது போன்ற ஆபத்தில் சிக்க விரும்பவில்லை.
தன்னைவிட மகாலட்சுமி அவர்களுக்கு முக்கியமாக இருப்பது இந்திராவிற்கு ஆத்திரத்தை உண்டாக்கினாலும் இப்போது வாழ்வதற்கு அவர்கள் சொல்வதை கேட்பதை தவிர்த்து வேறு வழி இல்லை என்பதால் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்.
ராம் அவரை கொண்டு வந்து வைத்தது ஒண்டு குடித்தனத்தில்.
அந்த காம்ப்ளக்ஸில் கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தது. ஒரு சிறிய சமையலறை வரவேற்பறை படுக்கை அறைக்கே மாத வாடகை ஏழாயிரம் ரூபாய்.
பொதுவாக பத்து மாத வாடகையை அட்வான்ஸாக பெற்றுக் கொள்வார்கள் ஆனால் ராம் அந்த வீட்டு ஓனருக்கு நன்கு பரிச்சயமானவன் என்பதால் ஏழு மாத வாடகையை அட்வான்ஸ் ஆக பெற்றுக் கொண்டு சாவியை கொடுத்திருந்தார்.
கண்ணீரோடு வீட்டிற்குள் வந்த இந்திராவிற்கு ‘அடுத்து என்ன செய்வது’ என்று புரியாத நிலை.
அவரை பார்த்திருந்த ராமிற்கு “ராம் இப்போ அவளுக்கு இந்த மரியாதை கொடுக்கிறது கூட என் பையனுக்காக தான்!! ஆனா தப்பி தவறி கூட அவளோடு நீ அதிகமா உறவாடிடாத, அப்புறம் உன் குடும்பம் உனக்கு இல்லை..” என்று சிவபாலன் சொன்ன வார்த்தைகள் மனதை ஆக்கிரமித்தது.
அதிர்ந்த ராம், “என்னப்பா பேசறீங்க?!” என்றான்.
“அவளோடு இத்தனை வருஷம் வாழ்ந்த எனக்கு தான் தெரியும். என் பையன் வாழ்க்கையை காப்பாற்றும் முயற்சியில் உன் வாழ்க்கை பாதிக்க படக்கூடாது ராம்…”
“புரியுது ப்பா..” என்றவனுமே ரிஷி மருத்துவமனையில் இருந்த போது இந்திரா மற்றும் வனிதாவின் குணத்தை நேரில் பார்த்திருக்கிறானே!!
nice
ReplyDelete