தீராத காதல் தொல்லையோ - 4.2
“நான் இப்பவே சொல்லிடுறேன், அவளை கொண்டு போய் வீட்டில் விட்டு விட்டு திரும்பி பார்க்காம கிளம்பிடு, அதுதான் உனக்கு நல்லது.. எக்காரணம் கொண்டும் உன் வீட்டுக்கு கூட்டிட்டி போறதோ நீ போய் பார்க்கிறதோ வேண்டாம்..” என்று சிவபாலன் தெளிவாக சொல்லி இருந்தார்.
அதனால் அவர் சொன்னது போல அவன் இருப்பிடம், குடும்பம் பற்றி எதுவும் பேசாமல் இந்திராவிடம் சாவியை கொடுத்தான்.
ஆனாலும் கண்ணீரோடு ஓய்ந்து போயிருந்த இந்திராவின் தோற்றத்தை கண்ட பின்னர் அப்படியே விட்டு செல்ல அவன் மனம் ஒப்புக்கொள்ளவில்லை.
“ம்மா ஏதாவது வேணும் என்றால் பக்கத்து தெருவுல ஒரு கடை இருக்கு. கொஞ்சம் கம்மி விலையில் பாத்திரம், பொருட்கள், மளிகை எல்லாமே கிடைக்கும் வாங்கிக்கோங்க…” என்றவன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் கிளம்பி விட தளர்ந்து போய் தரையில் அமர்ந்தார் இந்திரா.
அண்ணன் தம்பி என்று பெரிய குடும்பத்தில் பிறந்த இந்திராவால் பொதுவாகவே தனியாக இருக்க முடியாது. சிலர் தனிமை விரும்பியாக இருப்பார்கள், யாரின் துணையும் இல்லாமல் தனித்து இருக்க பழகி இருப்பார்கள். அவர்களுக்கு தனித்திருப்பதும், தனிமையை கையாள்வதும் எளிது!!
ஆனால் இந்திரா அப்படி இல்லை, அவருக்கு நிச்சயம் துணை வேண்டும். எப்போதும் வீட்டில் ஆள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அதனாலேயே ரிஷி தொடக்கத்தில் கிடைத்த ஆன்சைட் ஆஃபரை எல்லாம் தவிர்த்து வந்தான்.
இப்போது பேச்சு துணைக்கு கூட யாரும் இல்லாமல் புது வீட்டில் வெறுமையான மனதோடு அமர்ந்திருந்தவரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.
புதிதாக குடி வந்தவரை தேடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை பற்றி விசாரிக்க உண்மையை முழுமையாக அவரால் சொல்ல முடியவில்லை.
மகன் வெளிநாட்டிற்கு சென்ற பின்னர் மருமகள் வீட்டை விட்டு துரத்தி விட்டாள், கணவர் இருந்தும் இல்லாத நிலை. அதை பற்றி கேட்க வேண்டாம் இப்போது யாரும் ஆதரவிற்கு இல்லை என்று அவருக்கு சாதகமாக சொல்லி அவர்களின் அனுதாபத்தை தேடிக்கொண்டார்.
“எந்த பொருளும் இல்லையா இந்திரா?..” என்று ஒருவர் அக்கறையாக விசாரிக்க,
“இல்லை என் அம்மா வீட்ல கொடுத்த சீரை கூட எடுக்க விடாம தொரத்திட்டா, எனக்கு இந்த ஏரியா புதுசு உதவி பண்றீங்களா?” என்று இரண்டு பெண்மணிகளின் துணையோடு வீட்டிற்கு தேவையானதை வாங்கிக் கொண்டார்.
காம்ப்ளெக்ஸில் இருந்த ஓரிருவரோடு கதை பேசி விட்டு, இரவு ஹோட்டலில் வாங்கி வந்த இட்லியை சாப்பிட்டு முடித்து அறைக்கு திரும்பியவருக்கு இரவும் இருட்டும் அச்சுறுத்தியது.
கண்களை இறுக மூடி படுத்தவரால் சுத்தமாக உறங்க முடியவில்லை.
இன்னும் ஃபேன் பிக்ஸ் செய்யாததில் ஜன்னலை திறந்து வைத்து அருகிலேயே படுத்தவர் மனதில் ஏதேதோ எண்ணங்களின் ஊர்வலம், உடன் கண்ணீரும்!
நிச்சயம் மீதம் இருக்கும் பணத்தை கொண்டு ஒரு சில மாதங்களை ஓட்ட முடியும் என்றாலும் அதன் பிறகு உணவிற்கு என்ன செய்வது? என்று புரியாத நிலை.
அப்போது தான் “உன் மகள் வீட்டில் செய்ததை மற்றவர் வீட்டில் செய்து பிழைத்துக் கொள்” என்று சிவபாலன் சொன்னது நினைவுக்கு வந்தது.
விடிய விடிய சில நிமிடங்கள் தன்னை மீறி அசந்து கண்களை மூடுவதும் விழிப்பதுமாக இருந்தவர் ஒருவழியாக விடிந்ததும் பக்கத்து வீட்டு பெண்மணியிடம் ‘ஏதாவது வேலை கிடைக்குமா?’ என்று விசாரித்தார்.
அவர் ஒரு விதவை. பிள்ளைகள் கைவிட்ட நிலையில் தனியாக வசித்து வருபவர் அபார்ட்மெண்ட்களில் வசிக்கும் பலருக்கு வீட்டு வேலை செய்து தன் வாழ்வை ஓட்டிக்கொண்டு இருப்பவர்.
இந்திரா கேட்கவும், ‘கேட்டு சொல்கிறேன்..’ என்று சொல்லி இருந்தார்.
வீட்டிற்கு திரும்பி குளித்துவிட்டு வந்தவருக்கு வனிதாவிடம் இருந்து அழைப்பு. ‘எடுப்பதா வேண்டாமா?!’ என்று இரட்டை மனநிலையில் இருந்தவர் மதியம் வரையிலும் அவள் அழைப்புகளை ஏற்கவில்லை.
மாலை மீண்டும் அவள் அழைக்க ஏற்றார். கண்ணீரும் கதறலுமாக மகள் ஓடி சென்று விட்டதை பற்றி சொன்ன வனிதா,
“என் பொண்ணு எங்க போனான்னே தெரியலை ம்மா. எல்லாரும் என் வளர்ப்பை குறை சொல்றாங்க உங்களை நம்பி அனுப்பின என் நிலைமையை பார்த்தியா?..” என்று சொல்ல அவருக்கு குற்ற உணர்வு அதிகரித்தது.
“எனக்குன்னு யாரு இருக்கா?” என்று அவள் ஒப்பாரி வைக்க மனம் கேளாமல் பெங்களூருக்கு கிளம்பி சென்றார். அங்கே நிலவரத்தை தெரிந்து கொண்டவர் கையோடு கொண்டு சென்ற இருபதாயிரத்தை மகளிடம் கொடுத்தார்.
“ஏது உனக்கு இவ்ளோ பணம்?” என்று கேட்கவும் வீட்டில் நடந்ததை சொன்னவர் தன் நிலையையும் கண்ணீரோடு சொல்லி முடித்தார்.
“என் நம்பரை யாருமே எடுக்கலை. என்னை மொத்தமா தலை முழுகிட்டாங்க. இதுக்கு காரணம் அவ தான்!!” என்று மகாவை கரித்து கொட்டியவள்,
“சிந்து கிடைக்கிற வரைக்குமாவது இங்க இரு ம்மா..” என்றாள்.
மனம் கேளாத இந்திரா மகளுக்காக இரண்டு நாட்கள் அங்கிருக்க, ‘சிந்துவை ஒழுங்காக வளர்க்காமல் தங்கள் அண்ணன் பெண்ணின் வாழ்வை நாசமாக்கிவிட்டாய்’ என்று வனிதாவின் நாத்தனார் பேச அவர்களுக்கும் இந்திராவிற்கும் கடும் வாக்குவாதம்.
அதற்கு மேலும் அங்கிருக்க முடியாமல் சென்னை திரும்பியவர் மகனை தேடி சென்றார்.
தங்கள் மீது கோபம் இருந்தாலும் சிந்து மீது அவர்களுக்கு பாசம் உண்டு அல்லவா?! அதனால் மகனை தேடி செல்ல அன்று ரிஷி வீட்டில் இல்லை, சிவபாலன் மட்டும் தான் இருந்தார்.
வாசலில் இருந்த படியே சிந்துவின் விஷயத்தை சொன்னவர், “காணாமல் போய் மூணு நாளாகிடுச்சு இன்னும் குழந்தை கிடைக்கலை எப்படியாவது அவளை காப்பாத்தி கொடுத்துடுங்க.. வரதன் கிட்ட சொல்லுங்க..” என்று சொல்லி கிளம்பி விட்டார்.
சிவபாலனுக்குமே பேத்தியின் நிலை பதற செய்தது.
உடனே மகனுக்கு விஷயத்தை சொல்ல ஏற்கனவே அந்த பையனை சந்தித்து இருப்பவன் அவனுடைய கைபேசி எண்னையும் ஏற்கனவே குறித்து வைத்திருந்தான்.
தன் மாமனாருக்கு விஷயத்தை சொல்லி அவருக்கு தெரிந்த காவல் அதிகாரி மூலமாக பெங்களூரில் இருக்கும் அதிகாரிகளிடம் பேசி சிந்துவை தேடும் படலம் முடக்கி விடப்பட்டது.
அன்று மாலையே அவர்கள் ஆந்திராவில் இருப்பது தெரிய வர அவனுடைய செல்ஃபோன் லொகேஷன் வைத்து கண்டுபிடித்து அடுத்த நாள் காலை மைனர் பெண்ணை கடத்தி சென்றதற்காக அவனை கைது செய்தனர்.
அதற்குள் ரிஷி ஆந்திராவிற்கு கிளம்பி செல்ல அனைத்து சம்பிரதாயங்களையும் முடித்து ரிஷியிடம் ஒப்படைக்கபட்டாள் சிந்து.
முதலில் அவனுடன் வர மாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்து அடம் பிடித்த சிந்து, பெண் போலீசார் பேசிய பேச்சில் அரண்டு போய் அவனுடன் கிளம்பினாள்.
நேரே அவளை அழைத்து கொண்டு பெங்களூருக்கு வந்தவன் அவளுக்கு முதலில் கவுன்சிலிங் தேவை என்பதை மற்றவர்களுக்கு புரிய வைத்து சிந்துவை அங்குள்ள பெண்கள் காப்பகத்தில் சேர்க்க ஏற்பாடு செய்திருந்தான்.
வனிதா கண்ணீரோடு தம்பியை பார்த்திருக்க மற்றவர்கள் அவன் கையை பிடித்து கண்ணீரோடு நன்றி தெரிவித்தனர்.
வனிதா ரிஷியை நோக்கி வரவும் சிறு பார்வையிலேயே அவளை தள்ளி நிறுத்திய ரிஷி, ‘உன் நன்றி எனக்கு தேவையில்லை, உனக்கும் எனக்குமான உறவு எப்போவோ முடிஞ்சது! இனி இதை சாக்காக வைத்து என்னை தேடி வந்து விடாதே...’ என்று வனிதாவை எச்சரித்து விட்டும் சென்றிருந்தான்.
***********
இதோ பெங்களூரில் இருந்து சென்னை திரும்பி ஒரு வாரமான நிலையில் இரவெல்லாம் தூங்காமல் விழித்து கிடந்த இந்திராவிற்கு வாழ்வே சூனியமாகி போயிருக்கும் நிலை.
இதுவரை தனித்திருந்து பழக்கம் இல்லாத இந்திராவை தனிமை அந்தளவு சித்திரவதை செய்தது என்று தான் சொல்ல வேண்டும். அவருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை, அங்கிருக்கும் அனைவருமே வேலை செய்பவர்கள் என்பதால் பகலில் அவர் பேச்சு துணைக்கும் யாரும் இருக்க மாட்டார்கள்.
‘குறைந்தபட்சம் மாலையிலாவது பேசலாம்..’ என்றால் வீடு திரும்புபவர்களுக்கு அவர்கள் வீட்டு வேலை என்று சரியாக இருக்கும். யாருக்கும் இவரை கண்டு கொள்ள கூட நேரம் இருக்காது.
இவராக சென்று பேச்சு கொடுத்தாலும் ‘சீக்கிரம் இடத்தை காலி செய்!!’ என்பது போல தான் அவர்கள் பார்வை இருக்கும். அதனாலேயே தனக்கு ஒரு வேலை கிடைத்து விட்டால் போதும் ‘தனிமையில் இருந்து தப்பித்து விடலாம்..’ என்று நினைத்திருந்தார்.
‘ராம் வீடு எங்கு உள்ளது?’ என்று அவருக்கு தெரியாது. அதனால் அவனை தேடியும் செல்ல முடியவில்லை.
‘என்ன நடந்தாலும் சரி இன்னொரு முறை வனிதா வீட்டிற்கு செல்ல கூடாது’ என்று திடமாக இருந்தார்.
ராமை அழைத்து கொண்டு சென்ற ரிஷி வேலைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்ப மாலையாகி போனது.
வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தியவனின் விழிகள் அங்கே வாசலை அடைத்து பெரிதாக போடப்பட்டிருந்த வண்ணக்கோலத்தை கண்டு ஆச்சரியத்தில் விரிந்தது.
மகாலட்சுமி வீட்டை விட்டு சென்ற நாளிலிருந்து வாசலில் கோலம் இருந்தது இல்லை. இன்று அதிசயமாக கோலம் போடப்பட்டிருப்பதை கண்டவன் மனம் துள்ளி குதிக்க வேகமாக இறங்கி கேட்டை திறந்து கொண்டு உள்ளே சென்றான்
வீட்டின் நிலைப்படியில் சாம்பிராணி மணம் கமகமக்க இருபுறமும் விளக்கு ஏற்றப்பட்டு மகாலட்சுமி ஸ்தோத்திரம் மெலிதாக ஒலித்து கொண்டிருந்தது.
அதை தொடர்ந்து வீட்டினுள் இருந்து வந்த பேச்சு குரல்கள், குழந்தைகளின் கொலுசு சப்தம், சிவபாலனின் சிரிப்பு என்று அனைத்தும் சேர்ந்து ரிஷியை வரவேற்றது.
மனைவியின் வரவை உறுதி செய்தவன் மனமெங்கும் மகிழ்ச்சி ஊற்றாக பெருக்கெடுக்க வேகமாக செருப்பை கழற்றி விட்டு உள்ளே சென்றான்.
“லச்சு..” என்று சந்தோஷ குரலோடு வீட்டினுள் செல்ல அதுவோ முற்றிலுமாக மாறிப் போயிருந்தது.
என்னதான் சிவபாலன் தினமும் வீட்டை சுத்தப்படுத்தி வைத்திருந்தாலும் ஒரு பெண் இருக்கும் வீட்டின் அழகும் நேர்த்தியும் தனி அல்லவா?!. அப்படிதான் அழகும், ஆளுமையும், கம்பீரமும், தெய்வீகமும் அவன் வீடு முழுக்க கமழ்ந்திருந்தது.
ஹாலில் அமர்ந்திருந்த மகாவின் குடும்பத்தினர் இவனை கண்டதும் “வாங்க மாப்பிள்ளை.. எப்படி இருக்கீங்க?” என்று மகிழ்ச்சியோடு எழுந்து கொள்ள பொம்மைக்காக சண்டை போட்டுக் கொண்டிருந்த குழந்தைகள் இருவரும் ரிஷியே கண்டதும் தங்கள் சண்டையை நிறுத்திவிட்டு “அப்பாஆஆஅ..” என்று அவனிடம் ஓடி வந்தனர்.
தன் கால்களை கட்டிக்கொண்ட பிள்ளைகளை கண் கலங்க பார்த்திருந்தவன் அவர்களின் ஆர்பரிப்பில் இருவரையும் அள்ளிக்கொண்டு முத்தமிட்டான்.
குழந்தைகள் ஆர்வத்தோடு அவனிடம் எதையோ பகிர்ந்திட ரிஷியின் விழிகளோ ஆவலோடு மனைவியை தான் தேடியது,
அவன் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் இதழ்களில் மிளிர்ந்த புன்னகையோடு உச்சி வகிட்டு குங்குமம், தோள்களில் வழிந்த மல்லிகை சரங்கள் என்று காலை பார்த்த அலுவலக தோற்றத்திற்கு நேர்மாறாக அவன் பரிசளித்த புடவையில் இருந்த மகா ரிஷிக்கு பிடித்த காஃபியை அவனிடம் நீட்டி, “எடுத்துக்கோங்க ரிஷி” என்றாள்.
nice
ReplyDelete