தீராத காதல் தொல்லையோ - 4.2
“என்னோட அடுத்த ப்ராஜெக்ட்க்கு இந்த மாதிரி ஒரு வாய்ஸ் தான் வேணும்னு கேட்டு இருக்காரு. அப்போ தான் உன்னை பத்தின டீடெயில்ஸ் எல்லாம் கொடுத்து இருக்காங்க.. இன்னைக்கு நீ அவரை மீட் பண்ண வாய்ப்பு இருக்கு அதனால தான் வாழ்த்து சொன்னோம்..” என்றனர்.
“அப்படியா? ஆனா ஸர் என்கிட்ட சொல்லவே இல்லையே..” என்று இவள் சொன்ன அதே நேரம் அங்கு வந்த சவுண்ட் இன்ஜினியர் “நான் தான் சொன்னேனே மிருதுளா, அந்த டைரக்டர் இன்னைக்கு டெலிகாஸ்ட் பண்ண வேண்டிய எபிசொட் அவசரமா கொண்டு வந்து கொடுத்து முடிச்சு கொடுக்க சொன்னார்னு.. அந்த டென்ஷன்ல இதை மறந்துட்டேன்..”
“அதுக்கென்ன ஸர்? இட்ஸ் ஓகே..”
“இப்போ நியாபகம் வரவும் தான் இங்க வந்தேன் அதுக்குள்ள இவங்களே விஷயத்தை சொல்லிட்டாங்க.. எனிவேஸ் கங்கிராஜுலேஷன்ஸ் மிருதுளா! பொதுவாக முதல் வாய்ப்புங்கிறது யாருக்கும் அத்தனை சுலபமா கிடைச்சுடாது…”
“அப்படி நம்மோட திறமைக்கு கிடைக்கிற வாய்ப்பை வீணடிக்காம நம்மோட பெஸ்ட் கொடுத்து அவங்களை கட்டி போட்டுடனும். உனக்கு ரொம்பவே யூனிக் வாய்ஸ் ரொம்ப ஸாஃப்ட் ஸோ இந்த வாய்ப்பை நல்லா யூஸ் பண்ணிக்கோ. முதல் பாட்டோடு நிறுத்திடாம தொடர்ந்து நீ பல பாடல்கள் பாடி உன்னை ஒரு பின்னணி பாடகியா பார்க்க ஆசைப்படுறேன்..” என்றார்.
காலை உணவை முடித்துக்கொண்ட மிருதுளா அடுத்து பேச வேண்டிய ட்ராக்கை முடித்து கொடுக்க மணி பத்தாகி விட்டது.
இன்று அவளுக்கு கல்லூரியில் முக்கியமான வகுப்பு இருப்பதால் அவசரமாக தன் பொருட்களை சேகரிக்க அவளிடம் மீண்டும் வந்தார் சவுன்ட் என்ஜனியர்.
“சொல்லுங்க ஸர்..”
“மிருதுளா ஸர் உனக்கு பதினொன்றை மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திருக்கார்.. அவரோட ஸ்டூடியோ தெரியும் தானே?!”
“ஸர் இன்னைக்கு முக்கியமான கிளாஸ் இருக்கு. உடனே போகனுமா இல்லை ஈவ்னிங் போய் பார்க்கட்டுமா? முடியுமா?” என்றாள் தயக்கத்தோடு.
“என்னமா நீ, எல்லாரும் அவரோட மியூசிக்ல பாட தவம் இருப்பாங்க நீ மெல்ல போய் பார்க்கிறேன்னு சொல்ற?! அவர் எவ்ளோ பிஸியான ஆள்னு நான் சொல்லி தான் உனக்கு தெரியனுமா?”
“தெரியும் ஸர், ஆனா அப்பா..” என்று அவள் தயக்கத்தோடு பார்க்க, “நீ என் பொண்ணு மாதிரி தான் மிருதுளா. என் பொண்ணா இருந்தா என்ன சொல்லுவேனோ அதுதான் உனக்கும் சொல்றேன். உன் அப்பாகிட்ட முதல்ல விஷயத்தை சொல்லு நிச்சயம் சந்தோஷப்படுவார்.. இன்னைக்கு வாய்ப்பை நழுவ விடாதன்னு தான் சொல்லுவார்..”
“சரி ஸர், நான் அப்பா கிட்ட பேசிட்டு கிளம்பறேன்..”
“இது ஸாரோட பெர்சனல் நம்பர். உனக்கு கொடுக்க சொன்னார். அப்புறம் ரிசெப்ஷன்ல உன்னோட பேர் சொன்னா மட்டும் போதும் அவங்களே உன்னை கூட்டிட்டு போயிடுவாங்க..”
“ஓகே ஸர்..” என்றவள் உடனே விஷயத்தை உத்ராவிற்கும் வீட்டினருக்கும் அழைத்துச் சொல்ல அவர்களுக்கு அத்தனை மகிழ்ச்சி. வாசுதேவன் வெளியில் சென்று இருக்க அவரை உடனடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை.
“கிளாஸ் கட் பண்ணிட்டு போக போறது தெரிஞ்சா அப்பா என்ன சொல்லுவாறோன்னு இருக்கு அண்ணி..”
“அடடா! இவ்ளோ பெரிய சான்ஸ் கிடைச்சிருக்கு அதைவிட கிளாஸ் முக்கியமா? இவ்ளோ பேர் சொல்றோம் அதெல்லாம் புரியலையா உனக்கு?”
“அப்படி இல்லை அண்ணி..” என்று க்ருதி தயங்க,
“ப்ச், என் மாமனாரை நான் சமாளிச்சுக்கிறேன் அவர் என்ன நினைப்பார்ன்னு கண்டதையும் நினைக்காம ஒழுங்கா பாடு, புரியுதா?”
“சரி அண்ணி. ஆனா ரொம்ப நேரமா ட்ரை பண்ணியும் எனக்கு லைன் கிடைக்கல, உங்களுக்கு கிடைச்சா அப்பாவுக்கு சொல்லிடுங்க எனக்கு நேரம் ஆச்சு..”
“ஹே மித்து முதல் முறையா பாட போற ஸோ மறக்காம கோவிலுக்கு போயிட்டு ஒரு அர்ச்சனை பண்ணிட்டு கிளம்பு புரியுதா?”
“கண்டிப்பா அண்ணி..”
“உன் அண்ணா முக்கியமான மீட்டிங்கு கிளம்பிட்டாங்க இல்லை உன்னை டிராப் பண்ண அனுப்பி இருப்பேன்..”
“இருக்கட்டும் அண்ணி, அண்ணா என்னோட கால் எடுக்காததுலயே முக்கியமான வேலையா இருக்காங்கன்னு புரிஞ்சது.. நான் கேப் புக் பண்ணிக்கிறேன்..” என்று அழைப்பை துண்டித்தவள் தன் தோழியோடு குறிப்பிட்ட இசையமைப்பாளரின் ஸ்டுடியோவிற்கு கிளம்பினாள்.
அவசரமாக கிளம்பி விட்டவளுக்கு வழியில் தான் உத்ரா சொன்னது நினைவு வரவும் “கோவிலுக்கு போகணும்டி அண்ணி சொன்னாங்க..” என்றவள் வழியில் எங்கேனும் கோவில் தென்படுகிறதா? என்று பார்த்து நிறுத்த சொன்னாள்.
“கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க வந்துடறோம்..” என்று இறங்கிக் கொண்டவர்கள் அர்ச்சனை பொருட்களை வாங்கிக் கொண்டிருக்க அதற்கு நேர் எதிராக உத்ரா அனுப்பி இருந்த தயிர்வடையை சாப்பிட்டுக் கொண்டிருந்த வேதாந்த அவளை கண்டு விட்டான்.
க்ருதியை கண்ட நொடி அவன் கண்களில் ஒரு மின்னல்.
“கோவிலுக்கு போயிட்டு வரலாம் தர்ஷன்” என்று தயிர் வடையிலிருந்த காராசேவை தயிரில் முக்கி எடுத்து சாப்பிட்டபடி சொன்னான் வேதாந்த்.
“என்ன ஸர் திடீர்னு கோவிலுக்கு, இன்னைக்கு ஏதாவது விசேஷமா?”
“விசேஷமா இருந்தா தான் கோவிலுக்கு போகனுமா?”
“ஸர்!!” என்றவனுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாத நிலை.
“சொல்லு மேன்” என்றவன் கோவிலுக்கு செல்லும் முன் தயிர்வடையை முடிப்பதில் மும்முரமாக இருந்தான்.
“ஸர், நீங்க சொன்ன பிறகு போகாமல் இருக்க முடியுமா? போகலாம் ஸார்..” என்றதில் அவன் அதரங்கள் புன்னகையில் நெளிந்தது.
“விசேஷம் இருக்கே மேன்!!”
“ஸர்!!”
“உனக்கில்லாத விசேஷமா தர்ஷன்? இந்த மர்டர் கேஸ்ல கொலைகாரன் சீக்கிரமா கிடைக்கணும் ஊரை விட்டு தப்பிச்சு எங்கேயும் போக கூடாதுன்னு வேண்டிக்கலாம்.. இது ரொம்பவே சக்தி வாய்ந்த கோயில்.. நாம வேண்டிகிற எல்லாமே சிவன் நடத்திக் கொடுப்பார்..” என்றவன் பார்வை தன் எதிரில் இருந்த க்ருதி மிருதுளாவை தழுவியிருந்தது.
ஆனால் வேதாந்த்தின் பேச்சில் வாயடைத்துப் போன தர்ஷன், “ஸர் நீங்களா இப்படி சொல்றீங்க?” என்றான்.
“இதுக்காக நான் என்ன டப்பிங் ஆர்டிஸ்ட்டை கூட்டிட்டு வந்தா எனக்காக பேச வைக்க முடியும்? உன் முன்னாடி தானே மேன் நின்னு பேசுறேன் அப்புறம் என்ன சந்தேகம்?”
“இல்ல ஸர் கொலைகாரனை பிடிக்க முதல் முறையா கடவுளை வேண்டலாம்னு சொல்றீங்களே.. எனக்கு இது புதுசா இருக்கு..”
“புதுசாவா?!” என்றான் மீசையை நீவியபடி.
“ஆமா ஸார் இது ரொம்பவே புதுசா இருக்கு..” என்று வடிவேலு பாணியில் தர்ஷன் சொல்ல பக்கென சிரித்து விட்டான் வேதாந்த்.
“நீங்க எப்பவும் இப்படி எல்லாம் சொல்ல மாட்டீங்களே.. அதனால தான் ஸர் கேட்டேன், தப்பா எடுத்துக்காதீங்க” என்றவனுக்குமே சிரிப்பு தான்.
“என்ன மேன் இது? டாக்டர்ஸ் மட்டும் தான் நாங்க செய்ய வேண்டியதை எல்லாம் செஞ்சுட்டோம். எங்களுக்கும் மேல ஒரு சக்தி இருக்கு, பேஷன்ட் கண் விழிக்க அவரை தான் நம்பியிருக்கோம் நீங்களும் கடவுளை வேண்டிக்கோங்க என்று சொல்லலாம் நாம சொல்ல கூடாதா?”
“நாமளும் சாதாரண மனுஷங்க தான்!! நமக்கு மேலே ஒரு மகாசக்தி இருக்கு தானே.. அதை நாம நம்புறோம். என்ன அந்த நம்பிக்கையின் உருவம் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விதத்தில் இருக்கும்..” என்று நான் பேசிக் கொண்டே செல்ல தர்ஷன் ஒன்றும் புரியாமல் பார்த்தான்.
“என்ன எதுவும் புரியலையா?”
“ஆமா ஸார்..”
“இப்ப நீ கோவிலுக்கு வரலைன்னா நான் சக்தியை பற்றி இன்னும் பேசுவேன்.. பேசறதோடு இல்லாம நான் பேசினதுக்கான அர்த்தத்தை கண்டுபிடிச்சு உன்னை கட்டுரை (essay) சம்மீட் பண்ண சொல்லுவேன். எப்படி வசதி?” என்றதில் அரண்டு போனான் தர்ஷன்.
“ஸார் இப்படி டியூட்டி நேரத்துல நீங்க தயிர் வடை சாப்பிடுறதையே என்னால நம்ப முடியல. அதுக்கு மேல கோவிலுக்கு போகணும்னு சொல்லி என்னென்னமோ சித்தாந்தம் பேசுறீங்க. எதுவுமே புரியல..”
“இது எல்லாத்துக்கும் ஒரே தீர்வு அமைதியா நான் உங்க பின்னாடி கோயிலுக்கு வருவது தான் என்றால் உங்களுக்கு முன்னாடியே நான் கோவிலில் இருப்பேன் ஸர்..” என்றவன் சொன்னதோடு ஓட்டமும் நடையுமாய் எதிரில் இருந்த கோவிலுக்கு சென்றான்.
Comments
Post a Comment