தீராத காதல் தொல்லையோ - 4.2
மாமனார் குழந்தையோடு கிளம்பிய போதும் ரிஷியால் உடனடியாக மனைவியின் அறைக்கு சென்று விட முடியவில்லை. காலை கோவிலில் அவள் நடந்து கொண்ட முறைமைக்கும் தற்போதைய அவள் அமைதிக்குமான வித்யாசத்தை உணர்ந்தவனுக்கு அவளிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று புரியவில்லை.
எப்படி இருந்தாலும் அவன் பேசி தானே ஆக வேண்டும்! தாமதிப்பதால் எதுவும் மாறிவிட போவதில்லை என்பதை உணர்ந்து ஆழ்ந்த மூச்சோடு மகாலட்சுமியின் அறையினுள் நுழைந்து ரிஷிவரதனை வரவேற்றது என்னவோ அவன் பரிசளித்த புடவை தான்.
ஆம் ரிஷி கொடுத்த புடவையை அவன் முகத்தில் விட்டெறிந்திருந்தாள் மகாலட்சுமி.
“லச்சு!!” என்று அவன் திகைப்போடு பார்த்த நொடி, “மாப்பிள்ளை..” என்று கதவை தட்டி அழைத்திருந்தார் தினகரன்.
“மாமா.. இத்.. இதோ வரேன் மாமா..” என்று புடவையை வைத்து விட்டு ரிஷி வெளியில் செல்ல கோபத்தை கட்டுபடுத்தியபடி மகாவும் அவன் பின்னே சென்றாள்.
“மாப்பிள்ளை இந்த டாக்குமெண்ட்டை தெரியாம குழந்தைங்க எடுத்துட்டு வந்துட்டாங்க போல எங்க ரூம்ல இருந்தது. அதுதான் கொடுத்துட்டு போக வந்தேன்..” என்றவரிடம் இருந்து வாங்கி கொண்டவன்,
“மாமா இது என்னோட வீட்டு பத்திரம். இதை பற்றி பேசணும்னு தான் சொன்னேன்..”
“இதுல என்ன மாப்பிள்ளை இருக்கு..”
“இதுல தொடங்கினது தான் மாமா எங்களோட பிரச்சனையே.. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி என்னோட எல்லா கடனையும் அடைச்சுட்டேன்..” என்றவன் தான் கொண்டு வந்திருந்த பேக்கில் இருந்து, ஒரு கவரை கொண்டு வந்து மற்றொரு பத்திரத்தை எடுத்து நீட்டி,
“இது நான் வீடு கட்டும் போது போட்டிருந்த இஎம்ஐ.. அதை குளோஸ் பண்ணிட்டேன். சிந்துவோட விசேஷத்துக்காக வீட்டு பாத்திரத்தை வச்சு வாங்கி இருந்த கடனை அடைச்சு பத்திரத்தை மீட்டு எடுத்துட்டேன்..” என்று சொல்லி கொண்டிருக்க பாக்கியலட்சுமியும் கதிரும் அங்கே வந்தனர்.
“எதுக்கு மாப்பிள்ளை எங்களுக்கு இதை எல்லாம் சொல்லிக்கிட்டு மகாவுக்கு தெரிஞ்சா போதாதா?” என்றார் பாக்கியா.
“இல்லை அத்தை, அன்னைக்கு பணத்தை வச்சு எங்களுக்குள்ள பிரச்சனை வந்த போது நான் லச்சுவை பணம் சம்பாதிச்சு கொடுக்கிற மெஷினா தானே மாமாவும் நினைச்சிருப்பார். அவருக்கு மட்டுமல்ல உங்க எல்லாருக்குமே அப்படி தோணி இருக்கலாம்...”
“இனி அப்படி இல்லைன்னு நிரூபிக்க வேண்டியது என்னோட கடமை..” என்றவன் கவரில் இருந்து பணத்தை எடுத்து, “இது எங்களுக்கு கல்யாணமானதுல இருந்து ஏழு மாசமா நான் செலவு பண்ணின லச்சுவோட சம்பள பணம்..” என்று ஐந்து லட்சத்தை எடுத்து மேஜை மீது வைத்தான்.
“எதுக்கு ரிஷி இதெல்லாம்? எங்களுக்கு மகா சந்தோஷமா இருந்தா போதும் மற்றபடி அவளோட சம்பளப்பணத்தை உங்க இரண்டு பேரோட விருப்பம் போல என்னானாலும் பண்ணுங்க எங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை..” என்றான் கதிர்.
“அப்படி இல்லை கதிர். அன்னைக்கு மாமா லச்சுவை இங்க கூட்டிட்டு வர காரணமான பணமோ, சொத்தோ எதையுமே இனி நான் அவ கிட்ட இருந்து எதிர்பார்க்க மாட்டேன் என்கிற நம்பிக்கை கொடுக்க வேண்டியது என்னோட பொறுப்பு தானே!! இருக்கட்டும் இது உங்களுக்கும் தெரிந்தால் தான் இனி லச்சுவுக்கு எந்த பிரச்சனையும் இருக்காதுன்னு நீங்களும் நிம்மதியா இருக்க முடியும்” என்றவன்,
“இப்போ எனக்கு எந்த கடனும் கிடையாது. என் பொண்டாட்டி பிள்ளைகளை வச்சு காப்பாற்றும் அளவுக்கு சம்பாதிக்கிற சக்தி எனக்கு இருக்கு.. இனி எக்காரணம் கொண்டும் மகாவோட பணத்தை நான் எதிர்பார்க்க மாட்டேன்.. அவங்களை நான் கூட்டிட்டு போகலாம் தானே?!” என்றிட மகா அமைதியாக ரிஷியின் பேச்சை கவனித்திருந்தான்.
“என்ன மாமா அமைதியா இருக்கீங்க? உங்களுக்கும் அந்த நம்பிக்கை இருந்தா என்னோடு அனுப்பி வைங்க..” என்றிட மகிழ்ச்சியில் திளைத்திருந்தவர்களுக்கு என்ன பதில் சொல்லவது என்று புரியாத நிலை.
“என்ன மாப்பிள்ளை உங்க பொண்டாட்டி பிள்ளைகளை கூட்டிட்டு போக பர்மிஷன் கேட்கிறீங்க? தாராளமா கூட்டிட்டு போங்க.. நிஜமாவே எங்களுக்கு சந்தோஷத்துல வார்த்தை வரலை..” என்று முதலில் சுதாரித்த தினகரன் சொல்ல மற்றவர்கள் அதை ஆமோதித்தனர்.
“மகாவோட சந்தோஷம் தான் எங்களோட சந்தோஷம். பணம் மட்டுமில்லை உங்க அம்மா அக்காவால எந்த பிரச்சனையும் அவளுக்கு வாராம பார்த்துக்கோங்க ரிஷி” என்றான் கதிர்.
“ப்ச் என்னடா பேசற? மகாவுக்காக இவ்ளோ செய்யற மாப்பிள்ளை அதையெல்லாம் யோசிக்காமலா இருப்பார். மகாவுக்காக தானே இத்தனை மாசம் எல்லாரையும் பிரிஞ்சு இருந்திருக்கார் அவருக்கு தெரியாதா?” என்றார் பாக்கியா.
“இல்லைன்னு சொல்லலை.., என்ன இருந்தாலும் இவ்ளோ நடந்த பிறகு நாம சொல்லாம இருக்க முடியுமா ம்மா?!”
“கதிர் சொன்னதுல எந்த தப்பும் இல்லை அத்தை. இன்ஃபாக்ட் அவர் சொல்லலைனாலும் இனி என் மனைவிக்கு எந்த மரியாதை குறைவும் வராம பார்த்துப்பேன்னு உறுதி கொடுக்கிறேன். அதோடு இப்படி அவ இங்க வந்து இருக்கிறது இதுவே கடைசியா இருக்கும். மகாவோட சந்தோஷத்துக்கு நான் பொறுப்பு..” என்று மகாவை பார்த்தபடி சொல்ல அனைவரிடத்திலும் முகம் கொள்ளா மகிழ்ச்சி.
அனைத்தையும் வெறுமையோடு பார்த்திருந்த மகாவிடம் “மாப்பிள்ளை சொன்னது கேட்டுச்சா மகா?” என்றிட மகா அவரை அமைதியாக பார்த்தாள்.
“இனியும் பழசை கிளறி சிக்கலாக்கிக்காத. மாப்பிள்ளை நீ எதிர்பார்த்ததை விடவும் அதிகமாவே மாறி இருக்கார். உனக்காக எதுவும் செய்ய தயாரா இருக்கார், இத்தனை வருஷம் பிரிஞ்சு இருந்தவர் கிட்ட கண்டதையும் பேசி பிரச்சனை பண்ணாமல் அவரை சந்தோஷமா வச்சுக்கோ..” என்றதில் மகா கூர்மையாக தாயை பார்க்க,
“என்ன பார்க்கிற? மாப்பிள்ளை இவ்ளோ சொல்லியும் எதுவும் பேசாம இருக்கிறதுலயே ஏதோ பிரச்சனை பண்ண போறன்னு எனக்கு புரியாமல் இல்லை. ஆனா ஏற்கனவே நொந்து போய் இருக்கிற வரை இன்னும் நோகடிக்கிறதால உனக்கு என்ன கிடைச்சுட போகுது?..”
“ஆம்பளைங்க தன்னோட தப்பை உணர்ந்து சரணாகதி ஆகும் போது புரிஞ்சுகிட்டு வாழ்க்கையை நகர்த்தறது தான் புத்திசாலிதனம் அதைவிட்டுட்டு பழசை பேசறது முட்டாள்தனம்..”
“உனக்காக உன்னை இத்தனை மாசம் பிரிஞ்சு இருந்த மனுஷனை புரிஞ்சுகிட்டு நல்ல பொண்டாட்டியா அவரோடு சந்தோஷமா இருக்கிற வழியை பாரு..” என்றிட அவரிடம் எதுவும் பேசாமல் அறைக்கு சென்று விட்டாள்.
“இன்னைக்கு நாள் நல்லா இருக்கு தானே அத்தை. இல்லை ஏதாவது சம்பிரதாயம் இருக்கா?”
“இன்னைக்கு ரொம்பவே நல்ல நாள் மாப்பிள்ளை. இன்னைக்கு கிளம்பலாம். மகாவும் பெட்டி அடுக்கி வச்சுட்டா..” என்றிட மனைவியின் முன்னுக்கு பின் முரணான செய்கை புரியாமல் யோசனையில் ஆழ்ந்தான் ரிஷி.
“சரி மாப்பிள்ளை நீங்க ரெஸ்ட் எடுங்க..” என்று மற்றவர்கள் கிளம்ப மகாவை எப்படி சமாதானப்படுத்துவது என்ற யோசனையுடனே அறையினுள் சென்றவன் அங்கே மகாலட்சுமி நின்றிருந்த கோலம் கண்டு அதிர்ந்து போய் விட்டான்.
ப்ளவுஸ் இன்ஸ்கர்ட் மட்டுமே அணிந்து அவன் கொண்டு வந்திருந்த புடவையை கையில் வைத்தபடி அவன் முன் நின்றிருந்த மகாலட்சுமியை ஆச்சர்ய அதிர்ச்சியோடு ரிஷி பார்த்திருக்க,
“கலர் ரொம்ப நல்லா இருக்கு ரிஷி.. டிசைனும் சூப்பர்.. என்ன அங்கேயே நின்னுட்டீங்க கதவை தாழ் போட்டுட்டு வாங்க..”
“வாட்?” என்றவள் அவனை தாண்டி சென்று கதவை தாழிட்டு,
“புடவை வாங்கி கொடுத்தா மட்டும் போதுமா? கட்டுறதுக்கு யார் ஹெல்ப் பண்ணவா? நல்ல நேரத்துல வீட்டுக்கு கிளம்பனும் தானே?!..” என்றதில் இன்னுமே திகைத்து நின்றான் ரிஷி.
“என்ன பார்த்துட்டு இருக்கீங்க? பட்டுப் புடவையை என்னால தனியா கட்ட முடியாதுன்னு உங்களுக்கு தெரியாதா? அதுக்கு முதல்ல இந்த கொக்கியை மாட்டி விடுங்க ரிஷி என்னால பேக் ஹூக் போட முடியலை..” என்று திரும்பி நின்றவள் கோலம் கண்டு மூச்சடைத்து போன ரிஷிக்கு பேச்சு எழவில்லை.
“இந்த ப்ளவுஸ் எப்படி இருக்கு ரிஷி..” என்று கேட்டபடி மகாலட்சுமி புடவைக்கு ப்ளீட்ஸ் எடுக்க தொடங்கினாள்.
“...”
“ப்ச் எவ்ளோ நேரம் தான் நானும் ஃப்ளீட்ஸ் பிடிச்சுட்டு நிற்கிறது.. சீக்கிரம் ரிஷி” என்றவள் அத்தனை நேரம் பிடித்திருந்த முந்தானையை கீழே போட்டுவிட்டு அவன் புறம் திரும்பி “என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்றாள்.
“ல.. லச்சு என்ன இது?” என்றான் அவளின் அரைகுறை கோலத்தில் இருந்து பார்வையை திருப்பியபடி.
“எதை பற்றி கேட்கறீங்க?! ஓ இந்த பிளவுஸ்ஸா!! ஆக்சுவலி என்னோட வொர்க் பண்ற ரியாவோட சிஸ்டர் பொட்டிக் வச்சிருக்காங்க. நானும் ஜெய்யும் லாஸ்ட் வீக் அங்க போயிருந்தோம். குழந்தைகளுக்கு ஃபீட் பண்ணிட்டு இருக்கிறதால வெயிட் ஃப்ளக்சுவேட் (Fluctuate) ஆகிட்டே இருக்கு..”
“ஸோ என்னோட எந்த பழைய ப்ளவுசும் ஃபிட் ஆகறதே இல்லை. என்னோட கலீக் ஒருத்தருக்கு மேரேஜ் வருது அதுக்காக இந்த ரெடிமேட் பேக் ஹுக் பிளவுஸ் ட்ரை பண்ணி பாருன்னு ஜெய் சொன்னா.. சரி ட்ரை பண்ணி பார்க்கலாமேன்னு வாங்கிட்டு வந்தேன்..”
“நீங்க வாங்கிட்டு வந்த புடவைக்கு மேட்சிங்கா இருக்கவும் இப்ப தான் முதல் முறையா ட்ரை பண்றேன். எனக்கு ஹூக் போட முடியல, கொஞ்சம் போட்டு விடுறீங்களா?” என்றதில் ரிஷிக்கு ஒன்றும் புரியவில்லை.
பின்னே இத்தனை சகஜமாக அவள் பேசுவதை அவனால் நம்பவே முடியவில்லை. கோவிலில் அத்தனை கோபமாக தன்னை அறைந்து, சற்று முன் புடவையை விசிறி எறிந்தவளிடம் எப்படி இந்த திடீர் மாற்றம்? என்று புரியாமல் இருந்தவன், “நான் அத்தையை அனுப்பட்டுமா?” என்றான்.
“ஏன்?”
“உனக்கு ஹெல்ப் பண்ண..”
“ஏன் உங்களுக்கு ஹூக் மாட்டி விட தெரியாதா? இல்லை அப்படி செய்யறதுல உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா?”
“இல்ல, ஆனா நீ எப்படி திடீர்னு இந்த மாதிரி..” என்றவன் மகாலட்சுமியை பார்ப்பதை முழுதாக தவிர்த்தான்.
“எந்த மாதிரி?” என்று அவனையே திருப்பி கேட்டவள், “நீங்க தானே என் புருஷன்!! ஏன் ஹூக் மாட்டினா உங்களோட கிரீடம் இறங்கிடுமா? இல்ல இதுக்கு முன்னாடி நீங்க எனக்கு புடவை கட்ட ஹெல்ப் பண்ணினது கிடையாதா?”
“அப்படியில்லை பட் இது வேண்டாமே..” என்றவனை நெருங்கி நின்ற மகா அவன் சட்டை பட்டன்களை கழற்றியபடி, “அப்படியா?!” என்றாள் கிறக்கமான குரலில்.
“என்ன?” என்று ரிஷி பதறிக்கொண்டு மனைவியை பார்க்க,
“எனக்கு ஏற்ற புருஷனா நீங்க மாறி இருக்கும் போது உங்களுக்கு ஏற்ற மனைவியா நானும் மாறினா தானே நல்லா இருக்கும்?” என்று ஆழ்ந்த குரலில் சொல்லியபடி அவனை முத்தமிட்ட மகாவின் கையில் அவன் சட்டை தஞ்சம் அடைந்திருந்தது.
yenna da ithu mayam ,maha yethukko adi podura
ReplyDelete