வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

வாழ்க்கைத்துணை - 30.2

 


மகாவின் கோபம், ஆதங்கம், வலி அனைத்தும் ஆழ்ந்த முத்தமாக கடத்தபட்டத்தில் ரிஷி வெகுவாக காயப்பட்டு போனான்.

பல நிமிடங்களுக்கு நீடித்த மூர்கத்தனமான அவள் முத்தத்தை ஒருவழியாக ரிஷி தான் முடிவுக்கு கொண்டு வந்தான்.

அவளை தன்னிடம் இருந்து பிரித்து நிறுத்தி, “லச்சு போதும், என்னாச்சு உனக்கு ஏன் இப்படி பண்ற?” என்று அவன் உதட்டில் கசிந்திருந்த ரத்தத்தை துடைத்தபடி கேட்டான்.

வேக மூச்சுக்களோடு அவனை பார்த்தவள், ரெண்டு வருஷத்துக்கு மேலே இருக்கும் இல்ல..என்றாள் சம்பந்தமே இல்லாமல். 

ரெண்டு வருஷமா? என்ன சொல்ற நீ?” என்றவனின் உதடுகள் வெகுவாகவே காந்தியது. 

இல்ல நம்ம ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியா இருந்து ரெண்டு வருஷத்துக்கு மேலே இருக்கும் தானே?!” என்றவள் கீழே விழுந்திருந்த புடவையை எடுத்து, “இதுக்கு மேல புடவையை கட்டி கசங்கி அப்புறம் திரும்ப கட்டுறது தேவையில்லாத நேர விரயம்..என்று மெத்தையில் வைத்தவள் மீண்டும் ரிஷியை நெருங்க அவனோ பின்னே நகர்ந்தான். 

“லச்சு ப்ளீஸ் கொஞ்சம் நான் சொல்றதை கேளு, எனக்கு உன்னோட கோபம் புரியுது பட்..” என்றவனின் பனியனை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவள்,

“நல்ல பொண்டாட்டியா உங்களுக்கு சாப்பாடு பரிமாறினா மட்டும் போதாது எல்லா விதத்துலயும் சரியா நடந்துக்கணும், சந்தோஷமா வச்சுக்கணும்னு எங்கம்மா சொல்லி இருக்காங்க ரிஷி..” 

“அதுவும் இப்போ நீங்க திருந்தி வருந்தி வந்திருக்கப்போ சண்டை போடாம நான் சாமர்த்தியமா நடந்துக்கனுமாம்..” என்று மீண்டும் அவனை இழுத்தணைத்து முத்தமிட்டாள்.

மீண்டுமான இதழ் பரிமாற்றத்தில் ரிஷி முன்பிற்கு இப்போது அதிகமாகவே காயப்பட்டு போனான்.

“உனக்கு என்ன தான்டி ஆச்சு?” என்று மகாவை  வலுக்கட்டாயமாக தன்னிடம் இருந்து விலக்க அவனை படுக்கையில் தள்ளி தானும் அவன் மீது விழுந்தவள். “இந்த சாமர்த்தியம் போதுமா?” என்றாள் கணவனை பார்த்தபடி.

லச்சு ப்ளீஸ்..” என்றவனுக்கு உதட்டில் அப்படி ஒரு எரிச்சலும் வலியும்.

“என்ன லச்சு? ஏன் உங்களுக்கு நான் வேண்டாமா?” என்று அவனை நெருங்க மகாவை நகர்த்தி சட்டென எழுந்து கொண்டவன்,

எனக்கு நீ வேணும் ஆனா அதுக்கு அர்த்தம் இது இல்லைடி..” என்று அருகே இருந்த துவாலையை எடுத்து மனைவி மீது போர்த்தியவன், ஐ’ம் ஸாரி லச்சு” என்றான்.

எதுக்கு? நீங்க என்ன தப்பு பண்ணீங்க?

நிறைய பண்ணியிருக்கேன். எல்லாத்துக்கும் சேர்த்து நான் சொல்ற ஸாரி போதுமானதான்னு எனக்கு தெரியாது பட் அதை தவிர என்கிட்டே வேற வார்த்தை இல்லை. நிஜமாவே உன் டெலிவரி அப்போ உன்னோடவும் குழந்தைகளோடவும் இருக்கணும்னு தான் நினைச்சேன் பட் எதிர்பாராம தான் ஆக்சிடென்ட் ஆச்சு..” 

ஓஒ!! அப்புறம்.. என்றாள் கைகள் இரண்டையும் மார்பின் குறுக்கே கட்டியபடி.

உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு இல்லை.. ஆனா, ப்ச்...” என்றவன் உதட்டில் துளிர்த்த ரத்தத்தை துடைத்து “ஐஸ் பேக் இருக்கா? பேசறப்போ  ரொம்ப வலிக்குது..” என்றவன் கதவை திறந்து பார்க்க ஹாலில் யாரும் இல்லை.

வேகமாக வெளியில் வந்து ஃப்ரிட்ஜில் இருந்து ஐஸ் கட்டிகளை எடுத்து வந்து உதட்டிற்கு ஒத்தடம் கொடுக்க தொடங்கினான். 

மகா எதுவும் பேசாமல் அழுத்தமாக அவனை பார்த்திருக்க வலி குறையவும் அவளிடம் வந்தவன், “எனக்கு உன் கிட்ட பேசணும், நிறைய பேசணும். நம்ம வீட்ல போய் நிதானமா பேசலாம். இது நீ ரெஸ்ட் எடுக்கிற நேரம்னு சொன்னாங்க இப்போ எதுவும் பேச வேண்டாம், கொஞ்ச நேரம் படுத்துக்கோ..” என்றவனின் அக்கறையில் மகாவின் கொதிப்பு இன்னுமே அதிகரித்தது.

“என்னமோ பேசணும்னு சொன்னீங்களே..”

“அப்புறம் பேசலாம் லச்சு..” என்றவன் மனைவி உறுதியாக நிற்கவும், “உங்கிட்ட இருந்து விலகி இருந்த ஒவ்வொரு நொடியும் நான் உன்னை எவ்வளவு மிஸ் பண்ணினேன் தெரியுமா?”

அப்படியா?” என்றாள் எள்ளலான குரலில்.

ஆமா, ஆனா ஒவ்வொரு நாளும் உனக்கு கஷ்டம் கொடுக்க கூடாதுன்னு எனக்கு நானே சொல்லி கிட்டு என்னை நானே தேத்திப்பேன்..என்றதும் தான் தாமதம் அவனை ஓங்கி அறைந்த மகாலட்சுமி,

இதுக்கு மேல நீ எனக்கு என்னடா கஷ்டம் கொடுக்கணும்?” என்று அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் வெடித்து விட்டாள்.

 ரிஷி திகைப்போடு பார்த்திருக்க அவன் பனியனை கொத்தாக பிடித்து, “சொல்லு இதுக்கு மேல நீ எனக்கு என்ன கஷ்டத்தை கொடுத்திட முடியும்? ஆக்ஸிடென்ட் ஆனதால அடிக்க மாட்டேன்னு நினைச்சியா? எனக்கு இருக்கிற ஆத்திரத்துக்கு விட்டா உன்னை கூறு போட்டுடுவேன்..” என்று கண்ணீரோடு சொல்ல ரிஷி அசைவற்று போனான்.

“உன்னை நான் எவ்வளவு நம்பினேன்?! ஏதோ கோவத்துல புரிஞ்சுக்காம பேசுற, என்னை விட்டு விலகி இருந்தா புரிஞ்சுக்க வாய்ப்பு இருக்குன்னு ரொம்ப நம்பினேன். ஆனா நீ என் நம்பிக்கையை பொய்யாக்கிட்ட? அன்னையிலிருந்து இன்னைக்கு வரை நீ கொஞ்சமும் மாறலை..” என்றவள் அவன் கொண்டு வந்திருந்த பணத்தை எடுத்து அவன் முன் நீட்டி,

“இதுக்காகவா நமக்குள்ள பிரச்சனை வந்தது. இதனாலயா நான் உன்னை விட்டு விலகி வந்தேன்?” என்று ஆவேசமாக கேட்டவள்,

 “டேய் இதை விட பத்து மடங்கு பணத்தை நான் உனக்கு கொடுக்கிறேன். ஆனா இத்தனை வருஷம் உன்னால நானும் என் குழந்தைகளும் இழந்த நிமிஷங்களை உன்னாலையோ உன் பணத்தாலயோ திருப்பி கொடுக்க முடியுமா?” என்றாள் ஆக்ரோஷமாக. 

“லச்சு அப்படி இல்ல.. நான் உன் முன்னாடி கடன்காரனா நிற்க கூடாது என்னோட பாரத்தை உன்னோட தலையில சுமத்த கூடாதுன்னு தான்..” என்றதுமே,  

“வாயை மூடு!!” என்று கர்ஜித்தவள், “நான் உன் பொண்டாட்டிடா!! உன்னோட இன்ப துன்பம் கஷ்ட நஷ்டத்துல எனக்கும் பங்கு இருக்கு. நான் என்னைக்கு உன்னோட பாரத்தை பங்கு போட்டுக்க மாட்டேன்னு சொன்னேன்.. சொல்லுடா!!” என்று அவனை போட்டு உலுக்க ரிஷியால் பதில் அளிக்க முடியவில்லை.  

“அன்னைக்கு கூட நான் என்ன சொன்னேன், சிந்து வயசுக்கு வந்த விஷயத்தை என்கிட்ட சொல்லி என்ன பண்ணலாம்னு கேட்டு இருந்தாலோ இல்லை எனக்கு பண நெருக்கடி உன்னோட சொத்தை அடமானம் போடலாம்னு இருக்கேன் உனக்கு சம்மந்தமான்னு ஒரு வார்த்தை கேட்டிருந்தா நான் சந்தோஷமா அதை கொடுத்து இருப்பேன்..”

“ஆனா நீ அப்படியா பண்ணின? என்னமோ நான் உன்னோட அடிமை மாதிரி எவ்வளவு ஆணவத்தோட நடந்துகிட்ட.. என்னோட சொத்தை கொண்டு போய் அடமானம் போட போறது பத்தி எனக்கு ஒரு வார்த்தை கூட சொல்லல.. அப்போ உனக்கு நான் யார்னு கேட்டேன். அந்த கேள்வி தானே நம்மோட பிரிவுக்கு காரணம்.." 

“அன்னைக்கு என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்ய விடாமல் உன்னுடைய ஈகோ தடுத்துச்சு.. அதுக்கு தான் நான் எதிரா இருந்தனே தவிர உன்னுடைய கஷ்டத்தை என்னைக்கு நான் பங்கு போட்டுக்க மாட்டேன்னு சொன்னேன்? அப்படி சொல்றவளா இருந்தா கல்யாணமானதுல இருந்து என்னோட சம்பளத்தை நீ என்ன பண்றன்னு ஒரு பைசாவுக்காவது கணக்கு கேட்டிருப்பேனா?!”

“இன்னைக்கு ஜம்பமா உங்க பொண்ணு கிட்ட இருந்து வாங்கின பணம்னு எடுத்து வைச்சு இப்பவும் நீ என்னை பிரிச்சு தான் பார்க்கிற.. டேய் இவ்ளோ தானா நீ என்னை புரிஞ்சிக்கிட்டது? இவ்ளோ நாள் என்னன்னு நீ என்னோடு குடும்பம் நடத்தின?” என்று வேதனையோடு கேட்டவளின் கண்ணீர் ஒவ்வொரு வார்த்தைக்கும் அதிகரித்ததே தவிர்த்து குறையவில்லை.

 அதில் ரிஷி முழுவதுமாக நிலை குலைந்து போனான். 

“லச்சு நீதானே அந்த இடம் மாமா கொடுத்தது அது நம்மோட குழந்தைகளுக்கு தான் போய் சேரனும்னு சொன்ன?”

“ஆமா சொன்னேன். அப்படி என்னை சொல்ல வச்சது நீ!! என் புருஷனா நீ என் பக்கத்துல இருந்திருந்திருந்தா  அந்த வார்த்தை என் வாயில் இருந்து வந்திருக்காது. நீ உன் அப்பா அம்மாக்கு பிள்ளையாகவும் உன் அக்கா பொண்ணுக்கு தாய் மாமனாகவும் தான் ஒவ்வொரு நிமிஷமும் யோசிச்ச, நடந்துகிட்ட, பேசின..”

“ஒரு நாளும் என் புருஷனா யோசிச்சது கிடையாது நடந்துட்டது கிடையாது பேசினதும் கிடையாது. ஒரு நிமிஷம் நீ என் புருஷனா யோசிச்சு இருந்தாலும் அன்னைக்கு நமக்குள்ள அந்த பிரச்சனையே வந்து இருக்காது.. அதாவது உனக்கு புரியுதா இல்லையா?” என்றவள் கொண்டிருந்த அதீத அழுத்தத்தில் அவளுக்கு மண்டை கனக்க தலை சுற்றல் ஏற்பட்டது. 

நிற்க முடியாமல் தள்ளாடியவளை பிடித்து மெத்தையில் அமர்த்தியவன் தண்ணீர் எடுத்து கொடுத்து, “ப்ளீஸ் லச்சு, டென்ஷன் ஆகாத” என்றான்.  

“உன்னால இத்தனை மாசம் நான் படாத மன உளைச்சலையா இப்போ பட்டுட போறேன். உன்னால எனக்கு மனசு வெறுத்துப் போச்சு சரியா சொல்லணும்னா மனசு மரத்து போச்சுடா!! இனி அதுக்குள்ள புருஷன், பந்தம், பாசம், காதல்னு எதுக்குமே இடம் கிடையாது..”

“அப்படி இருந்தும் இன்னைக்கு நீ திருந்தி வந்துட்ட செஞ்ச தப்புக்கு வருந்தி வந்திருக்குன்னு ஆள் ஆளுக்கு உனக்கு வக்காலத்து வாங்குறாங்க... அதையெல்லாம் பார்க்கிறப்போ எனக்கு பத்திகிட்டு வருதுடா..” என்றவள் அவனை நெருங்கி ரிஷியின் உதடுகளை அழுத்தமாக பிடிக்க அவனோ ஏற்கனவே கொண்டிருந்த எரிச்சலிலும் அவள் அழுத்தி பிடித்ததால் ஏற்பட்ட வலியிலும் தன்னை மீறி “ம்மாஆஆ..” என்று அலறினான்.

“கொஞ்ச நேரம் என்னால ஏற்பட்ட வெளிக்காயத்தின் எரிச்சல் தாங்க முடியாம கத்துறியே ஆனா இத்தனை நாள் உன்னால எனக்கு ஏற்பட்ட உள்காயத்தையும் அதனால என் மனசு கொதிச்சுட்டு இருக்கிறதையும் இந்த பணத்தை வச்சு குளிர்விச்சுடலாம்னு எப்படி நினைச்ச?..” 

“நீ மட்டும் தான் என் உலகம்!! உன்னை விட வேற எதுவுமே முக்கியம் இல்லைன்னு நினைச்சவளை இதை விட நீ அசிங்க படுத்திட முடியாதுடா..” என்றவளின் முகத்தில் அத்தனை ரௌத்திரம்!!


Comments

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17