தீராத காதல் தொல்லையோ - 4.2
தனக்கு முன்னே கோவிலை நோக்கி ஓடி சென்ற தர்ஷனை சிரிப்போடு பின் தொடர்ந்த வேதாந்த் தங்கள் முன்னே சென்று கொண்டிருந்த க்ருதியை பார்த்தபடி நடக்க தொடங்கினான்.
“ஸர் எனக்கு நிஜமாவே சாமி நம்பிக்கை இருக்கு. மர்டரர் விஷயத்துல நீங்க சொன்னது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியல.. ஆனாலும் நீங்க சொல்றதால நான் நம்புறேன் ஸர். உங்களுடைய கணிப்பு என்னைக்குமே தப்பா போகாது..” என்று பேசிக்கொண்டே வந்தவனிடம் “ஒரு நிமிஷம்” என்றான்.
“என்ன ஆச்சு ஸர்?” என்றிட க்ருதியை பார்த்திருந்த வேதாந்தின் கண்கள் இடுங்க அவன் செவிகள் கூர்மை பெற்றது.
நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்க அவனுக்கு பின்னே நான்கடி தொலைவில் மிருதுளாவின் கால் கொலுசில் ஒன்று தென்பட்டது.
வேதாந்தின் பார்வையை தொடர்ந்து தர்ஷன் “ஸர் யாரோ கொலுசு தவற விட்டு இருக்காங்க..” என்றபடி ஓடி சென்று அதை எடுக்க முயல “ஹே ஸ்டாப்..” என்று தடுத்தான் வேதாந்த்.
அவன் புரியாமல் பார்க்க இரண்டே எட்டில் அங்கே வந்தவன் கீழே குனிந்து கொலுசை எடுத்து, “எல்லாமே எவிடன்ஸ் உன் இஷ்டத்துக்கு எடுக்க கூடாது” என்றான்.
“ஸர் கொலைகாரன் கொலுசு போட்டு இருப்பானா? அதிகபட்சம் காதுல கடுக்கன் இல்ல கையில காப்பு போட்டு இருக்க வாய்ப்பு இருக்கு.. எப்படி பார்த்தாலும் கொலுசுக்கு வாய்ப்பு இல்லையே ஸர்..” என்று சொல்ல வேதாந்திடம் கட்டுப்படுத்த முடியாத சிரிப்பு.
“ஸர் இதுவும் புதுசா இருக்கு..” என்றான் அவனும் சிரிப்போடு.
“புதுசா?!” என்று வேத் சிரிப்போடு கேட்க, “ஆமா ஸர் ரொம்பவே புதுசா இருக்கு..” என்றான்.
“புதுசா இருந்தா என்ன மேன்? நல்லா இருக்குல்ல.. அதை மட்டும் பாரு..”
“ஸர் எதை சொல்றீங்க?”
“கொலுசை சொல்றேன் நல்லா இருக்கு தானே?!” என்று கேட்க ‘என்ன பதில் அளிப்பது’ என்று புரியாது தர்ஷன் திருத்திருத்தான்.
“இப்போ நீ வரியா இல்ல எஸ்சே எழுத போறியா?” என்றதும் அமைதியாக அவனுடன் நடந்தான்.
வேதாந்த் சென்ற நேரம் மிருதுளா இருக்கைகளையும் கூப்பி கண்களை மூடி மனதார வேண்டிக் கொண்டிருந்தாள்.
வேதாந்தின் பார்வை முழுக்க க்ருதியின் மீது இருக்க “ஸர் சாமி அந்த பக்கம்..” என்றான் தர்ஷன்.
“ஒவ்வொருதருக்கும் சக்தியின் வடிவம் வெவ்வேறா இருக்கும்னு நான் ஒரு லைன் சொன்னேனே அது ஞாபகம் இருக்கா மேன்?” என்றான்.
“அப்படியா? இது எப்போ ஸர் சொன்னீங்க?”
“ப்ச், போலீஸ்காரன் ஷார்ப்பா இருக்க வேண்டாமா? ஆமா நீ நான் பேசினதை முழுசா கேட்டியா இல்லையா?”
“ஸர்!!”
“நீ சரிபட்டு வரமாட்ட, கோவில்ல இருந்து கிளம்பினதும் நான் பேசினதை கட்டுரையா எழுதி அனுப்பிட்டு ஸ்டேஷனுக்கு வர நீ..” என்றதில் அரண்டு போனவன்,
“ஸாரி.. ஸாரி ஸர் நான் ஏதோ நியாபகத்துல சொல்லிட்டேன்.. இப்போ நியாபகம் வந்துடுச்சு..”
“கோவிலுக்கு வந்தா மனசு ஒரு நிலையில இருக்கணும் கண்ட படி அலைய விடக்கூடாது.. நம்முடைய சக்தியை தவிர நமக்கு வேற சிந்தனை இருக்க கூடாது. புரிஞ்சதா மேன்?..” என்றவனின் விழிகள் தன் எதிரே எழிலோவியமாய் நின்றிருந்தவள் மீது அலை மோதிக்கொண்டு இருந்தது.
“இப்போ புரிஞ்சுடுச்சு ஸர்..”
“என்ன புரிஞ்சது?”
“இல்ல ஸர் எனக்கான சக்தி வலது பக்கம் இருக்கிற கருவறையில் இருக்கார் ஆனா உங்களோட சக்தி உங்களுக்கு எதிர்லயும் இருக்கலாம் என்பது வரை புரிஞ்சது.. ஆனா அது சரியா தப்பான்னு தான் தெரியல…”
“யோவ், போலீஸ்காரன் எந்நேரமும் அலெர்ட்டா இருக்கணும். அதுதான் சாமி கும்பிடுறதை கூட விட்டுட்டு இந்த கொலுசு இவங்களோடதா இருக்க வாய்ப்பு இருக்குமான்னு கன்ஃபார்ம் பண்ணிட்டு இருக்கேன்..”
“அதுக்கு அவங்களோட காலை தானே ஸார் பார்க்கணும்.. நீங்க முகத்தை பார்த்துட்டு இருக்கீங்க.. அதுதான் எனக்கு டவுட் வந்துடுச்சு. தப்பா இருந்தா மன்னிச்சுடுங்க ஸார்..”
“யோவ் ஒன்பது கிரகமும் உச்சத்தில் இருக்கும் ஒருவன் காலை பார்த்தும் கண்டுபிடிக்கலாம் முகத்தை பார்த்தும் கண்டுபிடிக்கலாம்..” என்றான் மீசை துடிக்க.
“ஸார் இதுவும் புதுசா இருக்கு!! ஆனா எனக்கு தான் ஒண்ணுமே புரியல..”
“புதுசாவா?”
“ரொம்பவே புதுசா இருக்கு ஸார்..” என்ற அதே நேரம் கண்களைத் திறந்த மிருதுளா தன் எதிரில் இருந்த வேதாந்தை எதிர்பாராது அரண்டு போனாள்.
‘இவர் எங்கே இங்க?!’ என்று மனம் படபடக்க பார்வையை திரும்பியவள் அதன் பிறகு அவன் பக்கம் திரும்பவே இல்லை.
அர்ச்சகர் கூடையை கொடுக்கவும் நொடியும் தாமதிக்காமல் வாங்கிக் கொண்டு வேகமாக திரும்பி நடந்தாள்.
“மித்து எங்க போற? கோவிலுக்கு வந்தா ரெண்டு நிமிஷமாவது உட்கார்ந்துட்டு போகணும். பிரகாரத்தில் உட்காரலாம் வா..” என்று அழைத்தாள்.
“டைம் ஆச்சு தேஜு…” என்றவளுக்குமே பொதுவாக கோவிலுக்கு வந்தால் சில நிமிடங்கள் அமர்ந்து தியானிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் இப்போது ‘வேத் அங்கிருக்கும் நிலையில் முடியுமா?’ என்று தெரியவில்லை.
‘முடியுமா?’ என்பதை விட வேதாந்த் இருக்கும் இடத்தில் நிச்சயம் மிருதுளா இருக்கக் கூடாது. அப்படி அவள் இருப்பது மட்டும் வாசுதேவனுக்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்று அவளால் நினைத்துப் பார்க்க கூட முடியவில்லை.
“என்ன யோசனை? அதெல்லாம் இன்னும் நேரமிருக்கு, வா உட்காரலாம்” என்று அவள் கையை இழுத்து அமர்ந்தினாள் தேஜஸ்ரீ.
அவள் அமர்ந்த அடுத்த நொடி வேதாந்த் அவளுக்கு எதிரில் அமர்ந்தான்.
இதை க்ருதி சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. ‘இத்தனை நாட்கள் இல்லாமல் இன்று, இப்போது, ஏன் இப்படி?’ என்ற கேள்வி அவளை சுழற்றி அடித்து கொண்டிருந்தது.
“எத்தனை முறை சொல்ல?! நிச்சயமா உன்னோட குரலுக்கு உனக்கு சினிமாவுல ஈசியா பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும்னு ஆனா நீதான் அதை கண்டுக்கவே இல்ல.. இப்போ பார்த்தியா உன்னை தேடி வாய்ப்பு வந்திருக்கு. எதை நினைச்சும் பயப்படாதே..” என்று அவள் கையைப் பிடிக்க அது வியர்வையில் குளித்து சில்லிட்டு போயிருந்தது.
“ஹே! என்ன உன் கை இப்படி இருக்கு?.. இதோ பார் மித்து உனக்கு இருக்கிற எக்ஸ்பீரியன்ஸ்க்கு முதல் பாட்டுன்னு கண்டுபிடிக்க முடியாத அளவு சரளமாகவே பாடுவ.. எதுக்கு பயப்படுற?” என்றவளிடம் ‘அவளுடைய பயம் எதனால்?’ என்று க்ருதியால் எளிதாக சொல்லிவிட முடியாதே?!...
எந்த பதிலும் சொல்லாமல் கையில் இருந்த பூஜை கூடையை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
அதே நேரம் வேதாந்தை கண்டு கொண்ட தேஜு “ஏய் மித்து, நம்ம எதிர்ல உட்கார்ந்து இருக்கிறவர் ஏசிபி தானே?! பேர் கூட அவரை போலவே ரொம்ப அழகா இருக்கும் ஆனா சட்டுன்னு ஞாபகம் வரல..” என்று மிருதுளாவின் காதை கடித்தால்.
“அவங்க யாரா இருந்தா உனக்கு என்ன? வந்த வேலையை மட்டும் பாரு..”
“இல்லைப்பா நான் அவரை நிறைய இன்டர்வியூல பார்த்து இருக்கேன்.. ரொம்ப ஹாண்ட்ஸமா இருக்காருல?!” என்றதுமே,
“போகலாமா?” என்றாள் மிருதுளா.
“என்ன அவசரம்? இவ்ளோ பக்கத்துல இப்போ தான் பார்க்கிறேன், ஒரு ரெண்டு நிமிஷம் சைட் அடிச்சிட்டு வரேன் வைட் பண்ணு..”
“அடிப்பாவி!! கோவிலுக்கு வந்துட்டு என்ன வேலை பண்ணிட்டு இருக்கிற? நான் கிளம்புறேன்..” என்று எழ அவள் கையை பிடித்து அமர்த்தினாள் தேஜு.
அதேநேரம், “ஸர் கொலுசு அவங்களோடது தானா? இவ்வளவு நேரமா இன்வெஸ்டிகேட் பண்ணிட்டு இருந்தீங்களே ரிசல்ட் கிடைத்ததா?”
“இன்னும் கிடைக்கல தர்ஷன். ஏதாவது பாசிட்டிவ் சைன்ஸ் இருக்கான்னு பார்த்தேன் இப்போ வரை இல்லை..” என்றவன் எதிரில் இருந்தவர்களிடம் “எக்ஸ்கியூஸ் மீ” என்றிட மிருதுளா தேஜுவின் பேச்சு தடைபட்டது.
“சொல்லுங்க ஸர்..” என்றாள் தேஜஸ்ரீ.
“இஃப் யூ டோன்ட் மைண்ட், கொஞ்சம் விபூதி கிடைக்குமா?” என்றான் வேதாந்த்.
“விபூதியா?”
“ஆமாங்க, ஏசிபி ஸர் ஒரு முக்கியமான மர்டர் இன்வெஸ்டிகேஷன்ல இருக்கார். அவருக்கு அவசர கால் வந்ததால பேசறதுக்கு போனவர் முடிச்சுட்டு அப்படியே இங்க வந்துட்டார். இப்போ போகலாம்னு பார்த்தா உள்ள சரியான கூட்டம், அதனால தான் கேட்கிறார்..” என்றான் தர்ஷன்.
“அதுக்கு என்ன ஸர்?! உங்களுக்கு இல்லாத விபூதியா?..” என்றவள் “மித்து விபூதி கொடு..” என்றாள்.
“நான்.. நானா?”
“என் கையில் இருந்ததையும் உன்கிட்ட தானேடி கொடுத்தேன்” என்றிட மிருதுளாவின் விரல்கள் அவளையும் அறியாமல் தன் உள்ளங்கையை அழுத்தியது.
பொதுவாகவே கோவிலுக்கு வரும் போது எல்லாம் விபூதி குங்குமம் வாங்கினால் அதை கூடையில் வைக்காமல் அப்படியே வைத்திருந்து அப்பா அண்ணன் என்று அனைவருக்கும் தன் கையாலேயே வைத்து விடும் பழக்கம் கொண்டிருப்பவள்.
அதே பழக்கத்தில் இப்போதும் தன் கையில் வைத்திருந்தவள் தேஜு கேட்டதும் அவள் கைக்கு மாற்ற முயல வேதாந்தின் கண்கள் ஒருநொடி சுருங்கி விரிந்தது.
“பிரசாதம் கை மாறக்கூடாது மித்து நீயே கொடு..”
“அது..” என்று க்ஷணப்பொழுது தயங்கினாலும் மௌனமாக விபூதியை அவர்கள் முன் நீட்ட இரு கைகளையும் கட்டிக்கொண்டு தூணில் சாய்ந்து அமர்ந்திருந்த வேத் க்ருதியின் உணர்வுகளை அவதானித்துக் கொண்டிருந்தான்.
தர்ஷன் விபூதி எடுத்துக்கொள்ள இன்னும் அதே நிலையில் அமர்ந்திருந்த வேத் தன் பார்வையையும் மாற்றினான் இல்லை.
இதை கவனித்த தேஜுவிற்கு ஒன்றும் புரியவில்லை.
நேரம் செல்ல உள்ளங்கையை பார்த்திருந்த மிருதுளா மெல்ல தன் பார்வையை உயர்த்திய நொடி வேதாந்தின் விரல் அவள் உள்ளங்கையில் மென்மையாய் அழுத்தியது.
மனமெங்கும் ‘சீக்கிரமே இங்கிருந்து கிளம்பி விட வேண்டும்’ என்ற வேண்டுதல் வைத்தபடி இருந்தவள் அவன் அழுத்தத்தை எதிர்பாராது விழி உயர்த்தி வேதாந்தை பார்க்க, “தேங்க்ஸ் அன்ட் ஃபர்ஸ்ட் டைம் க்ருதி மூவில சாங் பாட போறதுக்கு மை பெஸ்ட் விஷஸ்!!” என்றான் புன்னகையோடு.
மின்னலென பளிச்சிட்ட அவன் புன்னகையை சுத்தமாக மிருதுளா எதிர்பார்க்கவில்லை. எவ்வித கல்மிஷமும் இல்லாத நேச நகையை கூட அவளால் இயல்பாக எடுத்துக்கொண்டு புன்னகைக்க முடியவில்லை.
‘எப்படி முடியும்?! அன்று மட்டும் வேதாந்த் அவள் வீட்டிற்கு வராமல் போயிருந்தால்.. வந்தவன் தன் தந்தையிடம்..’ என்று தன் எண்ணம் செல்லும் போக்கில் திடுக்கிட்டு போனாள் பெண்.
‘எதையும் நினைக்க வேண்டாம்!!.. முடிந்தவரை இயல்பாக கடந்து செல்’ என்று அவள் மனம் எடுத்து சொன்ன போதும் ஏதோ ஒரு இனம்புரியா அலைகழிப்பு!!
Comments
Post a Comment