தீராத காதல் தொல்லையோ - 4.2
“நிஜமாவே நீ என்னோட அருமையை உணர்ந்து என்னோட முக்கியத்துவம் புரிஞ்சு தான் அன்னைக்கு நைட் என்னை தேடி வந்தியா?” என்று கேட்க ரிஷி தூக்கி வாரிப்போட மனைவியை பார்த்தான்.
“சொல்லு உன்னை தான் கேட்கிறேன்…” என்ற போதும் அவனிடம் பதிலில்லை.
“அன்னைக்கு கூட நீ என்னை புரிஞ்சுகிட்டு நான் உனக்கு யாருன்னு உணர்ந்து என்னை தேடி வரலை, நீ நம்பினவங்க உனக்கு துரோகம் செய்து ஏமாற்றினதால தானே என்னை தேடி வந்திருக்க… ஒருவேளை அவங்க அப்படி செய்யாம போயிருந்தா நீ என்னை நிச்சயம் தேடி வந்திருக்க மாட்ட அப்படி தானே?!” என்றதில் ரிஷி பேச்சற்று போனான்.
பின்னே! எப்படி அவனால் அதை மறுக்க முடியும்? அன்று சிந்து வயதுக்கு வரவில்லை என்பது தெரியும் வரையிலுமே கடனை அடைக்கும் முயற்சியில் நிற்க நேரம் கூட இல்லாமல் ஓடிக்கொண்டு தானே இருந்தான்.
அன்றைய நாள் அவன் வாழ்வை தலைகீழாக புரட்டி போட்டதோடு மனைவியின் அருமையையும் அவனுக்கு உணர்த்தியது என்பதை அவனால் எப்படி மறுக்க முடியும். அதனால் தானே அவளுடைய டியூ டேட் நினைவு வந்து மருத்துவமனைக்கு அழைத்து பேசி உறுதி செய்தான்.
“உன்னோட டேட் எனக்கு தெரியும் லச்சு.. அதோடு அன்னைக்கு கூட அத்தனை முறை எனக்கு கால் பண்ணி இருந்த...” என்றவனை இடையிட்ட மகா, “நான் கேட்ட கேள்வி உனக்கு புரிஞ்சதா இல்லையா?” என்றவள் ரிஷியின் மௌனத்தில்,
“சரி என்னோட டியூ டேட் தெரியும்னு சொல்றவனுக்கு அன்னைக்கு தான் என்னை தேடி வரும் வழி தெரிஞ்சதா? அதுக்கு முன்னாடி வரை ஸார் என்ன பண்ணிட்டு இருந்தீங்க?” என்று அவனை ஆழ்ந்து பார்த்தவள்,
“இன்னைக்கு இவ்ளோ தூரம் என் மேல இருக்கிற அக்கறைன்னு சொல்லி பேசறவனுக்கு அன்னைக்கு உன் பிள்ளைகளை சுமந்துட்டு இருக்கிறவளுக்கு கஷ்டம் கொடுக்க கூடாதுன்னு தெரியலையா? அதுக்கு முன்னாடி என் நியாபகம் வரலையா இல்லை என் வீட்டுக்கு வழி தெரியலையா?” என்றவளின் வேதனை நிரம்பிய வார்த்தையில் ரிஷியின் குற்ற உணர்வு அதிகரித்தது.
“நான் பொய் சொல்ல விரும்பல ஆனா அப்போ இருந்த சூழல்ல எனக்கு..” என்றவன் அதற்கு மேல் தொடர முடியாமல் மௌனமாக நின்றான்.
மகாவின் பார்வை அவனை விட்டு அகலாமல் இருக்கவும், “தப்புதான் லச்சு. என்னோட ஈகோ ஏன் அறிவை மொத்தமா மழுங்கடிச்சுடுச்சு நீ கேட்ட எந்த கேள்விக்கும் என்னால பதில் சொல்லவும் முடியாது. நீ இழந்த அத்தனையும் என்னால மீட்டு கொடுக்கவும் முடியாது..” என்றான் காற்றாகி போன குரலில்.
“அப்போ எதுக்கு டா பாண்டிச்சேரியில எங்களை பார்த்ததுமே கட்டி பிடிச்சு கொஞ்சின? எப்பவும் போல விலகி போயிருக்கலாமே?! அட்லீஸ்ட் அதுக்கு அப்புறம் கூடவா உனக்கு என் பிள்ளைகள் ஞாபகம் வரலை?” என்று கேட்க முகம் கசங்கி போய் நின்றான் ரிஷி.
“என்னை பாருடா!!” என்று அவன் தாடையை பிடித்து நிமிர்த்தியவள், “உன்னோட ஈகோவுக்கு தீனி போட நினைக்கிறவன் அன்னைக்கு எதுக்குடா அப்படி நடந்துகிட்ட? அதுக்கு அப்புறம் உனக்கு எங்க நியாபகம் இல்லாம போயிருக்கலாம் ஆனா எனக்கு உன் ஞாபகம் வந்துச்சுடா..”
“ஒவ்வொரு நாளும் குழந்தைகளுக்காகவாவது நீ என்னை தேடி வந்துட மாட்டியான்னு எத்தனை எதிர்பார்த்தேன் தெரியுமா? ஆனா ஈகோவுக்கு தீனி போடற வேகத்துல எங்களை பற்றி எங்கயும் யோசிக்கலை..” என்றவளின் ஒவ்வொரு பேச்சிற்கும் அவள் பிடியின் அழுத்தம் அதிகரிக்க ரிஷியின் உதட்டில் அப்படி ஒரு வலி.
“வலிக்குது லச்சு..” என்றதில் அவனை விட்டவள், “எங்க அம்மா நீ அனாதைன்னு சொன்னாங்க ஆனா உன்னால என் அப்பா அம்மா குடும்பம்னு எல்லாருமே இன்னைக்கு அன்னியப்பட்டு போனது இல்லாம என் குழந்தைகளையும் உன் பக்கம் இழுத்து நீ தான்டா என்னை அனாதை ஆக்கி இருக்க..”
“எந்த நம்பிக்கையில் நான் உன் கூட வாழ வருவேன்னு அப்ராட்ல போய் உட்கார்ந்து இருந்த? இரட்டை குழந்தைகள் என்று தெரிந்ததுமே நான் எவ்வளவு சந்தோஷப்பட்டேன்னு உனக்கு நல்லா தெரியும். அவங்களை எப்படி பார்த்துக்கணும் எப்படி வளர்க்கணும்னு அவங்க என் வயிற்றிலிருந்த ஒவ்வொரு நாளையும் நீ காது கொடுத்து கேட்கிறாயோ இல்லையோ நான் சொல்லி இருக்கேன் அதெல்லாம் தெரிஞ்சு ஒன்றரை வருஷம் எங்களை தனியா விட்டு பிரிஞ்சு இருக்கு உன்னால எப்படி முடிச்சது?”
“என்னமோ எனக்காக இதெல்லாம் பண்ணினதா இன்னைக்கு இத்தனை பேரும் தூக்கி தூக்கி வச்சு கொண்டாடறாங்க இல்லை எனக்கு புரியல உன் அக்கா அம்மாவோடு வேஷம் கலையாம போயிருந்தா என்னைக்குமே நீ என்னை தேடி வந்திருக்க மாட்ட.. இது கூட இவங்களுக்கு புரியலை. அந்தளவுக்கு எமோஷனல் இடியட்ஸ்ஸா இருக்காங்க..”
“ஆனா நான் அப்படி கிடையாது. என்னோட முடிவுல எந்த மாற்றமும் கிடையாது.. என் வாழ்க்கையில இனி நானும் என் குழந்தைகளை மட்டும் தான்! உனக்கு என் மனசுலயும் இடம் கிடையாது என் வாழ்க்கையிலயும் கிடையாது.. நீ போகலாம்” என்றாள் தீர்க்கமான குரலில்.
மனைவியின் வார்த்தையில் பதறிப்போன ரிஷி, “லச்சு ப்ளீஸ்..” என்று அவள் கையை பிடித்ததும் தான் தாமதம் அடுத்த நொடி அவன் கன்னம் தீயாய் எரிந்தது.
“என் மேல கை படக்கூடாதுன்னு சொன்னேனா இல்லையா?” என்று ஆவேசமாக கேட்டவள், “என்னை தொட்ட இது தான் நடக்கும், டேய் இன்னிக்கு எல்லாருக்கும் நீ கொண்டு வந்திருக்க பணமும் சொத்தும் பெருசா தெரியுதே தவிர்த்து நானோ என்னோட வலியோ தெரியல…”
“இதுக்கு காரணம் நீ! உன்னை பார்க்க பார்க்க என்னோட கோபம் அதிகம் ஆகுது. உன் மூஞ்சி நான் இழந்ததை எல்லாம் ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கு. எனக்காக, எனக்காகன்னு சொல்லி நீ செஞ்ச எல்லாமே என்னை சந்தோஷப்படுத்தலை என் காயத்தை இன்னும் ஆழமாக ஆக்கி இருக்கு அதாவது உனக்கு புரியுதா இல்லையா?” என்று கண்ணீரோடு கேட்டவள் அப்படியே மெத்தையில் தளர்ந்து சரிந்து தலையணையில் முகம் புதைத்து அழ தொடங்கினாள்.
“ப்ச் இதெல்லாம் நான் சொல்றதால மட்டும் எதுவும் மாறிடப்போகுதா என்ன? என் வாழ்க்கை எப்படி இருக்கணும்னு எவ்ளோ கனவு கண்டேன்.. ஆனா எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பனை வேணும் எனக்கு அது இல்லை..” என்று அழுகையினூடே சொன்னவள் தேம்பி அழத்தொடங்கி விட்டாள்.
மனைவியை பார்த்திருந்த ரிஷியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
“வயசுக்கே வராதவளுக்கு நீ சீர் செய்ததை பற்றியோ உன் அக்கா அம்மாவை பற்றியோ நான் பேசவே விரும்பலை. நீயே எனக்கு யாருமில்லைன்னு ஆன பிறகு அவங்களை பற்றி பேசி என்ன ஆகப்போகுது?” என்றவளின் அழுகை இன்னும் அதிகரித்தது.
“இது நான் பிறந்து வளர்ந்த வீடு! எவ்ளோ செல்வாக்கா செல்லமா வளர்ந்தேன் ஆனா இன்னைக்கு நீ வந்ததால, உன்னால அன்னியப்பட்டு போயிருக்கு..” என்றவளின் கண்ணீர் குறைந்தபாடில்லை.
இதற்கு தான் என்றில்லிலாமல் அனைத்தையும் நினைத்து அவள் கண்ணீர் பெருகி கொண்டே இருக்க மெல்ல மனைவி எதிரில் மண்டியிட்டு அமர்ந்த ரிஷி, “ப்ளீஸ் லச்சு அழாத. நிச்சயமா நான் உன்னை கஷ்டபடுத்த இங்கே வரலை. நான் உனக்கு செய்த அநியாயத்துக்கு எல்லாம் மன்னிப்பு கேட்டு உன்னை கூட்டிட்டு போக தான் வந்தேன்..”
“ஆனால் என்னையும் அறியாமல் உனக்கு இவ்ளோ வேதனை கொடுப்பேன்னு நானே நினைச்சு பார்க்கலை. இப்படி நடக்கும்னு தெரிஞ்சிருந்தா எந்த நிலையில் இருந்தாலும் உன்னை தேடி வந்திருப்பேன்…”
“நீ எத்தனையோ விஷயம் கேட்ட? என் கிட்ட எதற்குமே பதில் இல்லை. கையில் கிடைச்ச பொக்கிஷத்தோட மதிப்பு தெரியாம இருந்தேன். ஆனா ஒரு விஷயத்துக்கு மட்டும் என்கிட்ட பதில் இருக்கு ஒரு உறுதியை என்னால நிச்சயமா கொடுக்க முடியும் என் வாழ்நாள் முழுக்க அதை காப்பாற்றவும் முடியும்..” என்ற போதும் மகாவின் அழுகை குறைந்தபாடில்லை.
“நீ என்னை அடிச்சாலும் பரவால்ல..” என்றவன் சட்டென மகாவை இழுத்து அணைத்துக்கொண்டான்.
“விடுடா என்னை..” என்று மகா விலக பார்க்க, “முடியாது லச்சு! என்னால நீ அழறதை தாங்க முடியலை..” என்றிட அவன் முதுகிலேயே ஓங்கி அறைந்தவள்,
“இன்னைக்கு என்னடா உனக்கு இவ்ளோ அக்கறை? உன்னால் நான் எத்தனை நாள் அழுதிருக்கேன்னு தெரியுமா? இப்போ மட்டும் வந்துட்டான்!! போடா எனக்கு நீ தேவையில்லை..” என்றவள் கைகள் அவனை அடிப்பதை மட்டும் நிறுத்தவே இல்லை.
“ஐ’ம் ஸாரி, பொண்டாட்டியை அழ விடறவன் ஆம்பளையே கிடையாது லச்சு! இனி உன்னை நான் அழ விடமாட்டேன். நீ அழுகையை நிறுத்தினா தான் விடுவேன்..” என்றவன் அவளை இறுக அணைத்துக்கொண்டு மெல்ல அவள் முதுகை வருடி விட மகாவின் கைகள் தளர்ந்து கீழே இறங்கியது.
“ஸாரி லச்சு ஐ’ம் வெரி ஸாரி..” என்றவன் அவள் எதிர்பாரா நேரத்தில், “இதுக்கும் சேர்த்து நீ என்னை அடிச்சுக்கோ..” என்று அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட மீண்டும் அவனை அடித்து,
“ராஸ்கல், மரியாதையா என்னை விடு இல்லை உன்னை கொன்னுடுவேன்..” என்றாள் சீற்றத்தோடு.
“நான் பண்ணினதுக்கு நீ என்னை கொன்னாலும் தப்பில்லை லச்சு. என் பொண்டாட்டி கையால சாகவும் தயாரா இருக்கேன்..” என்றவன் முத்தம் அவள் நெற்றியில் அழுத்தம் பெற்றது.
“இப்படியெல்லாம் செய்றதால என்னை மயக்கிடலாம்னு நினைக்காத. உன்னோட பார்வைக்கே மயங்கின அந்த மகாலட்சுமி நான் இல்லை.. போடா பொறுக்கி! போய் தொலை என் கண்ணு முன்னாடி வந்துடாத!” என்றவள் அவன் தோள்பட்டையில் வலுவாக கடித்து வைத்த போதும் ரிஷி அவளை விடுவதாக இல்லை.
“நான் அப்படி நினைக்கலை. இன்ஃபாக்ட் உன்னோட பேரன்புக்கும் பெரும் காதலுக்கும் நான் தகுதியானவனே கிடையாது. இப்போ கொஞ்சமாவது தகுதி படுத்திக்கிட்டேன்னு நினைச்சிருந்தேன் ஆனா மொத்தமா உன்னை இழப்பேன்னு சத்தியமா நினைச்சு பார்க்கலை..”
“ஸாரி லச்சு! இது வெறும் வார்த்தை இல்லை ஆத்மார்த்தமா என்னோட தப்பை உணர்ந்து கேட்கிற வார்த்தை..” என்று அவள் கன்னத்தில் மீண்டும் முத்தமிட்டு, “என்னை மன்னிச்சுடு” என்றான்.
அதுநேரம் வரை அவன் அணைப்பில் இருந்து விடுபட போராடிக்கொண்டு இருந்தவள், “நான் சொல்றது கேட்கலையா? முதல்ல என்னை விடுடா! நான் அழலை. என்னை விட்டுட்டு பேசு கேட்கிறேன்..” என்று பலம் கொண்ட மட்டும் அவனிடம் இருந்து விலக முயன்ற போதும் அவன் அணைப்பு இன்னும் இறுகி அவளை மூச்சடைக்க செய்தது.
“இவ்ளோ நாள் என்னை கொஞ்சம் கொஞ்சமா சாகடிச்சது போதாதுன்னு மொத்தமா சாகடிக்க முடிவு பண்ணிட்டியா? விடுடா மூச்சு முட்டுது..” என்ற பிறகே மனைவியை விடுவித்தான்.
Comments
Post a Comment