தீராத காதல் தொல்லையோ - 4.2
வேக மூச்சுக்களை எடுத்தபடி, “யூ!! யூ!! ராஸ்கல் உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா…” என்று தீயாய் முறைத்தவள், “இதோபார் நீ என்ன ஜாலம் கட்ட நீனைச்சாலும் எதுக்கும் மயங்குற ஆள் நான் இல்லை. காட் இட்!!”
“லச்சு நான் சொல்றதை..”
“இல்லை நீ எத்தனை சப்பை கட்டு கட்டினாலும் அதை ஏத்துக்க நான் தயாரா இல்லை.. இந்த ஒரு வருஷத்துல நீ இல்லாம எப்படி வாழணும்னு நான் கத்துக்கிட்டேன். நான் வாழறது மட்டுமில்லை என் பிள்ளைகளுமே நீ இல்லாம தான் வளர்ந்துட்டு இருக்காங்க..” என்றவளின் பேச்சு ரிஷி அவள் பாதத்தில் கொடுத்த முத்தத்தில் தடைபட்டது.
திகைப்போடு கணவனை பார்க்க, “பலமுறை எனக்கு நீ யார்னு கேட்டுட்டிருக்க ஆனா நான் பதில் சொன்னதில்லை. சொன்னதில்லை என்பதை விட கோபத்துல என்னோட ஈகோ என்னை சொல்ல விட்டதில்லை..”
“இப்போ சொல்றேன் லச்சு, நீ தான் நான்!! நீ இல்லாம நான் இல்லை. நீதான் என்னோட எல்லாமே!! உன்னை இழந்து ஒரு வாழ்க்கையை என்னால வாழ முடியாது..” என்று மீண்டும் அவள் பாதத்தில் முத்தமிட்டவன்,
“உன்னளவுக்கு நான் யோசிக்கலை. நிஜமாவே அன்னைக்கு நீ வீட்டை விட்டு கிளம்பின போது கஷ்டத்துல என்னோடு இல்லாம போயிட்டன்னு எனக்கு உன் மேல கோபம் இருந்தது. நான் இல்லைன்னு சொல்ல மாட்டேன்… அந்த கோபம் என்னோடு ஈகோ எல்லாம் சேர்ந்து தான் உன்னை தேடி வராமல் பண்ணிடுச்சு..”
“ஆனா என் வாழ்க்கையில நான் வாங்கின மரண அடி உன்னை எனக்கு யாருன்னு உணர்த்துச்சு!! சத்தியமா சொல்றேன் நீ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சு பார்க்க கூட முடியாது. ப்ளீஸ் எனக்கு நீ வேணும்!!”
“உன் கோபம் தீர இன்னும் எவ்வளவு வேணும்னாலும் அடி, நான் தாங்கிக்கிறேன்.. ஆனா ப்ளீஸ் வீட்டுக்கு போகலாம், என்கூட இருந்து சண்டை போடு, அடி, திட்டு, என்னனாலும் பண்ணு ஆனால் என்னை விட்டு விலகி இருக்காத. ப்ளீஸ் லச்சு எனக்கு நீ வேணும்..” என்று முகம் புதைத்தவன் கண்ணீர் அவள் பாதத்தை சுட்டது.
“நீ நினைக்கிற மாதிரி இல்லை. எனக்கும் உன்னை பார்க்க மலையளவு ஆசை இருந்தது. ஆனா அப்போ பேச முடியாம நடக்க முடியாம நான் இருந்த நிலைமையில் இரண்டு குழந்தைகளோடு இருக்கிற உனக்கு எந்த கஷ்டமும் கொடுக்க வேண்டாம் என்று தான் நினைச்சேன்..”
“உனக்கு செஞ்ச தப்புக்கு நீ இல்லாமல் நான் கஷ்டப்படுறது தான் எனக்கான தண்டனைன்னு அதை ஏத்துக்கிட்டேன் அதோடு டிவோர்ஸ் நோடீஸ் அனுப்புன நீ என் மேல கோபமா இருக்கிறதா எல்லாருமே சொன்னாங்க. எனக்காக நீ கண்ணீர் விடுறதை விட கோபத்தோட இருக்கிறது நல்லதுன்னு நினைச்சேன்..”
“எப்படியும் கடனை அடிச்சுட்டு உனக்கு ஏத்தவனா வந்து உன்னை சமாதானப்படுத்த நினைச்சேன். ஆனா நான் எவ்ளோ தப்பு பண்ணி இருக்கேன்னு நீ சொல்லித்தான் புரியுது. இனி இந்த தப்பை நான் மறந்தும் பண்ண மாட்டேன் லச்சு..”
“என்னால கடந்து போன காலத்தை மாற்ற முடிஞ்சா நிச்சயமா மாற்றுவேன் ஆனா அந்த சக்தி எனக்கு இல்லை..” என்று அவள் முகம் பார்க்க, “சரி கிளம்பு, போகலாம்” என்றாள்.
மகா சொன்னதை நம்ப முடியாமல் “நிஜமாவா?” என்றான்.
“ஆமா, அதுதான் நீ வந்த பிறகு எனக்கு இந்த வீட்ல இடம் இல்லாம போயிடுச்சுன்னு சொன்னேநே.. அவங்களா என்னை கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளுறதுக்கு முன்னாடி நானா கிளம்புறது தான் எனக்கு மரியாதை கிளம்பு போகலாம்..” என்றதில் சிறகின்றி வானில் பறந்தான் ரிஷிவரதன்.
அவன் கொண்டிருக்கும் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அந்த அளவு அதீத சந்தோஷத்தில் மூச்சை அடைத்தது ரிஷிக்கு!!
இத்தனை நேரம் மனைவி பேசிய பேச்சுக்கு அவனோடு வாழ வரமாட்டாள் என்று தான் நினைத்திருந்தான்.
ஆனால் அவள் காதலை அறிந்திருப்பவன் மனமோ எத்தனை கோபம் இருந்தாலும் மனைவி தன்னை விலக நிலைக்க மாட்டாள் என்ற நம்பிக்கை கொண்டிருந்தது.
இப்போது அது உண்மையானதில் அத்தனை பிரகாசம் கொண்டிருந்தது ரிஷியின் முகம்.
“தேங்க்யூ லச்சு!!” என்று அவள் கன்னத்தில் முத்தமிட முயன்றவனை ஒரு விரலால் தள்ளி நிறுத்தியவள், “ஸ்டாப்! நான் ஏற்கனவே சொன்னது தான், ஜஸ்ட் ஸ்டே அவே ஃப்ரம் மீ..” என்றதில் தன்னை கட்டுப்படுத்தியவன்,
“சரி நான் குழந்தைகளோட திங்க்ஸ் எல்லாம் பேக் பண்றேன்..” என்று அலமாரியில் இருந்த குழந்தைகளின் பொருட்களை சேகரித்து அவள் கொடுத்த பெட்டியில் அடுக்க தொடங்கினான்.
“நான் போய் குளிச்சுட்டு வரேன்..” என்று மகா குளியலறைக்குள் செல்ல அடுத்த அரை மணி நேரத்தில் பக்காவாக அனைத்தையும் எடுத்து வைத்த ரிஷி ஆசையோடு ‘மனைவி தான் கொண்டு வந்த புடவையை கட்டுவாளா?!’ என்று எதிர்பார்த்திருக்க அவளோ அதை சீண்டியும் பார்க்காமல் சுடிதார் அணிந்து கொண்டு வந்தாள்.
“என்ன பார்க்கிற?” என்று ரிஷியை முறைக்க, “ஒண்ணுமில்லை..” என்று அவன் சொல்லவும் அவர்களின் அறைக்கதவு தட்டப்படவும் சரியாக இருந்தது.
மகா கதவை திறக்கவும், “மாப்பிள்ளைக்கு பஜ்ஜி, சமோஸா, கொழுக்கட்டை ரெடியா இருக்கு, அவருக்கு டீயா காஃபியா?” என்றார் பாக்கியலட்சுமி.
“காஃபி” என்ற மகள் தயாராக கிளம்பி நிற்பதை கண்டவருக்கு அத்தனை திருப்தி.
“என்னைக்கும் நீயும் மாப்பிள்ளையும் ஒத்துமையா சந்தோஷமா இருக்கணும் மகா..” என்றவர், “மாப்பிள்ளை உங்களுக்காகவே சுட சுட செய்திருக்கேன் சீக்கிரம் வாங்க..” என்று சொல்லி மகளை கையோடு அழைத்து சென்றார்.
அவர்கள் கிளம்பவுமே அவசரமாக ரிஷி கண்ணாடியில் தன் முகத்தை பார்க்க அவன் உதடு வீங்கி ரத்தம் கட்டி போயிருந்தது.
நிச்சயம் இப்படியே வெளியில் செல்ல முடியாது என்று கன்னத்தில் கை வைத்து அமர்ந்து விட்டான்.
அடுத்த ஐந்தாவது நிமிடம் “ரிஷி எங்கம்மா கூப்பிடுறாங்க..” என்று மகா அறைக்குள் வர, “இப்படியே நான் எப்படி வெளியே வர? எல்லாரும் என்ன நினைப்பாங்க?” என்றான்.
“என்னை கேட்டா? அதை நீ இங்க வருவதற்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்” என்றாள் விட்டேர்த்தியாக.
“லச்சு இன்னும் கோபமா இருக்கியா?” என்றான் அவள் பதிலில்.
“இல்லையே ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..” என்றவள் கிளம்ப, “உன்கிட்ட மாஸ்க் இருந்தா கொடு லச்சு..” என்றான்.
“எதுக்கு?”
“இப்படியே அத்தை மாமா முன்னாடி எப்படி வர முடியும்? அவங்களுக்கு சொல்லாமலும் கிளம்ப முடியாது. ப்ளீஸ்..” என்றதும் மகா மாஸ்க் எடுத்து கொடுக்க முகத்தை கழுவி மாஸ்க்கோடு வெளியில் வந்தான்.
“என்ன மாப்பிள்ளை திடீர்னு மாஸ்க் போட்டு இருக்கீங்க?” என்றார் தினகரன்.
“எனக்கு கோல்ட் இருக்கு மாமா இரண்டு நாள் முன்னாடி வரை ஃபீவரும் இருந்தது..”
“என்ன மாப்பிள்ளை சொல்றீங்க? டாக்டர் கிட்ட போனீங்களா இல்லையா?” என்று அவர்கள் பதற,
“இன்னும் இல்லை மாமா. டேப்லெட் எடுத்ததுல கொஞ்சம் பரவால்ல, எல்லாரையும் பார்க்கிற சந்தோஷத்துல முன்னேற்பாடு இல்லாமல் வந்துட்டேன். அது குழந்தைகளுக்கு இன்ஃபெக்ட் ஆகிட கூடாது இல்லையா? அதனால தான்!!”
“சரி மாப்பிள்ளை..” என்று தினகரன் பேசிக்கொண்டு இருக்க அவனுக்கு சுட சுட ஸ்னாக்ஸ் கொண்டு வந்து வைத்தார் சுமதி.
எதையும் சாப்பிடாமல் அனைத்தையும் பார்த்து கொண்டு மட்டும் அமர்ந்திருந்தான் ரிஷி.
“குழந்தைகள் இன்னும் தூங்குறாங்க மாப்பிள்ளை. இங்க நாங்க தானே இருக்கோம் மாஸ்க் எடுத்துட்டு சாப்பிடுங்க…” என்று சொல்ல அவனுக்கோ தர்ம சங்கடமான சூழல்.
“ஆமா ரிஷி சாப்பிடுங்க. இது என்னோட வைஃப் செய்தது. அவ சமோஸா ஸ்பெஷலிஸ்ட் தெரியுமா? இதுக்கு காம்பினேஷனா கார சட்னி அல்டிமேட்டா இருக்கும். ஒரு சமோஸாவோடு நிறுத்த முடியாது..” என்று கதிர் சொல்ல,
“ஓஒ அப்படியா?” என்று புன்னகைத்தவன், “ஸாரி மாமா இப்போ தான் நியாபகம் வந்தது எனக்கு ஒரு முக்கியமான கால் இருக்கு நான் பேசணும். இதெல்லாம் ரூம்ல போய் சாப்பிட்டுக்கிறேன்..” என்றவன் பிளேட்டை எடுக்க,
“என்ன பார்த்துட்டு இருக்க? போ போய் மாப்பிள்ளைக்கு ப்ளேட் கொண்டு போய் ரூம்ல வை…” என்று மகாவை ஏவினார் பாக்கியா.
இது ரிஷியின் காதிலும் விழ, “இதுல என்ன இருக்கு அத்தை? நான் பார்த்துப்பேன். நீ சாப்பிடு லச்சு..” என்றவன் பிளேட்டை எடுத்துக்கொண்டு அவசரமாக அறைக்குள் சென்றான்.
“பார்த்தியா உனக்கு சின்ன கஷ்டத்தை கூட கொடுக்காம தானே எல்லாம் செய்துக்கிறார். இப்படி ஒருத்தர் கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும்..” என்ற பாக்கியா,
“மாப்பிள்ளைக்கு உன் கையாள காஃபி போட்டு கொண்டு போ..” என்றதை தண்ணீருக்காக வெளியில் வந்ததில் கேட்டு விட்ட ரிஷிக்கு பதறிப்போனது.
“அத்தை லச்சுவுக்கு எதுக்கு கஷ்டம்? எனக்கு காஃபி எதுவும் வேண்டாம்..” என்றான்.
“என்ன மாப்பிள்ளை உங்களுக்கு காஃபி ரொம்ப பிடிக்குமாமே மகா சொல்லி இருக்கா.. ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்க உங்களுக்கு இது கூட செய்யாம எப்படி?”
“இல்லை அத்தை..” என்றவனின் மனமுமே மனைவியின் காஃபிக்கு ஏங்கியது. அவன் மறுத்தாலும் நிச்சயம் மகாவை செய்ய வைப்பார் என்பது தெரியவும் அமைதியானவன்,
“சரி த்தை, கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?” என்றதுமே ஃப்ரிட்ஜில் இருந்து சில்லென்ற தண்ணீர் பாட்டிலை கொண்டு வந்து கொடுத்தார்.
அடுத்த பத்தாவது நிமிடம் மகா காஃபி கோப்பையோடு அறைக்குள் நுழைய பஜ்ஜியை சின்னதாக பிட்டு உதட்டில் படாமல் வாய்க்குள் போட்டு, வலியால் அதை முழுதாக மெல்ல முடியாமல் என்று சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்தான் ரிஷி.
“காஃபி” என்று மகா கொடுக்கவும் பல மாதங்கள் கழித்து மனைவி கையால் கிடைக்கவும் எதையும் யோசிக்காமல் வேகமாக கப்பை எடுத்து வாயில் வைத்தது தான் தெரியும் மறுநொடியே உதட்டில் பட்ட சூட்டில் அலறிக்கொண்டு வாயை பிடித்தான்.
அவன் வாயை பிடித்த வேகத்தில் காஃபி கப் கீழே விழுந்து சிதறியது.
உதட்டிலும் நாக்கிலும் அப்படி ஒரு எரிச்சல். ஏற்கனவே இருந்த காயத்தை சூடான காஃபி இன்னுமே அதிகரித்ததை விடவும் மனைவி கையால் கிடைத்ததை குடிக்க முடியாத ஏமாற்றத்தில் கண்கள் கலங்கி போனது.
வேகமாக எழுந்து தண்ணீரை குடித்தவன், அதே வேகத்தோடு கப்பை எடுத்து போட்டு சுத்தபடுத்தினான்.
“இனி மனைவி தன்னோடு தானே! இந்த காஃபி இல்லையென்றால் என்ன வீட்டுக்கு போன பின்னர் தினமும் அவள் காஃபி தானே!!” என்று மனதை தேற்றிக்கொண்டு வெளியில் வர கேப் அவர்களுக்காக தயாராக இருந்தது.
கதிர் அனைத்து பொருட்களையும் ஏற்றிட பூஜையறையில் கடவுளை வணங்கி விட்டு வந்த மகாவிடம் அறிவுரை சொல்வதற்காக பாக்கியா அழைக்க ரிஷி விடாமல் அவள் கையை பிடித்துக்கொண்டு,
“நேரமாச்சு அத்தை, கிளம்பறோம் அப்புறம் பேசிக்கோங்க..” என்று மகா குழந்தைகளோடு நல்ல நேரத்துல கிளம்ப குடும்பமே அவர்களை மகிழ்ச்சியோடு வழி அனுப்பியது.
ஆனால் ரிஷி கதிரோடு பேசிக்கொண்டு இருந்த நேரத்தில் கேப் டிரைவரிடம் செல்ல வேண்டிய இடத்தை மகா சொல்ல.. அவரோ, “மேம் ஸார் வேற லொக்கேஷன் சொன்னாரே..” என்றான்.
“முதல்ல இங்கே போயிட்டு அப்புறம் அங்க போகணும்..” என்றதில் அடுத்த இருபது நிமிடத்தில் கணவனோடு ஜெய்சித்ராவின் வீட்டிற்கு சென்று இறங்கினாள்.
அதுநேரம் வரை குழந்தைகளை கொஞ்சி கொண்டும் அவர்களோடு பேசிக்கொண்டும் வந்தவன் அப்போது தான் வாகனம் நின்ற இடத்தையும் ஜெயசித்ராவையும் கண்டு, “இங்கே எதுக்கு லச்சு? உன் ஃப்ரெண்ட் கிட்ட ஏதாவது வாங்கனுமா?” என்றான்.
“இல்லை இனி நான் இங்க தான் இருக்க போறேன். ஏற்கனவே வீடு பார்க்க சொல்லி ஜெய் கிட்ட சொல்லிட்டேன்..” என்றாள் அலட்டிக்கொள்ளாமல்.
ஆனால் ரிஷிவரதனோ, “என்ன சொல்ற?” என்றான் உச்சபட்ச அதிர்வோடு.
அதேநேரம் இவர்களுக்காக காத்திருந்த ஜெயசித்ரா “இங்கேயே நின்னுட்டு பேசணுமா உள்ள வாங்க..” என்றபடி பெட்டிகளை கொண்டு சென்றாள்.
“என்ன நடக்குது லச்சு? எதுக்கு வீடு பார்க்க சொன்ன? இவங்க எதுக்காக லக்கேஜ் கொண்டு போறாங்க..” என்றிட ஜெயசித்ராவும் அவள் தங்கையும் வந்து குழந்தைகளை வாங்கி சென்றனர்.
“எனக்காக நீ ஏதாவது செய்யணும்னு நினைச்சா என்னை விட்டு விலகி இரு.. எனக்கு உன்னோடு வாழ விருப்பமில்லை. என் வீட்ல இருந்தா உன்னோடு போக சொல்லி தினமும் என்னை நச்சரிப்பாங்க அதனால தான் தனியா இருக்கிற முடிவுக்கு வந்தேன்…” என்றதில் ரிஷிக்கு பூமியே தட்டாமாலையாக சுழன்றது.
Vacha paru appu
ReplyDelete