தீராத காதல் தொல்லையோ - 4.2
அனலில் இட்ட புழுவாக துடித்த மனதோடு மனைவியை பிரித்து நடைபிணமாக தான் வீடு வந்து சேர்ந்தான் ரிஷிவரதன்.
மருமகள் பேரப்பிள்ளைகளை எதிர்பார்த்து காத்திருந்த சிவபாலன் மகனின் உயிர்பற்ற முகத்தை கண்டு திகைத்து போனார்.
“ஏன் இப்படி இருக்க? லட்சுமி, குழந்தைகள் எங்கே ரிஷி?” என்றவரின் கேள்விக்கு பதில் அளிக்கும் நிலையில் அவன் இல்லை.
கேள்வி கேட்ட படி மகனின் பின்னே செல்ல அவனோ நேரே தன் அறைக்கு சென்று கதவை தாழிட்டான்.
அங்கே தன் அறையில் அவன் செய்திருந்த ஏற்பாடுகள் எல்லாம் அவனை பார்த்து சிரிப்பது போலவே இருந்தது ரிஷிவரதனுக்கு.
பின்னே மனைவி பிள்ளைகளுக்காகவே கடந்த ஆறு மாத காலமாக அவன் பார்த்து பார்த்து தயார் செய்து அறை அல்லவா?!
அவனுடையது பத்துக்கு பன்னிரண்டு அளவு கொண்ட அறை. இத்தனை நாள் அதில் மனைவியும் அவனும் மட்டும் என்பதால் அது போதுமானதாக இருந்தது.
ஆனால் இப்போது ஒன்றுக்கு இரண்டு பிள்ளைகள் என்பதால் அவர்களுக்கான கட்டில், பீரோ, விளையாட்டு பொருட்கள் என்று அனைத்திற்கும் இடம் தேவை என்பதால் அவர்களுடைய அறையை விரிவாக்கம் செய்திருந்தான்.
விரிவாக்கம் செய்ததோடு மட்டுமல்லாமல் வெளிநாட்டில் இருந்தபடியே பிள்ளைகளுக்கான படிக்கட்டு வைத்த இரட்டை கட்டில் அதிலேயே இருவரும் படிப்பதற்கான டேபிள் மட்டுமல்லாமல் இருவருக்கும் தனித்தனியான கார்ட்டூன் கதாபாத்திரங்கள் கொண்ட குட்டி கப்போர்ட் என்று பணத்தைப் பற்றி கவலையே இல்லாமல் செலவழித்து இருந்தான்.
குழந்தைகளுக்கு மட்டுமல்ல மனைவிக்கும் சேர்த்து தான் அவனுடைய விரிவாக்கம் இருந்தது. அத்தனையும் கண்ணீர் மல்க வருடி கொடுத்தவனின் கண்களில் இருந்து கண்ணீர் அவன் அனுமதி இன்றியே வழிய தொடங்கியது.
அவர்கள் தேனிலவின் போது மாலத்தீவுகளில் மகாலட்சுமி பல நேரம் நீச்சல் குளத்தில் வாசம் இருந்ததை வைத்து அவளுடைய பிடித்தத்தை கணித்து மாடியில் தனியாக நீச்சல் குளம் அமைக்க சொல்லியிருந்தான்.
“இப்போ இந்த செலவெல்லாம் பண்ணனுமா ரிஷி?” என்றார் சிவபாலன்.
“என்னப்பா இப்படி கேட்டுட்டீங்க? இதெல்லாம் லச்சுவுகக்கும் குழந்தைகளுக்கும் அவசியம்னு தெரியாதா?”
“தெரியும் பா. இருந்தாலும் கடனை அடைக்க சொல்லிட்டு போனவன் திரும்ப செலவு அதிகமாகும் போது அதுக்காக இன்னும் சில மாசம் அங்கேயே தங்கிடுவியோனு தான் கேட்டேன்.. லட்சுமியை இங்க கூட்டுட்டு வந்துட்டு கூட செலவு பண்ணு நான் வேண்டாம் சொல்லலை..”
“அதெல்லாம் எதையும் யோசிக்காமல் செய்ய மாட்டேன் ப்பா.. மகாவுக்கு ஸ்விம் பண்ண ரொம்ப பிடிக்கும் போல அதனால தான் ஸ்விமிங்கு ஏற்பாடு பண்ணி இருக்கேன். அப்படியே அதிகமானாலும் இங்கே தங்க மாட்டேன்..”
“தேவையான பணத்தை ராம் கிட்ட வாங்கி அப்புறம் கொடுத்துக்குவேன். இதுக்கு மேல இங்கிருந்தா அவனே என்னை சட்டையை பிடிச்சு இழுத்துட்டு வருவான்னு உங்களுக்கு தெரியாதா?” என்றான் சிரிப்போடு.
ஆம் ரிஷி வெளிநாட்டிற்கு சென்றதில் ராமிற்கு சுத்தமாக விருப்பமில்லை. அத்தனை தூரம் செத்துப் பிழைத்தவன் உடனே மனைவி பிள்ளையை பிரிந்து செல்ல வேண்டாம் என்று எத்தனையோ தடுத்தும் ரிஷி தான் கேட்கவில்லை.
வெளிநாட்டில் தனித்திருந்தவன் இதோ, அதோ, அவ்வளவு தான்!! என்று நாட்களை எண்ணி எண்ணி பொழுதுகளை நெட்டி தள்ளி, நித்தமும் காத்திருந்து ஓடி வந்தது எல்லாம் இந்த பிரிவிற்கு தானா?! என்ற கேள்வி அவனை உருக்குலைத்தது.
மனைவி பிள்ளைகளின் வருகைக்காக அவன் மட்டுமின்றி அறையும் அல்லவா காத்திருந்தது. ஆனால் அத்தனை ஏற்பாடும் வீணாகி போனதில் மனம் கனக்க அவன் அழுகை இன்னுமே அதிகரித்தது.
பதினைந்து நிமிடத்திற்கும் மேலாக எந்த சப்தமும் இல்லாமல் போனதில், “ரிஷி..” என்ற சிவபாலனின் வார்த்தை முழுமை பெரும் முன்பாகவே உள்ளிருந்து உரக்க கேட்ட மகனின் தொடர் கதறலில் மனிதர் பயந்து போனார்.
பின்னே! எத்தனை ஏற்ற இறக்கங்கள் வந்தாலும் அதிலெல்லாம் தைரியமாக பயணித்து பல இடர்பாடுகளையும் இன்னல்களையும் கடந்து வந்திருப்பவன் முகத்தில் இறுக்கத்தை தவிர்த்து வேறு உணர்வை அவர் கண்டதில்லை.
ஆனால் இன்று எத்தனை ஆசையோடு மனைவி பிள்ளைகளை அழைக்க சென்றவனின் உயிர்ப்பற்ற முகமே அவருக்கு முதல் அதிர்ச்சி என்றால் மகனின் கதறல் பேரதிர்ச்சி!!
“ரிஷி என்னப்பா ஆச்சு? ஏன் அழற? முதல்ல கதவை திற எனக்கு பயமா இருக்கு..” என்று பல தடவை கதவை தட்டிய போதும் அவன் அழுகை பன்மடங்காக பெருகியதே தவிர்த்து குறையவில்லை.
நேரமாக ஆக சிவபாலனுக்கு என்ன செய்வது என்று புரியாமல் மருமகளுக்கே அழைத்து விட்டார்.
ஆனால் மறுபுறம் அழைப்பு ஏற்கப்படவில்லை.
அவளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் பெட்டியில் இருந்து பிள்ளைகளின் உடையை எடுத்து கொண்டிருந்த தோழியிடம், “ஏன் மகா இப்படி?” என்றாள் ஜெய்.
“எப்படி?”
“ப்ச், ஏன் இப்படி நீயும் கஷ்டபட்டு அவரையும் கஷ்டபடுத்திட்டு இருக்க? இப்படி தனியா கிடந்து அல்லாடறதுக்கு பதிலா ரிஷியோடு போயிருக்கலாமே!!”
“பால் இருக்கா ஜெய்? குழந்தைகளுக்கு கொடுக்கணும், நேரமாச்சு”
“சாமர்த்தியமா பதில் சொல்றதா நினைப்பா?”
“கூட இருந்து கஷ்டபடுறதை விட விலகி இருந்து சந்தோஷத்தை கொடுத்து நாமளும் நிம்மதியா இருக்கலாம் ஜெய். உன் கேள்விக்கு பதில் சொல்லிட்டேன் பால் கிடைக்குமா?”
“ரிஷியோட சந்தோஷமே நீதான் எனும் போது ஏன் இந்த விலகல்னு தான் கேட்கிறேன்..”
“...”
“சரி இந்த பிரிவு உனக்கு நிம்மதியை கொடுக்குமா?” என்றவளின் எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் மகா குழந்தைகளுக்கு உடை மாற்ற தொடங்கினாள்.
அவள் கையை தடுத்து பிடித்து, “உயிர்ப்பில்லாத உன் முகமும் கலங்கி சிவந்து போயிருக்கிற உன் கண்ணுமே பதில் சொல்லுது மகா..”
“அப்படியா? ஓகே தென், உனக்கு தேவையான பதில் கிடைச்சுடுச்சுன்னா என்னை வேலை செய்ய விடுறியா?” என்றாள் ஆழ்ந்த குரலில்.
“எதுக்கு இந்த பிடிவாதம்? எனக்கு உன்னை தெரியும் மகா. சரி உன் அம்மா, அப்பா, அண்ணா எல்லாரும் உன்னை தனியா இருக்க விட்டு விடுவார்கள்னு நினைக்கிறியா?”
“அதை அவர் பார்த்துக்கிறேன்னு சொல்லி இருக்கார்..”
“அப்போ நாளைக்கு உன் குழந்தைகள் அப்பாவை கேட்டா என்ன சொல்ல போற?”
“இப்போ தான் நான் கொஞ்சம் நிம்மதியா மூச்சு விடறேன்.. அது பொறுக்கலையாடி உனக்கு? நீ பாக்கியாவோட மினி வெர்ஷனா இருப்ப போல! எங்கம்மாவை கூட சமாளிச்சுட்டேன் ஆனா உன்கிட்ட முடியாது போல..”
“நீ இங்க இருக்கிறது தெரிஞ்சா நாளைக்கு உன் அம்மா என்னை திட்டுவதோடு நிறுத்தாம நல்ல முதுகுல நாலு வச்சாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை…”
“அப்படி எதுவும் ஆகாது. நீ பயப்படாத! அப்படி இருந்தா சொல்லு நான் மிதுன் கிட்ட சொல்லி வேற அரேஞ்ச்மென்ட் பண்ணிக்கிறேன்..”
“ஹே! என்னடி இது? ரிஷியோட கண்ணெல்லாம் கலங்கி முகமே எப்படி வாடி போயிருந்தது தெரியுமா? அதனால் தான் உன்னோட முடிவை ரீகன்சிடர் பண்ணிட மாட்டியான்னு ஒரு நப்பாசையில் கேட்டேன். அதுக்காக வேற வீட்டுக்கு போவேன்னு சொல்லுவியா?”
“உன்கிட்ட எல்லாமே தெளிவா சொல்லிட்டு தானே கிளம்பி வந்தேன். அப்போ மட்டும் சரின்னு தலையாட்டிட்டு இப்போ பேசுறது சரியா?”
“தப்பு தான் தாயே!! தெரியாம சொல்லிட்டேன் மன்னிச்சுடு. என் அப்பா அம்மாவுக்கு எல்லா விஷயமும் சொல்லிட்டேன் நீ இங்கேயே தங்கலாம். யாரும் உன்கிட்ட எதுவும் கேட்க மாட்டாங்க..”
“வீடு கிளீன் பண்ண அப்பாகிட்ட ஆள் கேட்டு இருக்கேன். இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவாங்கன்னு சொன்னார், உனக்கு ஓகே என்றால் நாளைக்கு மூணாவது போர்ஷன்க்கு நீ குடித்தனம் போயிடலாம்...”
“உன்னோட டைம்லி ஹெல்ப்க்கு ரொம்ப தேங்க்ஸ் ஜெய்..”
“ப்ச், இதிலென்ன இருக்கு. என் அப்பா ஒரு ஆறு போர்ஷன் கட்டி வச்சுருக்கிறதால உடனே உனக்கு வீடு கிடைச்சது. சரி அதை விடு, உன் முகமும் ரொம்பவே டையார்டா இருக்கு, நீ ரெஸ்ட் எடு. நான் குழந்தைகளுக்கு பால் கலக்கி கொடுக்கிறேன்..” என்று அவர்களை அழைத்து கொண்டு வெளியில் சென்றாள்.
அரை மணி நேரம் கடந்த நிலையில் சிவபாலனின் தொடர் அழைப்புகளுக்கு பிறகு கதவை திறந்த ரிஷியின் கண்கள் சிவந்து முகமெங்கும் கண்ணீரின் தடம் வியாபித்திருந்தது.
“என்னப்பா இதெல்லாம்?” என்று பாய்ந்து மகனை அணைத்துக்கொண்டார்.
“நான் ஒரு முட்டாள் ப்பா. சரியா செய்யறதா நினைச்சுட்டு என்னையும் அறியாமல் மேலும் மேலும் தப்பை மட்டுமே தான் செய்துட்டு இருந்திருக்கேன்..” என்று தந்தையின் தோளில் சாய்ந்தவனின் கண்களில் மீண்டும் கண்ணீர் ஊற்றெடுத்தது.
Comments
Post a Comment