தீராத காதல் தொல்லையோ - 4.2
மேலும் பத்து நாட்கள் கழிந்த நிலையில் :
மகனின் வாழ்க்கை அவர் எதிர்பாரா விதமாக மாறி போனதில் சிவபாலனுக்கு சரியான உறக்கம் கிடையாது.
அன்று அதிகாலையும் வழக்கம் போல மூன்றரை மணிக்கே விழித்து விட்ட மனிதர் ஹாலுக்கு வர இருண்டிருந்த அறையில் தன் லேப்டாப்போடு அமர்ந்திருந்தான் ரிஷி.
வழக்கம் போல அவன் விழிகள் வீடியோவில் தெரிந்த மனைவியை விட்டு அகலாமல் இருக்க, சிவந்திருந்த அவன் கண்களில் இருந்து கண்ணீர் கசிந்து கொண்டிருந்தது.
இன்று நேற்றல்ல மகாவை விட்டு பிரிந்து வந்த நாளில் இருந்தே நடக்கும் நிகழ்வு தான்!! சிவபாலனும் எத்தனையோ முயற்சிகள் செய்து மகனை தேற்ற முயன்றார் ஆனால் முடியவில்லை.
தினமும் நாள் முழுக்க அவர்களின் திருமண வீடியோவையும் மாலத்தீவில் எடுத்திருந்த வீடியோ மற்றும் புகைப்படங்களையும் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருந்தானே தவிர இருக்கும் இடத்தை விட்டு பெரும்பாலும் அசைய மாட்டான்.
தன் அறையில் இருந்து அன்று வெளியில் வந்தவன் அதன் பிறகு அங்கே செல்வதே இல்லை.
திரும்பும் இடமெல்லாம் மகாவின் நினைவுகள் மொத்தமாக குவிந்திருக்க, திருமணத்திற்கு பின்னர் முதல் நாள் இதே அறையில் அவளோடு இருந்த தனிமை அவர்களின் மகிழ்ச்சியான தருணங்கள் மகாவின் சிரிப்பும் சிணுங்கலும் அவனை சூழ ரிஷியால் தன்னையே மன்னிக்க முடிவில்லை.
தினமும் காலை அவள் கொண்டு வரும் காஃபியின் வாசமும் மனைவியின் வாசமும் போட்டி போட்டு அவனை ஆக்கிரமிக்க ரிஷிக்கு மூச்சு முட்டியது. மெல்ல மெத்தையில் அமர்ந்து தன்னை ஆசுவாசபடுத்த முயன்று வெற்றிகரமாக தோற்றும் போனான்.
மனைவி உடன் இல்லாத பஞ்சு மெத்தை முள்ளாக குத்தியது. தாரமாக மட்டுமல்லாமல் தன் கடின பொழுதுகளில் எல்லாம் தாயாய் அவள் தன்னை தாங்கியது நினைவில் எழ அப்போது அவன் காட்டிய அலட்சியத்தை எண்ணி தன்னையே அருவெறுத்து போனான்.
சிவபாலனிடம் கண்டிப்பாக மகாவை தொடர்பு கொள்ள கூடாது என்று சொல்லி விட்டவன் உடனே மாமனாருக்கும் அழைத்து விஷயத்தை சொல்ல அவரிடம் அசைவில்லை.
“தயவு செய்து யாரும் என் பொண்டாட்டியை தொந்தரவு செய்யாதீங்க. எந்த கேள்வியும் கேட்காதீங்க மீறி கேட்க நினைச்சீங்க நான் உயிரோடு இருக்க மாட்டேன்” என்றதில் அனைவருமே ஆடிப்போயினர்.
“நான் இருந்தா தானே என்னோடு வாழ சொல்லி அவளை கட்டாயபடுத்துவீங்க? நானே இல்லாமல் போனா என்ன செய்வீங்க?”
“எவ்ளோ பெரிய வார்த்தை சொல்றீங்க மாப்பிள்ளை..”
“இதை நான் வெறும் வார்த்தையா சொல்லலை அத்தை. எப்போ என் பொண்டாட்டியோட மனசை கொன்னேன்னு தெரிஞ்சதோ அப்போவே நான் மனசளவில் செத்துட்டேன் இப்போ நடைபிணமா தான் நடமாட்டிட்டு இருக்கேன்…”
“பேசினா தீராத பிரச்சனை இல்லை மாப்பிள்ளை. நீங்க மனசு விட்டுடாதீங்க, நாங்க இப்போவே மகாவை..” என்றவர்களின் ஆர்பரிப்பு ரிஷியின் வார்த்தையில் அடங்கி போனது.
“என் பொண்டாட்டி நான் இல்லாம தான் நிம்மதியா இருப்பேன்னு சொல்லிட்டா நீங்க பேசறதால நான் சேர்ந்து இருப்பேன்னு நினைக்கறீங்களா?”
“மாப்பிள்ளை..”
“சத்தியமா கிடையாது த்தை. எனக்கு என் லச்சு தான் முக்கியம்! அவளோட சந்தோஷத்துக்கு நானே இடையூரா இருப்பேன்னு தெரியற நிமிஷம் நிச்சயம் நான் உயிரோடு இருக்க மாட்டேன்..”
“...”
“அவளை வாழ விடுங்க, தயவு செய்து லச்சுவை தேடி போயிடாதீங்க..” என்றவன் அன்றிலிருந்து சரியான நேரத்திற்கு சாப்பிடுவது உறங்குவது மட்டுமல்ல வேலைக்கும் செல்வது கிடையாது.
இப்போதும் திருமணத்திலும், தேனிலவிலும் மகிழ்ச்சி ததும்ப வளைய வந்த மனைவியின் முகத்தை விட்டு அவன் விழிகள் அகலவே இல்லை.
மாசு மறுவற்ற மகாவின் முகத்தில் நிறைந்திருந்த வசீகர சிரிப்பு தொலைய ‘தான் காரணமாகி விட்டோமே!!’ என்ற குற்ற உணர்ச்சி நிமிடத்திற்கு நிமிடம் அவனை கொன்று கிழித்து கொண்டிருந்தது.
மகாலட்சுமியின் மீது பதிந்திருந்த ரிஷியின் பார்வை சில நேரம் ரசனையாய், பிரமிப்பாய், ஆச்சர்யமாய், குற்ற உணர்வாய் என்று மாறி மாறி பதிய எண்ணிலடங்கா உணர்வுகளின் குவியலாகி போயிருந்தான்.
எத்தனை உணர்வுகள் உருமாறினாலும் ஒவ்வொரு வீடியோ முடியும் போதும் மறக்காமல் கண்ணீர் தன் இருப்பை காட்டிவிடும்.
அவன் கொண்டிருப்பது எத்தகைய இழப்பு என்று எண்ணி எண்ணி மருகியவனின் துயரத்தை சிவபாலனால் தாங்க முடியவில்லை.
மகாவிற்காகவே சமையலுக்கும், மற்ற வேலைகளுக்கும் என்று ஏற்கனவே ஆட்களை நியமிக்க சொல்லி தந்தையிடம் சொல்லி இருந்தான். ஆனால் இப்போது அதற்கு அவசியமில்லாம போன நிலையில் அவர்களை வர வேண்டாம் என்று சொல்லி விட்டார்.
வேதனையோடு மகனை பார்த்த சிவபாலன் அவனுக்காக காஃபி கொண்டு வந்து கொடுத்து விட்டு தன் வேலைகளை தொடர்ந்தார்.
ரிஷிக்காக தோசை கொண்டு வந்து வைக்க அங்கே அவர் வைத்து விட்டு போன காஃபி ஏடு கட்டி போயிருந்தது.
“நேத்து முழுக்க நீ எதுவுமே சாப்பிடலை ரிஷி, இப்படியே இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும், சாப்ட்டுட்டு எதையும் செய் ப்பா..” என்றவருக்கு மகன் தூக்கத்தை துறந்து பல நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இப்போது நாளுக்கு ஒருமுறை என்று அவன் எடுத்து கொண்டிருந்த உணவையும் மறுப்பதில் வேதனை அதிகரித்தது.
அதைவிட அவனுக்கு மிகவும் பிடித்த காஃபி குடிப்பதை அறவே நிறுத்தி விட்டான்.
“காஃபியாவது குடி ரிஷி! உனக்கு ரொம்ப பிடிக்குமே..” என்றால் இறுதியாக மனைவி கையால் கிடைத்த காஃபியும் அது நிலைக்காமல் போனதும் நினைவில் எழுந்து அவனை வதைக்கும்.
“நான் சரியான அதிர்ஷ்டக்கட்டை ப்பா.. நீங்க என்னை பெறாமலே இருந்திருக்கலாம், உங்களுக்காவது இந்த கஷ்டம் இல்லாமல் போயிருக்கும் தானே!!” என்றதில் மனிதர் பதறிவிட்டார்.
“என்னப்பா பேசற? நீ எனக்கு கஷ்டமா?” என்றார் மகனின் கண்ணீரை துடைத்து,
“நிச்சயமா ப்பா! எவ்ளோ அழகான வாழ்க்கை கிடைச்சும் அதை சரியா வாழ தெரியாத முட்டாளா இருக்கேனே ..”
“ரிஷி!!” என்று மகனை அணைத்துக்கொள்ள வேதனை நிறைந்த குரலில் மகாலட்சுமியின் புறம் இருந்த நியாயங்களை எடுத்து சொன்னவன், “நிஜமாவே, நான் முட்டாள் ப்பா!!” என்றான் உளமாற.
“என்ன ரிஷி பேசற?”
“ஆமா ப்பா, முட்டாளா இருக்கிறது தப்பு இல்லை ஆனா நான் புத்திசாலின்னு நினைச்சு நான் பண்ணின எல்லாமே முட்டாள்தனமான காரியமா போயிருக்கு..”
“ரிஷி!!”
“உங்களுக்கு தெரியாதுப்பா, ஒரே ஒரு வார்த்தை அவகிட்ட சொல்லிட்டு ஃபாரின் போயிருந்தேன்னா இந்நேரம் என் லச்சு முகத்துல இந்த சந்தோஷத்தையும் சிரிப்பையும் நான் பார்த்திருப்பேன் ப்பா..”
“...”
“லச்சு சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை ப்பா..” என்றான் விண்டு போன மனதோடு.
“ரிஷி!!”
“அம்மா அக்காவால வாழ்க்கையில நான் பட்ட மரண அடியில் என் கர்வம் மொத்தமா அழிஞ்சுடுச்சுன்னு நினைச்சேன். என்ன தான் நான் வாய் வார்த்தையா சொல்லிக்கிட்டாலும் ஏதோ ஒரு ஓரத்துல ஆம்பளைங்கற ஈகோ என்னையும் அறியாமல் இருந்திருக்கு போல..”
“என்னடா பேசற? கொஞ்ச நேரம் அமைதியா இரு. எதுவும் பேசாத, முதல்ல வந்து ஒரு வாய் சாப்பிடு...” என்ற போதும் தன் போக்கில் பேசிக்கொண்டே சென்றான்.
“அந்த ஈகோவால தான் நான் எடுக்கிற முடிவு எல்லாம் சரியா மட்டும் தான் இருக்கும்னு நினைச்சு அப்படி பண்ணிட்டேன். ப்ச், முடிச்சுடுச்சு ப்பா என் வாழ்க்கை மொத்தமா முடிஞ்சுருச்சு. இனி நான் யாருக்காக வாழனும்? எதுக்காக சாப்பிடணும்? எனக்கு எதுவுமே வேண்டாம்..”
“உனக்கு பொண்டாட்டி பிள்ளைங்க இருக்காங்க ரிஷி.. அதை மறந்துட்டு இப்படி பேசலாமா?”
“இருக்கிறாங்கப்பா, ஆனா யாருமே என் கூட இல்லை.. யாருமே எனக்காக இல்லை, யாருக்குமே நான் தேவையும் இல்லை.. அப்புறம் எதுக்கு இந்த வாழ்க்கை? வாழ்ந்து நான் என்ன சாதிக்க போறேன்?” என்றவரின் பேச்சு அவரை கலவர படுத்தியது.
“இப்படி ஒரு வாழக்கை எனக்கு விதிச்சு இருக்கறது தெரிஞ்சிருந்தா அன்னைக்கு ஆக்ஸிடென்ட் ஆன போதே போய் சேர்ந்திருப்பேன்.. ஏன் ப்பா என்னை காப்பாத்துனீங்க? இப்போ நான் உயிரோடு செத்துக்கிட்டு இருக்கேன் உங்களுக்கு புரியுதா இல்லையா?” என்றான் பெரும் குரலில்.
“ரிஷி, மனசை தளர விடாத, லட்சுமி கோபம் குறைஞ்ச பிறகு கண்டிப்பா இங்க வந்துடும் எனக்கு நம்பிக்கை இருக்கு..”
“இல்லை ப்பா, என்னோட பணம், கடன் இல்லாத வாழ்க்கை, வசதிகள் இதெல்லாம் லச்சுவுக்கு நிம்மதியையும் சந்தோஷத்தையும் கொடுக்கணும்னு முட்டாள்தனமான நினைச்சுட்டேன்…”
“...”
“உங்களுக்கு தெரியாதுப்பா, இது எல்லாத்தையும் விட அவ என்னை மட்டும் தான் எதிர்பார்த்திருக்கா. இப்படி யார் இருப்பா? என் பொண்டாட்டி மனசை புரிஞ்சுக்காத பாவிப்பா நான்!!” என்று நெற்றியில் அறைந்தவனின் அழுகை இன்னுமே அதிகரித்தது.
Comments
Post a Comment