தீராத காதல் தொல்லையோ - 4.2
“உங்களுக்கு என் தம்பியை பற்றி தெரியாது அத்தை, அன்னைக்கு சீர் பற்றி நான் பேசினப்போ என்னை எவ்ளோ மோசமா பேசினான்னு..” என்று கண்ணீரோடு மாமியாரை பார்த்தவள்,
“என்னடி சொல்ற? உன் தம்பியா?”
“ஆமா அத்தை, பொதுவாவே அவன் நல்லவன் தான் ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் பொண்டாட்டி பேச்சை கேட்டு ரொம்பவே மாறிட்டான். இப்பவே இப்படி இருக்கிறவன் அவனுக்கு குழந்தை பொறந்துட்டா சுத்தமா என்னை கண்டுக்க மாட்டான்...”
“என்னையே கண்டுக்காதவன் என் பொண்ணுங்களுக்காக செய்துட போறான்?! அதனால் தான் முடிஞ்ச வரைக்கும் உங்க பேத்திகளுக்கு இப்பவே சேர்த்து வச்சுக்கலாம்னு நானும் எங்க அம்மா சொன்னதுக்கு ஒத்துக்கிட்டேன்..”
“அம்மா இப்படி செய்யலாம்னு சொன்னப்போ எனக்கு இதுல பெருசா இஷ்டம் இல்லை. அப்போவே உங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லலாம்னு சொன்னேன்..” என்றதில் இந்திரா மகளை அதிர்வோடு பார்த்திருந்தார்.
“ஆனா அவங்க தான் ரெண்டு பேரை தாண்டி போனாலே அது ரகசியமா இருக்காதுன்னு சொல்லி என்னை அடக்கிட்டாங்க.. நான் செய்தது தப்புன்னு நினைச்சா என்னை மன்னிச்சிடுங்க அத்தை..” என்றவள் அப்படி இப்படி என்று ஒரே நாளுக்குள் அவர்களை தாஜா செய்து வழிக்கு கொண்டு வந்து விட்டாள்.
அவர்களுக்குமே எத்தனை பொய் பித்தலாட்டம் செய்திருந்த போதும் இறுதியில் மருமகள் நகை சீர்வரிசைக்கு வழி செய்ததில் திருப்தியே!!
அதனால் அவளையும் பேத்தியையும் மன்னித்து விட்டவர்கள் இந்திராவை மன்னிக்க தயாராக இல்லை.
“என்ன நான் சொன்னது புரிஞ்சுதா? இனிமேல் சாப்பாடு வீணாக கூடாது தினம் வடிக்கிறது அன்னைக்கு சாப்பிட்டு முடித்து இருக்கணும்.. இல்லன்னா புளி கரைச்சு ஊத்தி காலையில தாளிச்சு சாப்பிடு…”
“...”
“அரிசி, பருப்பு மட்டுமில்லை கடுகு உப்பு வரை எதையுமே உன் வீட்ல இருந்து மூட்டை கட்டிட்டு வந்தது இங்க இறக்கி வச்சுடலை.. அள்ள அள்ள தினமும் குறையாமல் இருக்க..” என்று நொடித்ததில் அப்படி ஒரு ஆத்திரம் இந்திராவுக்கு.
எந்த மகளுக்காக கட்டிய கணவன் முதற்கொண்டு பெற்ற மகன் வரை பகைத்து கொண்டாரோ அவளே அவருக்கு எதிராக இருக்கையில் எப்படி அவரால் சுலபமாக பேசி விட முடியும்?
இதனால் வனிதா மாமியார் மாமனாரை மதித்து நடப்பவளா என்று கேட்டால் அதுதான் இல்லை.
பெங்களூரில் அவர்களுக்கு சொந்தமாக இருப்பது அந்த வீடு ஒன்று தான்!!
கணவன் உடன் இல்லாத நிலையில் மாமியார் மாமனாரை பகைத்து கொண்டால் இருக்கும் ஒரு சொத்தும் நாத்தனார்களுக்கு சென்று விடும் என்பதாலேயே வனிதா அவர்களை அனுசரித்து கொண்டு செல்கிறாள்.
இல்லையென்றால் அவளாவது அவர்களை மதிப்பதும் பார்த்து கொள்வதும் ஏது?
கணவன் இத்தனை பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்வான் என்று வனிதா கனவிலும் நினைத்து பார்க்கவில்லை.
கணவனால் ஏற்பட்ட அவமானம் ஒருபுறம் என்றால் மறுபுறம் சிந்து படிக்க மாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்து வீட்டோடு இருக்கிறாள்.
அது மட்டுமா? இங்கே அழைத்து வந்த முதல் இரண்டு வாரங்களில் மட்டும் நான்கு முறை வீட்டை விட்டு தப்பிக்க முயன்று இருக்கிறாள். ஒருமுறை அவள் அத்தை இன்னொருமுறை பெண் காவலர் மற்றொரு முறை அவள் தங்கை என்று மற்றவர்கள் கண்ணில் பட்டதால் இப்போது வரை வீட்டோடு இருக்கிறாள்.
இல்லையென்றால் எப்போதோ அந்த பையனோடு கம்பியை நீட்டி இருப்பாள். தினமும் காலை மாலை அவனை பற்றிய புராணத்தை தான் பாடுவாள்.
அவ்வப்போது அந்த பையனுக்கு திருமணம் செய்து வைப்பதாக உறுதி கொடுத்தால் படிப்பை தொடர்கிறேன் என்று சொல்லி வனிதாவிடம் நன்கு வாங்கி கட்டி கொள்வாள்.
“இதுக்காகவா எங்க பேத்தியை அங்க விட்டு வச்ச?” என்று வனிதாவின் கோபத்திற்கு அவள் மாமியார் தூபம் போடுவார். இதனால் பலநேரம் வீட்டில் பிரளயமே வெடிக்கும்.
அதில் சிந்துவை விடவும் அதிகளவில் பாதிக்கப்பட்டது என்னவோ இந்திரா தான். வனிதா மட்டுமல்லாமல் அவள் குடும்பத்தினர் அனைவருமே இந்திராவின் வளர்ப்பை குறை சொல்லி அவரால் தான் தங்கள் பெண் இந்த கதியில் இருக்கிறாள் என்று கரித்து கொட்டினர்.
ஆரம்பத்தில் தங்கள் தவறுக்காக அனைத்து வசைகளையும் தாங்கி கொண்ட இந்திரா அது எல்லையை கடக்கவும் தானும் பேச தொடங்கினார். அதில் இன்னுமே பிரச்சனை அதிகரித்தது.
“வாயை மூடிட்டு இருக்கிறதா இருந்தா இங்க இரும்மா இல்லை இப்பவே கிளம்பு” என்று தயவு தாட்சண்யமே இல்லாமல் சொல்லிவிட்டாள் வனிதா.
அப்போதெல்லாம் ஸ்ரீனிவாசன் மனம் திருந்தி ‘மனைவி சொல்லே மந்திரம்’ என்று வாழ்ந்து கொண்டிருந்த காலகட்டம். அதனால் மனைவிக்கும் மாமியாருக்கும் வாய் தகராறு ஏற்பட்டால் அவனுமே மாமியாரை ஜாடை பேசி மனைவி பக்கம் நின்றதில் இந்திராவிற்கு செருப்பால் அடிக்காத குறை தான்.
இப்பேற்பட்டவனுக்காகவா கணவனை பிள்ளையை ஏமாற்றினோம் என்று அவர் மனசாட்சியே அவரை காரி துப்பியது.
யாருமே ஆதரவு இல்லாத நிலையில் “இனி நான் இங்க இருக்கலை என் வீட்டுக்கு போறேன்..” என்று இந்திரா மகளை உடன் வர சொல்லி அழைத்த போதும் அவள் வரவில்லை.
“உன் கூட வந்துட்டா என் பொண்ணை யார் பார்ப்பா? உன்னால தான் அவ இந்த கதியில இருக்கா இனியும் அவளை தனியா விட முடியாது. உன் வழியை நீ பார்த்துக்கோ..” என்று சொல்லி விட்டதில் தனியாக தான் வந்திருந்தார்.
அப்படி வந்தவரை வீட்டினுள் கூட சிவபாலன் அனுமதிக்கவில்லை.
“என் பிள்ளை இப்படி படுத்திருக்க காரணமே நீ தான்டி!! இன்னும் பொண்டாட்டி பிள்ளைகளை கூட பார்க்காம இருக்கான் அவன் வாழ்க்கையை அழிச்சுட்டு உன் வாழ்க்கைக்கு வழி கேட்டு வந்திருக்கேன்னு சொல்ல உனக்கு வெட்கமா இல்லை?” என்றார்.
“என் பிள்ளை பேச முடியாம, சாப்பிட முடியாம தண்ணி கூட குடிக்க முடியாம இருக்கான்டி. இதெல்லாம் பார்க்கிறப்போ உங்க ரெண்டு போரையும் கொல்லுற வெறியே கிளம்புது. மரியாதையா இங்கிருந்து போயிடு இல்லை நான் கொலைகாரன் ஆகிடுவேன்..” என்றவரின் சப்தத்தில் அக்கம் பக்கம் வசித்து வந்தவர்கள் கூடி விட்டனர்.
ரிஷி அப்போது மாத்திரைகளின் உதவியோடு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
இந்திரா எவ்வளவோ கெஞ்சிய போதும் சிவபாலன் மசியவில்லை. இரண்டு மூன்று முறை முடியை பிடித்து அறைந்து தள்ளியதில் அதன் பின் இந்திராவிற்கு அங்கிருக்கும் தைரியமில்லை.
இனி மகளை விட்டால் யாரும் ஆதரவு இல்லை என்பதை புரிந்து கொண்டவர் தன் நிலையை சொல்லி மகளிடம் ஒப்பாரி வைத்தார்.
“இப்படி சொல்ல உனக்கு வெட்கமா இல்லையா?”
“என்னடி பேசற?”
“நீ இங்க வந்து உட்கார்ந்துட்டா எனக்கு சேர வேண்டிய பங்கு எப்படி வரும்?”
“இவ்ளோ நடந்துச்சு ஊரே கூடிடுச்சுன்னு சொல்றேன் இப்பவும் உனக்கு உன் பங்கு தான் பெருசா இருக்கா வனிதா?” என்றார் மகளின் உண்மை நிறம் அறிந்த அதிர்ச்சியில்.
அதுநாள் வரையில் கூட அவளின் இயலாமை அவளை அப்படி பேச வைத்திருக்கிறது என்று தான் நினைத்திருந்தார். ஆனால் அவளின் இந்த பேச்சை எதிர்பாராதவருக்கு தன் எதிர்காலம் என்னவாகுமோ என்ற பயம் அதிகரித்தது.
“சரி இப்போ இதையெல்லாம் பெருசு படுத்தி எதுக்கு பேசிகிட்டு? உன் அப்பா மனசு மாறும் வரைக்கும் உங்கம்மா இங்கேயே இருக்கட்டும்” என்று சொன்னது சாட்சாத் வனிதாவின் மாமியார் தான்.
அவள் மாமியாருக்கோ இந்திரா இங்கே இருந்த வரையில் இருபத்தி நாலு மணி நேரமும் குடிக்க, உண்ண அனைத்தும் சூடாக கிடைத்து விடும். அதோடு வனிதா வேலைக்கு சென்று விடுவதால் அந்த நேரத்தில் அவர் தான் செய்து கொள்ள வேண்டும்.
இப்போது இந்திராவால் அவருக்கு அந்த கஷ்டம் இல்லை, அதனாலேயே அவரை இங்கே தங்க அனுமதித்தார்.
அன்றிலிருந்தே அவர்கள் வீட்டின் சம்பளமில்லாத வேலைக்காரி ஆகிப்போனார் இந்திரா.
அம்மா வீட்டிற்கு செல்லாலம் என்றால் அதற்கும் இந்திராவின் தன்மனம் ஒப்புக்கொள்ளவில்லை.
தன்மானமா?
இல்லையா பின்னே?! இத்தனை வருடங்களில் அதுவும் ரிஷி நல்ல வேலையில் அமர்ந்து கை நிறைய சம்பாதிக்க தொடங்கிய பின் பிறந்த வீட்டில் அவர் செய்த அலப்பறைகள் கொஞ்ச நஞ்சமல்ல!!
அங்கே அத்தனை ஜம்பமாய் வளம் வந்தவருக்கு இப்போது நாதியத்து போய் அவர்களை அண்டி வாழ்வதா? என்ற கேள்வி.
தன் நிலை அதுவும் மகன் படுத்த படுக்கையாக இருப்பதற்கு அவர் காரணம் என்பதை அறியும் தம்பி மனைவிகளின் ஏளன பார்வை அண்ணன் மனைவியின் ஏச்சு பேச்சுக்கு தயாராக இல்லாதவருக்கு பெண் வீடு சற்று கௌரவமாக தெரிந்தது.
நிச்சயம் தன் வாழ்க்கை இப்படி தடம் புரளும் என்று இந்திரா எதிர்பார்க்கவில்லை.
எப்படி கணவரின் மனதை மாற்றுவது எப்படி மகனை தொடர்பு கொள்வது என்று புரியாமல் அலமலந்து போயிருந்தார்.
பின்னே! எப்போது மகனுக்கு அழைத்தாலும் அதை எடுப்பது சிவபாலன் அல்லவா?!
Comments
Post a Comment