வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

வாழ்க்கைத்துணை - 35.3



வனிதாவின் மாமியார் அத்தனை தூரம் பேசிய போதும் எதுவும் பேச முடியாத நிலையில் மெளனமாக தலையை அசைத்து விட்டு தன் போக்கில் சாம்பருக்காக காய் நறுக்க தொடங்கினார்.

ஆனால் மனம் ஒரு நிலையில் இல்லாமல் போக காயோடு சேர்த்து விரலையும் வெட்டி கொண்டதில் ரத்தம் கசிந்தது. 

அதேநேரம், “பாட்டி தோசை ரெடியா?” என்று வந்தாள் தாரணி. 

“கையில் அடிபட்டு இருக்கு தாரணி கொஞ்சம் பஞ்சு எடுத்துட்டு வா” என்றார்.

“பஞ்சா? இந்நேரத்துக்கு நான் எங்க போய் பஞ்சு தேடட்டும்?” என்றாள் சலிப்போடு.

“ரத்தம் நிற்க மாட்டேங்குதுடி..”

“ப்ச், எனக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு பாட்டி. உன் புடவையால இரண்டு நிமிஷம் அழுத்தி பிடிச்சா ரத்தம் வருவது நின்னு போகும். ” என்ற பேத்தியின் பேச்சை கேட்ட இந்திராவிற்கு தான் கொண்டிருந்த வலியை மீறிய வேதனையில் மனம் கனத்து போனது.  

அதைவிட மகனின் நினைவு அதிகமாக எழுந்தது. 

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக மகளின் வாழ்வை செழிக்க வைப்பதாக நினைத்து மகன் வாழ்வோடு தன் வாழ்வையும் அழித்துக் கொண்டுள்ளார் அல்லவா?!

அவருக்கு சிறு காயம் என்றாலும் ரிஷி எத்தனை துடித்து போவான்?! 

அவரை அழைத்து வந்து சோஃபாவில் அமர்த்துபவன் வேலை செய்யவே அனுமதிக்க மாட்டான். உணவை வெளியில் இருந்து ஆர்டர் செய்பவன் அத்தனை வேலைகளையும் தானே செய்து கொடுப்பான்.

மனைவி வந்தபின் அவளை செய்ய வைப்பான். 

இங்கே அவர் காயத்துக்கு கூட மருந்திட யாரும் இல்லாத நிலை கண்ணீரை வரவழைத்தது. 

கண்கள் கலங்க, “ரொம்ப வலிக்குது தாரணி, நேத்து உன் பாட்டி தாத்தாவுக்கு கட்டு போட்டுட்டு மீதி பஞ்சை எடுத்து வச்சாங்க பாரு. கொஞ்சமா கேட்டு வாங்கிட்டு வா அப்படியே மருந்தும்..” என்றார். 

ஆனால் அவளோ காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டிருப்பவள் போல, “பாட்டி உனக்கு எதுவும் கொடுக்க கூடாதுன்னு சொல்லி இருக்காங்க. இப்போ போய் கேட்டா என்னை தான் திட்டுவாங்க, சீக்கிரம் சுட்டு கொடு கிளம்பனும்…” என்றாள்.

“உன் அம்மாவ கூப்பிடு சுட்டுக்கொடுக்க சொல்லு என்றவர்” அங்கிருந்து செல்ல உடனே தாரணி வனிதாவை தேடி சென்றாள்.

அவள் என்ன சொன்னாளோ எப்படி சொன்னாளோ தெரியாது ஆனால் அவசரமாக தலையை வாரிக் கொண்டிருந்த வனிதா அத்தனை ஆவேசத்தோடு தாயை தேடி வந்தாள்.

“என் வீட்ல இருந்துட்டு என் பொண்ணுக்கே சாப்பாடு போட மாட்டேன்னு சொல்லுவியா ம்மா நீ?!” என்றாள்.

“என்னடி பேசற? இங்க பாரு விரல் எவ்ளோ ஆழமா கிழிச்சு இருக்குன்னு இதுல நான் எப்படி சமைக்க முடியும்?” என்று கண்ணீரோடு கேட்டவர், 

“ஏன்டி கேட்க நாதியில்லைன்னு ஆளாளுக்கு என்னை பேசுவீங்களா?”

“அப்படி என்ன பேசிட்டாங்க உன்னை. இவளுக்கு ஸ்கூலுக்கு நேரமாச்சு பசிக்குதுன்னு கேட்டிருக்கா, இந்த கையில் அறுத்திருந்தா என்ன இன்னொரு கை நல்லா தானே இருக்கு அதுல சுட்டு கொடுத்து இருக்கலாமே?!” 

“ஏய் என்னடி பேசற?”

“சும்மா இரு ம்மா. உனக்கு கொஞ்சம் கூட எங்க எப்படி நடக்கணும், எப்படி அனுசரிக்கணும்னு ஒரு மண்ணும் தெரியலை. எப்படி தான் இத்தனை வருஷம் குடித்தனம் பண்ணியோ..” என்றவளின் கேள்வி இந்திராவின் நெஞ்சை அறுத்தது. 

“நான் உன் அம்மாடி! இப்படி எடுத்தெறிஞ்சு பேசற?” என்றார் கட்டுபடுத்த முடியாத கண்ணீரோடு.

“நீ என் அம்மா என்பதால தான் என் வீட்ல இடம் கொடுத்து இருக்கேன்..” என்றதில் அவர் கண்ணீர் இன்னுமே அதிகரித்தது.

“இதோ பாருமா இது நான் வாழற வீடு! இங்க பொழுது விடிஞ்சு பொழுது போனா ஒப்பாரி வைக்கிறதை முதல்ல நிறுத்து! உன்னை ஒதுக்கி வைக்கிறேன்னு அப்பா சொன்னா நீயும் அதை ஏத்துக்கிட்டு இங்கே டெரா போட்டுருவியா?” என்றாள் 

“என்னடி பெரிய வார்த்தை எல்லாம் பேசற?” என்றார் இந்திரா மகளின் பேச்சில் கொண்ட அதிர்வோடு.

“நானும் இவ்வளவு நாள் பேசக்கூடாதுன்னு தான் இருந்தேன். ஆனா நீ வந்த இடத்துல அமைதியா இல்லாம எனக்கும் என் மாமியாருக்குமே சண்டை மூட்டி விடற” என்றால் காட்டமாக. 

“நான் என்னடி பண்ணினேன்?”

“என்ன பண்ணல நீ? அப்பா உன்னை வீட்டை விட்டு துரத்தினால் இங்கே வந்தோமா ஒரு வாரமோ இரண்டு வாரமோ இருந்தோமான்னு கிளம்பாம இங்கேயே இருந்தா எப்படி?”

“உன் மாமியார் தானேடி இங்க இருக்க சொன்னாங்க..”

“அவங்க சொன்னா உனக்கு புத்தி வேணாம்?! அவங்க வார்த்தைக்காக ஒரு மாசமோ இரண்டு மாசமோ இருந்துட்டு உன் வீட்டை பார்த்து கிளம்பி இருக்கனுமா இல்லையா?”

“வனிதா…”

“இதோ பாரு ம்மா அந்த வீட்ல வாழற முழு உரிமையும் உனக்கு இருக்குன்னு நானும் பலமுறை சொல்லிட்டேன். அப்படி இருந்தும் இங்கிருந்து நகருவேனான்னு இருக்க..”

“இங்க ஏற்கனவே ஒரு ஆள் சம்பாத்தியத்தை வச்சு தான் நான் குடும்பத்தை நடத்துறேன். இதுல ஒரு ஆளே எனக்கு பாரம் எனும் போது இரண்டு பேர் வந்து சேர்ந்து இருக்கீங்க.. எவ்வளவு செலவாகுதுன்னு தெரியுமா? ஒரு காய் செலவுக்காவது நீ எனக்கு உதவி செய்றியா?”

“என்னடி இப்படி பேசுற? எனக்கு முடியலனாலும் உனக்காக வீட்டு வேலை எல்லாமே நான் தானே செஞ்சு கொடுக்கிறேன். உன் மாமனார் மாமியார்கு டீ, காஃபி போடறதுல இருந்து பாத்திரம் கழுவி, வீடு பெருக்கி எல்லா துணிகளையும் தோய்ச்சுன்னு அசந்து உட்கார கூட நேரம் இல்லாமல் செய்றேனே..”

“இதெல்லாம் செய்து என்ன பிரோஜனம்?.. என் கூட கம்பெனிக்கு வந்து எனக்கு ஏதாவது சம்பாதிச்சு கொடுத்தா பரவால்ல..”

“ஏன்டி எனக்கென்ன இரண்டு பஸ் ஏறி இறங்கி கம்பெனியில் கால் கடுக்க வேலை செய்யற வயசா? என் வீட்ல ராணியாட்டம் இருந்தவ நான் தெரியுமா?”  

“இதெல்லாம் வக்கனையா பேசு, ஆனா ஒருத்தி எப்படி இத்தனை பேருக்கான செலவையும் சமாளிப்பேன்னு கொஞ்சமாவது யோசிக்கிறியா?”

“நானாடி யோசிக்கல? உனக்காக யோசிச்சு தானே என் புள்ளையவே ஏமாத்தி திட்டம் போட்டு வீட்டை அடமான போட்டு நகை போட வச்சேன் ஆனா அதை ஒழுங்கா வச்சுக்க உனக்கு துப்பில்லை…”

“என்னமா பேச்செல்லாம் வித்தியாசமா வருது?”

“பின்ன என்னடி உன் புருஷன் நகையை திருடிட்டு போகவே உன் மேல பாசமா இருக்கிற மாதிரி நடிக்கிறது கூட தெரியாம எல்லா நகையையும் அவன் பொறுப்புல கொடுத்துட்ட ஆனா அவன் அத்தனையும் எடுத்துட்டு இன்னொருத்தி கூட போய்ட்டான்..” என்றார் ஆற்றாமையோடு.

“ம்மா என்ன அவன் இவன்னு மரியாதை இல்லாம பேசுற? அவரு உன் மாப்பிள்ளை! அந்த ஞாபகம் இருக்கட்டும். இதெல்லாம் என் மாமனார் மாமியார் காதுல விழுந்துச்சு நீ மட்டும் இல்ல நானும் இங்க இருக்க முடியாது..” என்று எச்சரித்தாள் வனிதா.

“இரண்டு பொட்ட பிள்ளைகளை வச்சுட்டு இன்னொருத்தி கூட போனவனுக்கு என்ன மரியாதை? அவன் ஒழுங்கா இருந்திருந்தா எனக்கு இந்த நிலைமை கிடையாது..” 

“ம்மா..”

“எங்களுக்கு இல்லாத கஷ்டமா உங்களுக்கு வந்துடுச்சு? ஆனா பெத்த பிள்ளைகளை அடுத்தவங்களுக்கு சுமையாக்காம கடனை உடனை வாங்கி உங்களை நாங்க சுமக்கலை?! அப்படி சுமக்க முடியாதவன் எதுக்கு பிள்ளையை பெத்துக்கணும்…”

“வயசுக்கு வர நிலையில் இருக்க பொண்ணுங்களை இன்னும் ஆறு ஏழு வருஷத்துல கட்டி கொடுக்கணும் அதை பற்றின கவலை இல்லாம இன்னொருத்தியோட குடும்பம் நடத்துறவனுக்கு என்ன மரியாதை?”

“ம்மா…”

“என் பிள்ளை கஷ்டப்பட்டு சம்பாதிச்சு கட்டின வீட்டை அடமானம் போட்டு எடுத்த நகைகளை என் பேத்திகளுக்கு வைக்காம  அடுத்தவளுக்கு தூக்கி கொடுத்திருக்கான் அவனுக்கு நீ வக்காலத்தா?”

“இப்படி ஒருத்தன் கூட நீ பொழைக்கிறதுக்கு ஒரு பொழப்பா?” என்று வெடித்தார்.

“தேவையில்லாம பேசாத ம்மா. ஊருல நாட்டுல வப்பாட்டி வைக்காதவன் யாரு இருக்கா? இந்த வீட்டுக்கு உழைச்சு கொட்டுறதுல என் புருஷனை நான் சரியா கவனிக்கலை. இதுக்கு காரணமும் நீங்க தான்!!” என்றதில் ஆடிப்போனார் இந்திரா. 

“என்னடி பேசற?”

“எனக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுக்க முடியாத நீங்க மட்டும் எதுக்கு என்னை பெத்தீங்க?”

“வனிதா…”

“ஒன்னு உன் புள்ளையை படிக்க வச்ச மாதிரி என்னையும் படிக்க வச்சிருக்கணும் இல்லை வசதியான வீட்டுலயாவது கட்டி கொடுத்திருக்கணும். இப்போ மட்டும் குறை சொல்ல வந்துட்டியே இதுல ஒன்னையாவது செய்திருந்தா இன்னைக்கு எனக்கு இந்த நிலை கிடையாது…”

“இந்த தாலி அவர் கட்டினது. என்னக்குமே வப்பாட்டி பொண்டாட்டி ஆகிட முடியாது. அவ மோகம் தீர்ந்ததும் என்கிட்டே தான் வந்தாகணும். குறை இல்லாத மனுஷங்க ஏது? என் புருஷன் தெரிஞ்சோ தெரியாமலோ போய் விழுந்துட்டார் அவரை மீட்க தான் பார்க்கணுமே தவிர கேவலமா பேசக்கூடாது..”

“ஏய் இப்படி ஒரு வாழ்க்கை உனக்கு தேவையாடி?” என்றார் தாங்க மாட்டாமல். 

“இந்த வாழ்க்கை வேண்டான்னு வந்துட்டா நீயோ உன் மகனோ என்னை தாங்கு தாங்குன்னு தாங்கவா போறீங்க?! நகை சீருக்கே வக்கில்லாம கிடக்கேன் இதுல சோத்துக்கும் உங்களை தேடி வந்துட்டா அவ்ளோ தான்!!”

“நாங்க உன்னை என்னைக்காவது அப்படி நடத்தி இருக்கோமாடி? ஏன் இப்படி அபாண்டமா பேசற?”

“முழுக்க முழுக்க பொண்டாட்டி தாசனா மாறி இருக்கிறவன் அக்காவை பார்ப்பான்னு நம்புறதுக்கு நான் முட்டாள் கிடையாது என் வாழ்க்கையே நான் தான் பாத்துக்கணும்..”

“நீ சொன்னியே வயசுக்கு வர போற பொண்ணுங்கன்னு, அவங்களுக்கான நல்லது கெட்டதுல அவரை தான் நான் சபையில நிறுத்தனும்.. புரியுதா?” என்ற மகளின் பேச்சில் வாயடைத்து போனார் இந்திரா. 

**********

தாரணி பள்ளிக்கு சென்ற இரண்டு மணி நேரத்திலேயே அங்கிருந்து வனிதாவிற்கு அழைப்பு வந்தது. 

பள்ளியில் இருந்து அழைப்பு வந்ததும் வனிதாவிற்கு ‘எங்கே சிந்து போல இவளும் காதல் கீதல் என்று பைத்தியக்காரத்தனம் செய்து கொண்டிருக்கிறாளோ..’ என்ற பயம் தொற்றிக்கொண்டது. 

அவள் பயம் அவசியம் இல்லை என்பது போல தாரணி பெரிய மனுஷி ஆகியிருப்பதாக சொல்லவும் தான் நிம்மதி மூச்சு எடுத்தவள் உடனே பள்ளிக்கு கிளம்பி சென்றாள்.

Comments

Post a Comment

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17