தீராத காதல் தொல்லையோ - 4.2
வனிதா இரவு பெங்களூரு சென்று சேர்ந்த போது அங்கே சிந்து யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியதால் வீடே அல்லோல கல்லோல பட்டு போயிருந்து.
விஷயம் அறிந்த வனிதா தலையில் இடி இறங்கிய அதிர்ச்சியில் வாசலிலேயே அமர்ந்துவிட்டாள்.
“யாருமே அவ இப்படி பண்ணுவான்னு எதிர்பார்க்கலை அண்ணி. முதல்ல யாராவது கடத்தி இருப்பாங்களோன்னு தான் நினைச்சோம் ஆனா அம்மா அவ ஏற்கனவே ஒரு பையனை லவ் பண்ணினதை சொன்ன பிறகு தான் எங்களுக்கே தெரிஞ்சது..” என்றாள் அவள் மூத்த நாத்தனார்.
யாருக்கெல்லாம் விஷயம் தெரியக்கூடாது என்று நினைத்தாளோ இன்று அவர்களுக்கு தெரிந்து போனதில் கொண்ட ஆவேசத்தோடு, “வீட்ல இத்தனை பேர் இருந்தும் எப்படி அவளை விட்டீங்க? என்றாள் மாமியாரிடம்.
தாரணி பருவம் எய்தியிருப்பதால் அவளுடைய அத்தைகளின் குடும்பமும் இங்கே தான் இருந்தனர். அந்த தைரியத்தில் தான் இந்திராவை அழைத்துக் கொண்டு அவள் சென்னை சென்றது.
ஆனால் இத்தனை பேரையும் மீறி சிந்து தப்பித்து செல்வாள் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.
“எப்படி போனா?”
“எப்பவும் தாரணி தானே கடைக்கு போவா.. இப்போ அவ போக கூடாதுங்கிறதால சிந்துவை அவசரத்துக்கு கடைக்கு அனுப்பினோம் ஆனா அவ இப்படி பண்ணுவான்னு யாருமே எதிர்பார்க்கலை வனிதா..”
“எப்போ போனா? ஏன் எனக்கு சொல்லலை. தேடி பார்த்தீங்களா? போலீசுக்கு சொன்னீங்களா?” என்றவள் ஃபோனை தேடி எடுத்து ரிஷிக்கும் தந்தைக்கும் மாற்றி மாற்றி அழைக்க இருவருமே அவள் எண்ணை ப்ளாக் செய்து இருந்ததால் அழைப்பு செல்லவில்லை.
“மதியம் சமையலுக்கு பொருள் வாங்க போனவ வராம போகவும் உனக்கு ஃபோன் பண்ணோம் ஆனா நீ எடுக்கலை. சரி நீ வரதுக்குள்ள எப்படியாவது கண்டுபிடிச்சிடலாம்னு நாங்களே தேடினோம்…”
“சாயந்திரமாகியும் அவ கிடைக்காததால போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுத்தோம்.. அவங்களும் தேடிட்டு இருக்காங்க.. அந்த பையனை பத்தின விவரமும் கொடுத்து இருக்கோம்..”
“உங்க பிள்ளைக்கு தகவல் சொன்னீங்களா?”
“சொன்னோம் வனிதா ஆனா அவன் வெளியூர்ல இருக்கானாம் வரதுக்கு ஒரு வாரம் ஆகுமாம்..” என்று சொல்ல வனிதாவிற்கு என்ன செய்வது என்று புரியாத நிலை.
“அவ லவ் பண்றான்னு தெரிஞ்சும் எதுக்காக அவளை விட்டுட்டு போனீங்க? ஏன் முதல்லயே இதை தடுக்கலை.. இப்போ நம்ம பிள்ளை எங்க எப்படி கஷ்டபடுதோ தெரியலையே..” என்று சிந்துவின் அத்தைகள் சொல்ல,
“போலீஸ்காரங்களாலயும் இப்ப வரைக்கும் அவளை கண்டு பிடிக்க முடியலை..” என்று சிந்துவின் மாமா சொன்ன அதே நேரம் சிந்துவும் அந்த பையனும் ஆந்திராவை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
**************
மகாலட்சுமி மீட்டிங் முடித்துக் கொண்டு வர அவளுக்கு வீட்டில் இருந்து அழைப்பு வந்தது.
“சொல்லுங்க ம்மா..”
“மகா நாளைக்கு ஏதோ பங்க்ஷன் போகணும் சொல்லியிருந்தியே அதுக்கு குழந்தைகளுக்கு ட்ரெஸ் எடுத்துட்டியா? இன்னைக்கு சீக்கிரம் வந்துடுவ தானே?!” என்றார் பாக்கியா.
“அச்சோ மறந்தே போயிட்டேன். ம்மா எனக்கு கொஞ்சம் வேலை அதிகம், சீக்கிரம் வர முடியுமான்னு சரியா சொல்ல முடியாது. நீங்க அண்ணியை கூட்டிட்டு போய் வாங்கிட்டு வந்துடுங்க..” என்றவள் சோர்வோடு தன் நாற்காலியில் அமர்ந்து தண்ணீரை எடுத்து குடித்தாள்.
அவர்கள் கம்பெனியில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு அனைத்து கட்ட தேர்வுகளை முடித்து இறுதியாக இன்று நேர்முகத் தேர்வை நடத்த இருக்கின்றனர்.
மகாலட்சுமியும் ஜெயசித்ராவும் தான் அவர்களை இன்டர்வியூ செய்ய போவதால் இறுதியாக தேர்வானவர்களின் லிஸ்ட் அவர்களிடம் கொடுக்கப்பட்டது.
மொத்தம் பதினைந்து பேர்!!
அதை எடுத்துக்கொண்டு அவசரமாக அவள் அறையினுள் நுழைந்த ஜெயசித்ரா “இன்டர்வியூக்கு நேரமாச்சு மகா..” என்று நினைவு படுத்தினாள்.
மகாவிற்கு மற்றொரு மீட்டிங் இருப்பதால் ஜெயசித்ராவிடம் நேர்காணலை நடத்த சொல்லிவிட்டு சென்றவள் ஒரு மணி நேரம் கழித்து கிட்டத்தட்ட ஒன்பது பேரை முடித்த போது அங்கு வந்து சேர்ந்தாள்.
“தேங்க் காட் மகா, நல்ல நேரத்துல வந்த..” என்று எழுந்து கொண்டாள் ஜெயசித்ரா.
“ஏன் ஜெய் என்னாச்சு?”
“இப்போ தான் கால் வந்தது, வசுந்தராவுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு…”
“வாவ்!! சூப்பர், கங்க்ராட்ஸ் சொன்னேன்னு சொல்லு.. நார்மலா?”
“ஆமா, உனக்கே தெரியும் நானும் வசுவும் எவ்ளோ க்ளோஸ்னு, இப்போ நான் போகலை அவ என்னை தேடி வந்து கொல்லுவா?” என்றாள் சிரிப்போடு.
“இட்ஸ் ஓகே, நீ கிளம்பு நான் பார்த்துக்கிறேன்..” என்றாள் புன்னகையோடு.
“இன்னும் ஆறு பேர் தான். செலெக்ஷன் லிஸ்ட் இதுல இருக்கு.. மற்றவங்களோட டீடெயில்ஸ் இதுல ஆட் பண்ணிடு, பை..” என்று அவசரமாக கிளம்பினாள்.
நாற்காலியில் அமர்ந்த மகாலட்சுமி தன் முன்னே வைக்கபட்டிருந்த தேர்வான முந்தைய கட்ட தேர்வுகளின் செயல்பாடு குறித்து பார்த்துக் கொண்டிருக்க கதவை தட்டி விட்டு உள்ளே வந்தார் அந்த நபர்.
சுய அறிமுகம் செய்ய சொன்ன மகாலட்சுமி அவரிடம் கேள்விகளை கேட்க அவரும் நிதானமாக பதில் அளிக்க தொடங்கினார். அவர் ஏற்கனவே மற்றொரு கம்பெனியில் மூன்று வருட பணி அனுபவம் கொண்டவர் என்பதால் எந்த பதட்டமும் இல்லாமல் மகாவின் கேள்விகளை மிகவும் நல்ல முறையில் கையாண்டு பதில் சொன்னார்.
“குட் ஜாப்! வீ வில் லெட் யூ க்நொவ்!!” என்ற மகா அடுத்தடுத்து தேர்வானவர்களை இன்டர்வியூ செய்து முடித்து இறுதி நபரின் விவரங்களை பார்த்து அசைவற்று போனாள்.
அதே நேரம் அவள் அறைக்கதவை தட்டி விட்டு உன்னை நுழைந்தான் ரிஷிவரதன்.
சிறு திடுக்கிடலோடு மகா நிமிர அங்கே அழகிய புன்னகையோடு, “குட் மார்னிங் மேம்!! திஸ் இஸ் ரிஷிவரதன்” என்று தன்னை அறிமுகம் செய்த மகாவின் பார்வை கணவனை விட்டு அகலவில்லை.
ரிஷியை பிரிந்த போது அவள் பார்த்ததற்கும் இப்போதைய தோற்றத்திற்குமான மாற்றம் அவளை திடுக்கிட செய்தது.
பின்னே அன்று ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த ஆப்பிள் போல அத்தனை அழகும், கம்பீரமும், புன்னகையும் ஒருசேர இருந்தவனின் தற்போதைய சோர்ந்து களைத்து போயிருந்த முகம் கண்களை சுற்றி படர்ந்திருந்த கருவளையம், ஷேவ் செய்தததால் ஒட்டிப்போயிருந்த கன்னங்கள் அவளை அதிர செய்தது.
அதைவிட அவன் எடை!! நிச்சயம் ஐந்திலிருந்து பத்து கிலோவாவது குறைந்திருப்பான் அந்தளவு இளைத்து கறுத்து உருக்குலைந்து காணப்பட்டான்.
“எப்படி இந்த தலைகீழ் மாற்றம்? நிச்சயம் தன்னால் என்பது புரிந்தாலும் இத்தனையும் இருபது நாட்களுக்குளாகவா? அந்தளவு தன் பிரிவை அவனை வதைக்கிறதா?” என்ற கேள்வி ஏனோ அவள் மனதை பிசைந்தது.
“உட்காருங்க..” என்றவள் அதற்கு மேலும் காலம் தாழ்த்தாமல் நேரடியாகவே “எதுக்காக இங்க வந்தீங்க? முன்னாடி ஒர்க் பண்ணின கம்பெனியில் ஏதாவது பிரச்சனையா?” என்றாள்.
“இல்லை மேம், எனக்கு எந்த பிராப்ளமும் இல்லை, எனக்கு வேலை செய்ய பிடிக்கலை..”
“வாட்? அப்பறம் எதுக்கு இங்க அப்ளை பண்ணீங்க? வேலை செய்யாம ஓபி அடிக்கவா? அதுக்கு நாங்க ஆள் எடுக்கிறதில்லை..”
“அப்படி இல்லை மேம், என்னால அங்க வேலை செய்ய முடியாது. ராமன் இருக்குமிடம் தான் சீதைக்கு அயோத்தியைன்னு சொல்லுவாங்க. எனக்கு என் லச்சு இருக்கும் இடம் தான் மிதிலை!!”
“வாட்?!”
“எனக்கு என் வைஃப்பை பார்க்கணும், குறைந்தபட்சம் அவங்களை பார்த்துட்டு இருந்தால் போதும் நான் வாழறதுக்கு ஒரு அர்த்தம் இருக்கும்னு தான் அப்ளை பண்ணினேன்…”
“உங்க சொந்த கதை, சோக கதை கேட்க நான் இங்க உட்கார்ந்து இருக்கலை. நீங்க முன்னாடி இருந்த டெசிக்னேஷனுக்கும் இப்போ அப்ளை பண்ணி இருக்கும் போஸ்ட்க்கும் எவ்ளோ டிப்ரேன்ஸ்ன்னு தெரியுமா தெரியாதா?” என்றாள் குரல் கரகரக்க..
“தெரியும் மேம், பட் அதை விட எனக்கு என் வைஃப் முக்கியம்!! அப்பா, அம்மா தொடங்கி உலகமே அவங்களோடு பக்கபலமா இருந்தாலும் எப்பவும் என்னை மட்டுமே தேடுவாங்க. அந்தளவு என்னை நேசிக்கிறாங்க.. ஆனா நான் தான் அதை புரிஞ்சுக்காம போயிட்டேன்..”
“இப்போ தான் புரிஞ்சது..”
“என்ன புரிஞ்சது?”
“பிரிந்து இருந்தாலும் என்னைவிட அவங்க என்னை அதிகமா தேடுவாங்க மேம். பொதுவாவே ப்ரெக்னேன்சி பெண்கள் கிட்ட பல மாற்றம் கொண்டு வரும்னு சொல்லுவாங்க.. அப்படி இருக்கிறப்போ ஒன்னுக்கு இரண்டு குழந்தைகள் சுமந்து பெத்து எடுத்து இருப்பவள் கிட்டயும் நிறைய மாற்றம்..”
“இதுவே பழைய ரிஷியா இருந்திருந்தா நிச்சயம் என்னால புரிஞ்சுகிட்டு இருந்திருக்க முடியாது. அன்னைக்கு என் வைஃப் என் மேல காட்டின கோபம் என்னை அவங்க அடிச்ச ஒவ்வொரு அடியும் எனக்கான அவங்க தேடல் மட்டுமில்லை அவங்களோட அதீத அன்பின் வெளிப்பாடு தான் மேம்..” என்று சொல்ல இதழ்களை கடித்தபடி அமர்ந்திருந்த மகாவின் கண்கள் கலங்கி போனது.
Comments
Post a Comment