தீராத காதல் தொல்லையோ - 4.2
மனைவியின் முக மாற்றத்தை கண்ட சைலேந்தர், “வேத் தன்னோட முடிவில் எவ்வளவு உறுதியா இருப்பான் என்று உனக்கு தெரியாதா வாகீ?!” என்று அவரை தேற்றினார்.
“தெரியும் இந்தர் ஆனா வாசு அண்ணா பேசின பேச்சுக்கு அவர் கிட்டயே மித்துவை வேண்டான்னு சொல்லிட்டு வந்த பிறகு எப்படி?”
“அப்போ நீ தைரியமா உன் தம்பிக்கு ஓகே சொல்லி இருக்க வேண்டியது தானே?!”
“அதுதான் முடியலைன்னு சொல்றேனே..” என்றதில் புன்னகையோடு “ஏன்?” என்றார்.
“என் பிள்ளையை பற்றி எனக்கு தான் தெரியும்! அவனோட ஆசை தான் என்னோட ஆசையும், இருந்தாலும் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி கூட கல்யாண பேச்சை எடுத்து பார்த்தேன் ஆனா பிடி கொடுக்கவே இல்ல.. அப்புறம் எப்படிங்க?”
“வேத் ரொம்ப கண்ணியமாவே தன்னோட விருப்பத்தை சொன்னான்.. இப்போவும் அவனோட விருப்பம் மித்துவா இருந்தா அது தப்பில்லையே வாகீ..”
“நிச்சயமா ஆனா மித்துவோட பதில் இப்போ என்னவா இருக்கும்னு தெரியாம எப்படி? நாம இன்னொரு முறை பேசி பார்க்கலாமா?”
“என்னன்னு பேசுவ?” என்றதற்கு அவரிடம் பதில் இல்லை.
“அப்போ உன் தம்பிக்கு முதல்லையே சொல்லிடு, சீலன் அனாவசியமா ஹன்சி மனசுல ஆசையை வளர்த்து அப்புறம் அது எல்லாருக்குமே வேதனையை கொடுக்கும்..”
“புரியுதுங்க நான் பேசறேன் .. ஆனா வேத் மனசுல என்ன இருக்குன்னு புரிஞ்சுக்கவே முடியல. எதையும் வெளிப்படையா சொல்ல மாட்டேங்கறான். பேசினா நாம கஷ்டப்படுவோம்னு பேச்சை தவிர்க்கிறவன் தன்னையே கஷ்டப்படுத்திக்கிறானு தோணுது..”
“அப்படி எல்லாம் இருக்காது வாகீ. உன் மகன் விக்கிரமாதித்தன் மாதிரி முயற்சியை கை விடமாட்டான் ஆனால் இப்போதைக்கு கொஞ்சம் தள்ளி வச்சிருக்கான் போல.. பார்க்கலாம் என்ன தான் நடக்குதுன்னு நீ கவலையை விட்டுட்டு பூஜைக்கான ஏற்பாட்டை பாரு..”
“உத்ரா நாளைக்கு வரேன்னு சொல்லி இருக்காங்க. அவளோடு போய் அம்மாவுக்கான புடவை கலச பொருட்கள் எல்லாம் வாங்கிட்டு வந்துடுறேன்.. நீங்க மற்ற ஏற்பாடு பண்ணிடுங்க” என்று லிஸ்ட் கொண்டு வந்து கொடுத்தார்.
வேதாந்த் கமிஷனருடனான மீட்டிங்கில் இருக்க ஸ்டேஷனுக்கு கிளம்பி கொண்டிருந்த தர்ஷனுக்கு டீக்கடைக்காரரிடம் இருந்து அழைப்பு வந்தது.
குற்றவாளிகளில் இருவரை அவர் கடைக்கு வழக்கமாக வருபவர்கள் பார்த்தது குறித்து சொல்லவும் உடனே விசாரிக்க கிளம்பி விட்டான்.
திரும்பி வரும் வழியில் கூட்டம் கூடி இருப்பதை கண்டு “என்ன பிரச்சனை? எதுக்கு இங்க கூட்டம் கூடி இருக்கீங்க?” என்று அவர்களை விலக்கி கொண்டு செல்ல அங்கே இருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.
போக்குவரத்திற்கு இடையூறு செய்த இருவரையும் அழைத்து கொண்டு ஸ்டேஷனுக்கு வந்தான்.
மீட்டிங் முடித்து தன் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த வேதாந்திற்கு அழைப்பு வர அதில் சொன்ன ஸ்டேஷனுக்கு சென்றான்.
“என்ன ஏசிபி ஸார் வண்டி வருது? இன்னைக்கு இன்ஸ்பெக்ஷனா?” என்று கான்ஸ்டபிள் ஒருவர் கேட்க, “தெரியலை வா பார்க்கலாம்” என்று காரின் கதவை திறந்து சல்யூட் வைத்தார்.
“ஸர், டீக்கடைகாரர் கிட்ட வர கஸ்டமர்ஸ் மர்டரர்ஸ் இரண்டு பேரை பார்த்ததா சொன்னாங்க..”
“எங்கே பார்த்தாங்கலாம்?” என்றதும் அவன் சேகரித்த தகவலை கொடுத்தவன்,
“வர வழியில ஒரு கேஸ். அதுல ஒருத்தர் உங்களோட ப்ரெண்ட்னு சொன்னார் ஸர் அதனால தான் உங்களுக்கு தகவல் கொடுத்தேன்..” என்றிட ஸ்டேஷன் உள்ளே நுழைந்தான் வேதாந்த்.
அவனை கண்ட நொடியே, “எப்படி இருக்க ஆரி?” என்று வேதாந்தை கட்டிக்கொள்ள ஓடி வந்தவன் வேதாந்தின் யூனிஃபார்ம் அவர்கள் இருக்கும் இடம் உணர்ந்து கை குலுக்கினான் வேத்தின் பள்ளித்தோழனும் வெளிநாட்டில் செட்டிலாகிய டாக்டருமான கார்த்திக்.
“நல்லா இருக்கேன், நீ என்னடா திடீர்னு இங்கே?” என்றவன் நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்து நண்பனையும் அமர சொன்னான்.
“நெக்ஸ்ட் மந்த் என்னோட மேரேஜ்னு சொல்லி இருந்தேனே..”
“ஆமா, நியாபகம் இருக்கு பட் அதிக லீவ் எடுக்க முடியாது மேரேஜ்க்கு பத்து நாள் முன்னாடி தான் வருவேன்னு சொல்லி இருந்தியே?!”
“சொன்னேன் ஆனால் நாளைக்கு என் மாமனாரோட ரிடையர்மென்ட்! அதுக்கு கண்டிப்பா கூட இருக்கணும்னு ஷாலு சொல்லிட்டா ஸோ மறுக்க முடியாம முன்னாடியே வந்துட்டேன்.. மேரேஜ் முடிச்சுட்டு தான் கிளம்பறேன்” என்று சொல்ல வேதாந்திடம் அடக்கப்பட்ட புன்னகை.
மௌன சிரிப்பில் அவன் உடல் குலுங்குவதை கண்டு கொண்டவன், “ஆரி, நீ ஏன் சிரிக்கிறன்னு தெரியும். போதும்டா ஏற்கனவே ஒவ்வொரு விஷயத்துக்கும் வச்சு செய்யறீங்க..”
“ஏதோ அந்த வயசுல தெரியாம சொல்லிட்டேன், ஐ டேக் பேக் மை வோர்ட்ஸ்!! வச்சு செய்யாதீங்கடா போதும்..” என்று இரு கரங்களையும் தலைக்கு மேல் தூக்கி கூப்பியபடி சொல்ல வெடித்து சிரித்து விட்டான் வேதாந்த்.
அதை கண்ட வாசுதேவனின் முகம் இறுகி போனது.
“சரி என்ன சாப்பிடற? குடிக்க ஏதாவது வாங்கிட்டு வர சொல்லட்டா?”
“அதெல்லாம் எதுக்கு?”
“ப்ச் இங்கே மொளகா பஜ்ஜி ஃபேமஸ், ட்ரை பண்ணி பாரு..” என்றவன் இருவருக்கும் பஜ்ஜியோடு டீயும் கொண்டு வர சொன்னான்.
“அப்புறம் வொர்க் எப்படி போகுது? இந்தியாவில் செட்டில் ஆகுற ஐடியா இருக்கா? இல்லை அங்கேயே தானா?” என்று நண்பர்களின் பேச்சு நீள பல்லை கடித்தபடி அமர்ந்திருந்தார் வாசுதேவன்.
பஜ்ஜியும் டீயும் வந்து சேர “நல்லா இருக்கு ஆரி..” என்று ரசித்து உண்டான் கார்த்திக்.
டீயை குடித்தபடி, “சரி மாமனாரை பார்க்க போகாம இங்கே எப்படி நீ?” என்றான் வேத்.
“அதை ஏன்டா கேட்கிற? ஷாலுவுக்கு கிஃப்ட் வாங்க காரை ஓரமா பார்க் பண்ணிட்டு போயிருந்தேன். ஆனா ஒரு பெருசு கண்ணு தெரியாம காரை ஓட்டிட்டு வந்து என் காரை இடிச்சதோடு திமிரா பேசினா விடுவேனா? இரண்டு பேருக்கும் வாய் தகராறு ஆகிடுச்சு அப்போ தான் போலீஸ் வந்து எங்களை கூட்டிட்டு வந்துட்டாங்க..”
“காம்பென்சேஷன் எதுவும் கொடுக்கலையா?”
“இம்போர்ட்டட் கார் மச்சி! உனக்கே தெரியுமே முறையா டேக்ஸ் கட்டி எடுத்தது.. டேமேஜ் பண்ணினதுக்கு பணம் கொடுத்திருந்தா நான் ஏன்டா சண்டை போட போறேன்?.. அட்லீஸ்ட் ஒரு அப்பாலஜி கூட இல்லை தெரியுமா?”
“தப்பையும் பண்ணிட்டு திமிர் பேச்சு வேறயா? எவ்ளோ கொழுப்பு இருக்கணும்? உன் காரை டேமேஜ் பண்ணின ஆளோட மொத்த கொழுப்பையும் இன்னைக்கே இப்போவே கரைச்சுடுறேன்..” என்றவன் “டூ நாட் ஃபோர்” என்றழைத்தான்.
“எஸ் ஸார்..” என்று அங்கே வந்தார் கான்ஸ்டபிள்.
“இவரோடு ப்ராப்ளம் பண்ணினவங்க எங்கே?” என்றதும் அறையின் ஒரு ஓரத்தில் அமர வைக்கபட்டிருந்த வாசுதேவனை சுட்டி காண்பித்தார்.
அவரை பார்த்த வேதாந்த்தின் கண்கள் “இவரா?” என்று ஒருநொடி சுருங்கி விரிய, “நான் கேட்டது இவனோடு பிரச்சனை பண்ணினவங்களை..” என்றான்.
“அவர் தான் ஸார் இவர்!!..” என்று சொல்ல வாசுதேவன் வேதாந்த்தை முறைத்து கொண்டிருந்தார்.
ஒரு கையால் முகத்தை மறைத்தபடி, “கிழிஞ்சது போ!!” என்று நண்பனின் புறம் திரும்பினான்.
“என்ன மச்சி கிழிஞ்சது?” என்றான் புரியாமல்.
“டேய் நிஜமாவே இவர் கூடவா பிரச்சனை பண்ணின?”
“மச்சி என் மாமனாரை பார்க்க போனவனுக்கு இந்தாள் கூட பிரச்சனை பண்ண வேண்டுதலா என்ன? இவர் தான்டா என்னோடு பிரச்சனை பண்ணினது..” என்றவன்,
“டேய் இரு.. இரு பெருசுக்கு என்னடா மரியாதை? வயசாகி இருக்கே தவிர்த்து அந்த ஆளுக்கு மண்டையில மசாலா இல்லை..” என்றிட,
“ராஸ்கல், வாயை மூடுடா! உன் மாமனாருக்காக வந்தியா இல்லை எனக்கு மாமனாரே இல்லாம பண்ண வந்தியா?”
“என்ன மச்சி சொல்ற?”
“அவர் க்ருதியோட அப்பா டா!!”
“கீர்த்தியா? அது யாரு?”
“கீர்த்தி இல்லை க்ருதி!! ப்ச் என் அக்காவோட மாமனார் கார்த்திக், கூடிய சீக்கிரம் எனக்கும் மாமனார் ஆக போறவர்..”
“என்னடா சொல்ற?” என்றவன் தன் போக்கில் எழுந்து நின்று விட்டான்.
“ஆமா, உட்கார்!! அவருக்கும் எனக்கு ஏற்கனவே ஏழாம் பொருத்தம்..”
“என்னடா சொல்ற?” என்றவனிடம் விஷயத்தை சொல்லி முடிக்க, “மச்சி ஸாரி டா! அக்கா கல்யாணத்தப்போ வந்திருக்கேன் பட் இவரை எனக்கு சரியா நியாபகம் இல்லை” என்றான்.
நெற்றியை கீறியபடி வாசுதேவனை பார்க்க அவரோ அனல் தெறிக்க அவனை பார்த்திருந்தார்.
அதை கண்ட கார்த்திக், “மச்சி என்ன டா இப்படி முறைக்கிறார்?” என்றான்.
“அவருக்கு போலீசே பிடிக்காது.. அந்த ஒரே காரணத்துக்காக பெண் கொடுக்க மாட்டேன்னு சொன்னவர் அவரை போய் ஸ்டேஷனுக்கே கூட்டிட்டு வந்து.. அதுவும் என்னையும் கோர்த்து விட்டு, ப்ச் ஏன்டா?” என்றான் வேதனை கலந்த சிரிப்போடு.
“ஸாரி ஆரி, நான் போய் அவர் கிட்ட இப்பவே பேசறேன்..”
“ப்ச், அதெல்லாம் வேண்டாம் நீ அமைதியா உட்கார்!” என்றவன் “டூ நாட் ஃபோர் தர்ஷனை வர சொல்லுங்க?” என்றதும் கான்ஸ்டபிள் வெளியில் செல்ல திருட்டு கேஸை விசாரித்து கொண்டிருந்த தர்ஷன் வேகமாக உள்ளே வந்தான்.
“ஸர், கூப்ட்டீங்களா?”
“ஹ்ம்ம்! நீ தானே இவங்களை இங்கே கூட்டிட்டு வந்தது?”
“ஆமா ஸர்..”
“உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவில்லையா மேன்?” என்றான் ஆழ்ந்த குரலில்.
“ஏன் ஸர் என்னாச்சு அந்தாளு இன்னும் துள்ளிட்டு இருக்காரா? நீங்க ‘ம்ம்’ ன்னு சொல்லுங்க உங்க ஃபிரெண்ட் கிட்ட லந்து பண்ணின அந்தாளுக்கு போலீஸ் அடின்னா என்னன்னு காட்டுறேன்..” என்றான் சப்தமாக.
“அப்படி எதுவும் பண்ணிடாதீங்க..” என்று கார்த்திக் தர்ஷனிடம் சொல்ல, “ஸர், நீங்க எதுக்கும் பயப்படாதீங்க நாங்க பார்..” என்றவனை இடையிட்ட வேத் “அடங்குடா!!” என்றான் அடக்கப்பட்ட கோபத்தோடு.
Comments
Post a Comment