வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

மனசெல்லாம் மழையே - 70

 


மேலும் நான்கு மாதங்கள் கழிந்த நிலையில்: 

இளந்தளிர் காலை உணவை முடித்துக்கொண்டு வழக்கம் போல பள்ளிக்கு கிளம்பி சென்றவள் முதலில் அம்பலவாணனை சந்தித்துவிட்டு தன் வகுப்பிற்கு செல்ல “குட் மார்னிங் மேம்” என்று வகுப்பறையே அதிர்ந்த  பிள்ளைகளின் உற்சாகக்குரல் தளிரையும் தொற்றிக்கொள்ள,

“ஹாப்பி மார்னிங் டியர்ஸ், ஸிட் டவுன்” என்றவள் கையிலிருந்த புத்தகங்களை மேஜையில் வைத்து விட்டு வருகை பதிவேட்டை கையில் எடுத்திருந்தாள்.

ஆம் தன் வீட்டிற்கு திரும்பிய பின் ஓரளவு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி இருந்தது இளந்தளிரின் குடும்பம். உதய்யின் விபத்திற்கு முன் அவள் மீதிருந்த கடுமையான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சரத்தின் வன்மத்தின் முன் ஓரளவு குறைந்திருந்தது.

நல்லவேளை மற்றவர்களை போல அல்லாமல் தளிரோடு பணிபுரிந்த ஆசிரியர்கள் பெரும்பான்மையானோர் இளந்தளிர் மீது முன்பு அவர்கள் கொண்டிருந்த நேசத்தையும் நம்பிக்கையையும் சரத்தின் குற்றச்சாட்டால்  இழக்கவில்லை. அவளை அறிந்தவர்கள் யாருமே இந்த ஒரு நிகழ்வை வைத்து அவளை தீர்மானித்து விடவில்லை எனும்போது அவளிடம் பயின்ற குழந்தைகளை பற்றி கேட்கவும் வேண்டுமா என்ன..?

நான்கு மாதங்களுக்கு முன் முதன்முதலாக அவள் பள்ளியில் நுழைந்த மறுகணமே தளிரை கண்ட குழந்தைகள் ஆரவாரத்தோடு ஓடி வந்து அவளை அரவணைத்து வரவேற்று அன்று நாள் முழுக்க தளிரின் வரவை கொண்டாடி தீர்த்தனர்.

அன்று மட்டுமல்ல அவள் மீதான குற்றம் அதை தொடர்ந்த பேச்சுக்கள் எதுவுமே என்றுமே குழந்தைகளை பாதிக்கவில்லை... அவள் மீது அவர்கள் கொண்டிருந்த நேசம் எள்ளளவும் குறையாது தினமும் அவளுக்கு மெசேஜ் அனுப்புவது சிலர் கால் செய்துஎப்போ வருவீங்க மேம்..? கம் சூன்’ என்று கேட்டுக்கொண்டு தான் இருந்தனர்.

வைஷு போன்றே அவள் மீது பித்தாகி இருக்கும் சில பிள்ளைகள் அவளை பார்த்துவிட வேண்டும் என்று பெற்றோரிடம் அடம் பிடித்து பூட்டி இருந்த அவள் வீட்டிற்கு வந்து திரும்பி போன நிகழ்வுகளும் இத்தனை நாளில் நடந்திருந்தது.

பிள்ளைகள் மட்டுமல்ல உடன் பணிபுரியும் ஆசிரியர்களுமே அவளுக்கு பக்கபலமாக தான் இருந்தனர்.சீக்கிரம் சரியாகிடும் மேம் பீ ஸ்ட்ராங்... இதை கடந்து நீங்க ஸ்கூல்க்கு வரும் நாளுக்காக காத்திருக்கிறோம்” என்றிருந்தனர்.

என்னதான் சமூக வலைத்தளம் முழுக்க ஆசிரியர் சமூகத்திற்கே இளந்தளிர் கரும்புள்ளி எனுமளவிற்கு அவள் ஒழுக்கத்தோடு பணியையும் விமர்சித்திருந்த போதும் ஏனோ சக ஆசிரியர்களால்  அவளை தவறாக நினைக்க முடியவில்லை.

மீண்டும் அதே பள்ளிக்கு செல்ல வேண்டுமா..?’ என்ற அவள் யோசனை கூட இத்தனை நடந்த பிறகு மீண்டும் தன்னால் அம்பலவாணன் அவர் குடும்பத்திற்கு அவப்பெயர் தேவையா என்பதால் மட்டுமே. அவரே தளிரை அழைத்து பணிக்கு வர சொல்லிவிட்ட பின்னர் தைரியமாக பள்ளிக்குள் நுழைந்தாள்.

ஆனால் அன்றைய வரவேற்பு அவளே எதிர்பாராத வகையில் தளிரை திக்குமுக்காட வைத்துவிட்டனர் அவள் பிள்ளைகள், ஒருகட்டத்தில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது தளிரின் விழிகளில் இருந்து. தளிர் மட்டுமல்ல தென்றல் சீதாவும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருந்தனர்.

*********************

மருத்துவமனையில் இருந்து திரும்பிய அண்ணாமலையிடம் தளிர் குறித்து யாருமே பேசக்கூடாது என்று அம்பலவாணன் கடுமையாக எச்சரித்திருந்தார். ஏற்கனவே பேரன் உயிர் பிழைத்து வந்ததையே அவரிடம் பக்குவமாக சொல்லியிருந்தனர் .. அப்படியிருந்தும் அதன் தாக்கம் அவரை மீண்டும் சில வாரங்கள் மருத்துவமனையில் வாசம் கொள்ள செய்ததில் இப்போது தளிர் பற்றியோ அவள் வழக்கு பற்றியோ அவர் பார்வைக்கு யாருமே கொண்டு செல்லவில்லை.. 

காலை உணவை முடித்துக்கொண்டு கிளம்பிய உதயாதித்தன், “உதய்” என்ற அண்ணாமலையின் குரலில் தேங்கி நின்றான்.

ஒரு பத்து நிமிஷம் உன்கிட்ட பேசணும் ப்பா நேரமிருக்கா..?” என்றார். பின்னே கடந்த மூன்று மாதங்களாகவே தொழிலை சீர்படுத்தும் முயற்சியில் வேலை அவனை நெருக்கி பிடிக்க நேரம் காலம் பாராமல் ஓடிக்கொண்டிருப்பவன் வீட்டிற்கு வருவதே உறங்குவதற்கு மட்டுமே.

சொல்லுங்க தாத்தா” என்று அவரருகே அமர்ந்தான். அம்பலவாணன் அன்னபூரணி என்று அனைவருமே அங்கே தான் இருந்தனர்.

இது சக்கரவர்த்தியோட பெண்! நம்ம வீட்டுக்கு கூட வந்திருக்கு நீயும் பார்த்திருப்பன்னு நினைக்கிறேன்” என்று ஒரு பெண்ணின் புகைபடத்தை அவனிடம் கொடுத்தார்.

அமைதியாக வாங்கிகொண்டவன் புகைப்படத்தை பார்க்க அதில் சர்வலட்சணமும் ஒருங்கே அமைந்திருந்த பெண் அவன் கண்களை கவர்ந்திருந்தாள்.

ஆமா தாத்தா நம்ம வீட்டு விசேஷத்துல பார்த்திருக்கேன், பேசியிருக்கேன்... பேர் கவின்மலர் தானே..?” என்றதில் அனைவர் முகத்திலும் அத்தனை மகிழ்ச்சி.

உனக்கு தெரியுமாப்பா.. பேர் கூட சரியா சொல்ற..?” என்று அன்னபூரணி புன்னகையோடு கேட்க..,

தெரியும் பாட்டி, ரொம்ப நல்ல பொண்ணு... வித்யாசமான அழகான பேர்.. எனக்கு நல்லா நியாபகமிருக்கு...”

உனக்கு பேசலாம்னு இருக்கோம் உதய்... ஜோசியரையும் பார்த்தாச்சு உங்க ரெண்டு பேரோட ஜாதகமும் அவ்ளோ அம்சமா பொருந்தி இருக்கு அடுத்த மாசம் முகூர்த்த தேதி குறிச்சு கொடுத்திருக்கார்..."

"எங்க எல்லாருக்குமே சம்மதம்... சக்கரவர்த்தி குடும்பத்துக்கும் இதுல முழு சம்மதம் நாளைக்கே கூட பெண் பார்க்க வர சொல்லிட்டாங்க... நிச்சயத்தை கல்யாணத்துக்கு முந்தின நாள் வச்சுக்கலாம்ன்னு இருக்கோம்.. நீ என்னப்பா சொல்ற...?” என்று ஆர்வமாக பேரன் முகத்தை பார்க்க.,

கவின்மலரையே பார்த்திருந்தவன் சில நொடிகளுக்கு பின், “எல்லாருக்கும் சம்மதமா இருக்கும் பட்சத்தில் நான் வேண்டாம்னா சொல்ல போறேன்.. எனக்கும் முழு சம்மதம்! பேசி முடிச்சுடுங்க தாத்தா” என்றான் அவர் கரங்களை பற்றிக்கொண்டு புன்னகையோடு.

நிஜமாவாப்பா” என்று ராஜி முன்னே வந்து வாயெல்லாம் பல்லாக கேட்டிருந்தார். பின்னே அன்று மருத்துவமனையில் உதய் நடந்து கொண்ட விதத்தில் வெகுவாக மிரண்டு போயிருந்தார்.

அன்று தளிர் பெரிதாக அவனுடன் நெருக்கமோ ஒட்டுதலோ காட்டாததும் மகன் அவளோடு ஒட்டி உறவாடியதையும் கண்டவருக்கு இனி என்னதான் அவர் முயற்சி எடுத்து தளிரை விலக்க நினைத்தாலும் மகன் அவளை விடப்போவதில்லை என்பது உள்ளங்கை நெல்லியாக புரிந்திருந்தது.

உதய் அவருக்கு போட்டுக்காட்டிய படத்தினால் ஜெகாவிடம் அன்று தொடங்கிய புலம்பல் இன்று வரையிலுமே தொடர்ந்திருந்தது. இப்போது மகன் தன் முடிவை மாற்றியதில் ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஒருங்கே கொண்டிருந்தவருக்கு தன் காதையே நம்ப முடியவில்லை.

ஆதி நிஜமாவா ப்பா சொல்ற ..?”

ஆமா ராஜிம்மா! இதுல என்ன சந்தேகம் உங்களுக்கு..? நிஜமாத்தான் சொல்றேன்

இப்போதான் சந்தோஷமா இருக்கு ஆதி” என்று ராஜி நெட்டிமுறிக்க..,

அப்போ நாளைக்கு பெண் பார்க்க வரோம்னு  சொல்லிடட்டா ப்பா” என்றார் அண்ணாமலை.

சொல்லலாம் தாத்தா ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு சில கண்டிஷன்ஸ் இருக்கு அதை பற்றி கவின்மலர் கிட்ட பேசணும்.. அதன் பிறகு  நீங்க சக்கரவர்த்தி அங்கிள் கிட்ட பேசலாம்...” 

என்னப்பா பேசணும்..? அவங்களுக்கு தான் நடந்து முடிஞ்ச எல்லா விஷயமும் தெரியுமே புதுசா என்ன பேச போற..?” 

ப்ச் அதை பற்றி இல்ல தாத்தா அதுதான் ஊருக்கே தெரியுமே நான் புதுசா சொல்ல என்ன இருக்கு.. நான் பேசணும்னு சொன்னது கல்யாணத்துக்கு அப்புறம் எங்களோட வாழ்க்கை எப்படி இருக்கும்னு மலர் கிட்ட பேசி தீர்மானிச்சுட்டு கல்யாணம் பண்றது சரியா இருக்கும் அதை சொன்னேன்என்று சொல்ல ஒருவருக்கும் அவன் பேச்சு புரியவில்லை.

“...” 

அது ஒண்ணுமில்ல தாத்தா நீங்க எனக்காக தேர்ந்தெடுத்த கவின் மலரை கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பேன் ஆனா அவங்க இந்த வீட்டு மருமகளா இருப்பாங்களே தவிர என்னைக்கும் எனக்கு மனைவியா இருக்க முடியாது” என்று முதல் இடியை இறக்க அனைவர் முகத்திலும் மின்சாரம் பாய்ந்த அதிர்வு. 

அடுத்து இந்த குடும்பத்துக்கு ஒரு வாரிசு தேவை! அதனால கண்டிப்பா மலருக்கு குழந்தை பிறக்கும் ஆனா ஐவிஎஃப் மூலமா” என்று அடுத்த இடியை இறக்க அம்பலவாணன் தவிர்த்து மற்றவர்களுக்கு அவன் சொன்னது புரியவில்லை.

என்ன பேசற உதய்..?”  என்று அவர் பதறவும்

ப்பா ப்ளீஸ் நான் பேசி முடிச்சுடுறேன் 

ஐசிபின்னா என்ன அம்பலா..?” என்ற கண்களை சுருக்கிக்கொண்டு பார்த்த தந்தைக்கு பதிலளிக்கும் முன் அவர் கையை பிடித்துக்கொண்ட உதய், 

செயற்கை முறையில் குழந்தை பெத்துக்கறது தாத்தா”

ஏன்..? உனக்கு என்ன குறை..?” என்று அவர் பதற,

எனக்கு எந்த குறையும் கிடையாது தாத்தா ஆனா தளிர் இஸ் இன்னொசென்ட்! அது கூடிய சீக்கிரம் நிருபிக்கபட்டுடும் அதன் பிறகும் தளிரை உங்களால ஏற்றுக்கொள்ள முடியாது கவின்மலர் தான் இந்த வீட்டுக்கு மருமகளா வரணும்னு நீங்க பிடிவாதமா இருந்தா இந்த வீட்டுக்கு மருமகளை கூட்டிட்டு வரதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை..

தாராளமா கவின் மலரை கல்யாணம் பண்ணி இந்த வீட்டோட கௌரவத்தை காப்பாற்றுவேன்... அதேபோல இந்த குடும்பத்துக்கான வாரிசும் கிடைக்கும் ஆனா இயற்கையா இல்லாம செயற்கையான முறையில்” என்று சொல்ல அண்ணாமலையின் முகம் கலவரமானது.

என்... என்ன சொல்ற...?”

இதுக்கு என்ன அர்த்தம்..?”

தளிரை தவிர வேற யாரும் என்னோட மனைவியாக முடியாது நான் அவளோடு மனசார வாழ்ந்துட்டு இருக்கேன்னு அர்த்தம்.., அவளோடு மட்டுமே ஆத்மார்த்தமா வாழ முடியும்னு அர்த்தம்... அவளை தவிர வேற ஒரு பொண்ணுக்கு என் மனசுலயும் என் ரூம்லயும் இடமில்லைன்னு அர்த்தம்”

அதுவும்  நீங்க விரும்பினா மட்டுமே தளிர் என்னோட மனைவியாக முடியும்... உங்களை மீறி ஒருநாளும் நான் தளிரை கல்யாணம் பண்ண நினைக்கமாட்டேன் ... நீங்க மனப்பூர்வமா சம்மதிச்சு தாலி எடுத்து கொடுத்து உங்க ஆசிர்வாதத்தோடு தான் என்னோட கல்யாணம் நடக்கும்”

நடந்ததை மறைச்சு நம்ம குடும்பத்தை இந்த நிலைக்கு கொண்டு வந்த பெண்ணுக்கு இந்த வீட்ல இடமில்லை” என்றார் அண்ணாமலையும் உறுதியான குரலில்.

அப்போ என்னோட முடிவுலயும் மாற்றமில்லை”

என்ன பேசற உதய்..? கல்யாணத்துக்கு உண்டான அடிப்படையையே ஒதுக்குவேன் சொல்றது எந்த விதத்துல நியாயம்... அந்த பெண்ணோட பாவம் நம்ம குடும்பத்தை சும்மா விடாது

பாட்டி ஒரு நிமிஷம் ஏன் அவசரபடறீங்க..? இதெல்லாம் அந்த பொண்ணுக்கு சொல்லிட்டு அவ சம்மதிச்சா மட்டும் தான் ஊர் உலகத்துக்காக நம்ம குடும்ப கௌரவத்துக்காக கல்யாணம் பண்ணிப்பேன்... அதுகூட தாத்தாவோட விருப்பத்தை நிறைவேற்ற மட்டுமே..

அப்போ அந்த பொண்ணு கடைசிவரை கன்னியாவே காலத்தை கழிக்கனுமா..? ஊரெல்லாம் அவளை மலடின்னு சொல்லும் உன்னோட சுயநலத்துக்காக ஒரு பெண்ணோட வாழ்க்கையை அழிப்பியா..?”

ப்ச் அதுதான் சொன்னேனே செயற்கையான முறையில் மலருக்கு குழந்தை பிறக்கும் ... யாரும் மலடின்னு சொல்லமாட்டங்க” என்றதில்,

இது என்ன அர்த்தமற்ற பேச்சு உதய்” என்று கொதித்தெழுந்து விட்டார் அம்பலவாணன்.

                                   *********************

அப்பா நீ செழிப்பா வாழறதுக்காக கல்யாணத்தை பற்றி பேசிட்டு இருக்கார் உதய்.. உனக்கு விருப்பம் இல்லைன்னா அதை நேரடியா சொல்லாம இதென்ன அர்த்தமற்ற பேச்சு...?”

அர்த்தமில்லாம பேசலைப்பா... தாத்தா எனக்காக மெனக்கெட்டு நடத்தி வைக்கபோற கல்யாணம் எனக்கு விருப்பமில்லாத பெண்ணோடு அமையும் பட்சத்தில் அது எப்படி அர்த்தமில்லாததா மாற போகுதுன்னு அவருக்கு புரியவைக்கிறேன்... இதை நான் யாருக்கும் தெரியாம சொல்லாம செய்து பின்னாடி எல்லாரும் கஷ்டபடரதுக்கு முன்னாடியே சொல்லிடறது பெட்டர்னு தான் சொல்லிட்டு இருக்கேன்”

இதனால உன் வாழ்க்கை மட்டுமல்ல அந்த பெண்ணோட வாழ்க்கையும் தானே வீணாகும்..?”

நான் இல்லைன்னு சொல்லலையே ப்பா..! அதனால் தான் என்னோட கண்டிஷனை சொல்லிட்டு அவளுக்கு விருப்பமிருந்தா மட்டும் தான் கல்யாணம் பண்ண போறேன்

நீ சந்தோஷமா வாழறதுக்காக கல்யாணம் செய்தா வாழவே மாட்டேன்னு சொல்றது என்ன நியாயம்..?” என்று அண்ணாமலை உரத்த குரலில் கேட்க, 

நான் வாழ மாட்டேன்னு எங்க தாத்தா சொன்னேன்..? தளிரை தவிர வேற யாரையும் என்னால மனைவியா பார்க்க முடியாது ஆத்மார்த்தமா வாழ முடியாதுன்னு சொல்லிட்டு இருக்கேன்”

ஒருவேளை கவின்மலருக்கு விருப்பம் இல்லைன்னா குடும்ப கௌரவத்துக்காக ஒரு தாலி குழந்தை இதுக்கு சம்மதிக்கிற பொண்ணு யாரா இருந்தாலும் இந்த வீட்டுக்கு மருமகளா வரலாம்”

“....”

இப்போ சொல்லுங்க தாத்தா இப்படி ஒரு கல்யாணம் எனக்கு தேவையா..? உங்களுக்கு தளிர் இந்த வீட்டுக்கு வருவதில் விருப்பம் இல்லைன்னா நான் அவளை கட்டி வைங்கன்னு சொல்லி உங்களை எப்பவும்  கட்டாயபடுத்த மாட்டேன். அதேபோல நீங்களும் என்னை இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்ய சொல்லி கட்டாயபடுத்தாதீங்க...”

உங்க கட்டாயத்துக்காக நான் செய்யப்போற கல்யாணத்தால எனக்கு சந்தோஷம் கிடைக்காது அதைவிட காலம் முழுக்க அந்த பெண்ணோட வாழ்க்கையையும் சேர்த்து வீணடிக்கிற குற்ற உணர்ச்சி தான் அதிகமாகும்... அதுக்கு பதில் என்னை இப்படியே விட்டுட்டீங்கன்னா நான் நிம்மதியாவாவது இருப்பேன்..”

ஆதி..” என்ற ராஜிக்கு வார்த்தை எழவில்லை.

இதுதான் என்னோட முடிவு.. உங்க எல்லாருக்கும் இதுல சம்மதம் என்றால் பெண் பார்க்க கிளம்பலாம் இல்லையா ப்ளீஸ் எனக்கு கல்யாணம் தேவையில்ல நான் விட்டுடுங்க இப்படியே இருந்துக்கறேன்”

என்ன ஆதி பேசற..?” என்று ஜெகா கண்ணீரோடு மகனை பார்க்க,

ம்மா உங்களுக்கும் சேர்த்து தான் சொல்றேன்... நீங்க எந்த பெண்ணை பார்த்து முடிவு பண்ணினாலும் அவ இந்த வீட்டுக்கு மருமகளா மட்டும் தான் இருப்பா எப்பவும் எனக்கு மனைவியாக முடியாது...” என்று உறுதியாக சொல்ல அங்கே கனத்த அமைதி.  

ஒன்னும் அவசரமில்லை தாத்தா! தளிரோட கேஸ் முடிய இன்னும் நிறைய நாள் இருக்கு நீங்க பொறுமையாவே முடிவு பண்ணுங்க ஆனா கவின்மலர் தான்னு நீங்க உறுதியா இருந்தா இந்த கல்யாணம் நடக்கும் முன்னாடி எனக்கு அவங்க கிட்ட பேசணும்.. என்னோட கண்டிஷன்ஸ் எல்லாமே அவங்க  குடும்பத்துக்கு சொல்லிட்டு அவங்க சம்மதிச்சதும் நான் தாலி கட்டறேன்” என்றவன் பேச்சு முடிந்தது போல கிளம்பி செல்ல மொத்த குடும்பமும் ஸ்தம்பித்து போயிருந்தது. 

குலம் தழைத்து வாழையடி வாழையாக செழிப்போடிருப்பதற்காக செய்திடும் திருமணத்தின் அஸ்திவாரத்தையே அசைத்து பேரன் பேசிய பேச்சில் மற்றவர்களை விட வெகுவாக ஆட்டம் கண்டு போயிருந்தது என்னவோ அண்ணாமலை தான். 

Comments

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17