“இத்தனைக்கும் அந்த பதிவு திருமணம் பற்றி
தெரியாத வரையில் ‘ஐ டிசெர்வ் எ லைஃப்’ ன்னு நினைச்ச பெண்ணை இப்போ என்னை கல்யாணம் பண்ணிக்க
என்ன அருகதை இருக்குன்னு நினைக்கிற நிலைக்கு கொண்டு வந்து நிறுத்திட்டான்” என்று
சொல்ல அங்கே கனத்த அமைதி.
“சொல்ல வேண்டியது எல்லாமே சொல்லிட்டேன் ஆனாலும்
கடைசியா ஒன்னே ஒன்னு சொல்லிடுறேன் உங்கிட்ட உண்மையை மறைச்சு இந்த கல்யாணத்தை
முன்னெடுத்தது நான்..!! தளிர் நிறுத்த சொன்ன பிறகும் நிறுத்தாம போனது
நான்...!”
“அதனால தான் சரத் கல்யாணத்தை நிறுத்தும்படி ஆச்சு, சோஷியல
மீடியா பேப்பர்ன்னு நம்மோட விஷயம் வெளிவந்தது.., அதேநேரம்
தளிர் விலக சொன்ன பிறகும் விலகாம போனது நான்..!! ஆக்சிடென்ட், கார், பஸ்ன்னு நமக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கும் காரணம்
நான்...!! உங்களோட கோபத்தை என் மேல காட்டுங்க எனக்கு தண்டனை கொடுங்க”
“....”
“பரவால தாத்தா நீங்க உடனே உங்க முடிவை
மாத்திக்க வேண்டாம் உங்க மனசு எப்போ சம்மதிக்குதோ அதுவரை நான் காத்திருக்கேன்..”
“என் மனசுல அழுத்தமா இடம் பிடிச்ச தளிரை அவ்ளோ
சீக்கிரம் என்னால தூக்கி எறிய முடியாது. கல்யாணம் பண்ணி ஒரு பெண்ணுக்கு துரோகம்
செய்யனும்னு நினைக்கிறீங்களா..? அப்படி செய்தா நான்
உயிர்போடு இருக்க மாட்டேன் அப்பவும் என் மனசு அவளை தான் தேடும்.. என்னோட சந்தோஷம்
தளிரோட மட்டும் தான்..!” என்று பேச்சு முடிந்தது போல எழுந்து கொண்டவன் சுற்றி
இருந்தவர்களை பார்த்தவாறு,
“இன்னொரு முக்கியமான விஷயம் தாத்தா, சரத் தளிரோட விருப்பமில்லாம அவளுக்கு தாலி கட்டி ஏமாற்றி கையெழுத்து
வாங்கினது மட்டுமில்லாம அன்னைக்கு ப்ளான் பண்ணின மாதிரி மகாபலிபுரத்துல ரூம்
போட்டிருந்தவன் அவளை மயக்கத்துலயே ஏதாவது செய்திருந்தாலும் அதைப்பற்றி எனக்கு கவலை
இல்ல...” என்றதில் நிவி, ராகவன், அம்பலம்,
சுஜி போன்றோர் புன்னகையோடு உதய்யை பார்க்க மற்றவர்களிடம் சொல்லென்னா
அதிர்வு..!!
“இப்போ எதுக்கு இந்த பேச்சு..?” என்று அண்ணாமலை சிறு தடுமாற்றத்தோடு கேட்க,
“அவளுக்கே தெரியாம நடந்த எதுக்குமே அவ பொறுப்பு
இல்லாததால அப்பவும் என் முடிவுல எந்த மாற்றமும் இருந்திருக்காது தளிர் மட்டும்
தான் என் மனைவின்னு சொல்றேன். இதெல்லாம் மனசுல வச்சுட்டு நல்ல முடிவு எடுங்க..
தளிர் கேஸ் ஃபைனல் ஜட்ஜ்மென்ட் இந்த மந்த் என்டுன்னு அலர்விழி மேம் சொல்லி இருக்காங்க”
என்று கூடுதல் தகவல் சொன்னவன் தன்னறைக்கு சென்று கதவடைத்துவிட்டான்.
மேலும் சில நாள்கள் கழிந்த நிலையில்:
அன்றிரவு அறைக்கு திரும்பிய கணவரிடம், “தளிர்
விஷயத்துல என்ன முடிவு பண்ணியிருக்கீங்க..?” என்று அன்னபூரணி
கேட்க அண்ணாமலையிடம் பலத்த யோசனை.
“இதுக்கு மேலயும் யோசிக்க என்ன இருக்கு..?
உதய் கேட்டது எல்லாம் சரிதானே.., நாளைக்கே
கோவிலுக்கு ஹாஸ்பிட்டலுக்குன்னு போற இடத்துல எனக்கு ஏதோ ஒன்னு ஆகிடுச்சுன்னா
பாதிக்கபட்ட என்னை குணமாக்க பார்ப்பீங்களா இல்லை ஒதுக்கி வைப்பீங்களா சொல்லுங்க..?”
“என்ன பேசற பூரணி? இந்த
வயசுல உனக்கு என்ன ஆகிடபோகுது.., அபத்தமா பேசாத” என்று
அண்ணாமலை முகம் இறுக சொல்லவும்,
“ஏன் நடக்காம, அதுதான்
நாமலே ஒருமுறை நியூஸ்ல பார்த்தோமே அறுபத்தி ஏழு வயசு பொம்பளையை என்ன சித்ரவதை
பண்ணினாங்கன்னு...”
“உதய் கேட்ட கேள்வி தப்பு கிடையாதே! அன்னைக்கு
கூட நியூஸ்ல பார்த்தோமே ஏதோவெளிநாட்டுல இருந்து நம்ம நாட்டுக்கு புருஷன்
பொண்டாட்டியும் ஜோடியா வண்டியிலேயே சுத்தி பார்த்துட்டு வடநாட்டு பக்கமா டென்ட்
போட்டு தூங்கிட்டு இருந்தப்போ ஒரு கும்பல் அந்த புருஷனை கட்டிப்போட்டு அவன்
கண்முன்னாடியே அந்த பொண்ண பாலியல் வன்கொடுமை செய்தாங்கன்னு.. அப்போ புருஷனோட
வெளியில வர பொண்ணுக்கு மட்டும் பாதுகாப்பு இருந்திடுதா..?”
“ஃப்ரெண்டை நம்பி போனது தப்புன்னு சொல்றீங்களே
அதேபோல புருஷனை நம்பி ஊர் சுத்தி பார்க்க வந்ததும் அந்த பெண்ணோட
தப்பு வீட்டோடு இருந்திருக்கணும்னு சொல்ல வரீங்களா..? அந்த
பொண்ணோட புருஷன் அவளை புரிஞ்சுகிட்டு காயத்துக்கு மருந்தா இருக்கான். ஒரு புருஷன்
அப்படித்தான இருக்கணும்...”
“நல்லவேளை நம்ம தளிருக்கு அப்படி
ஒரு அசம்பாவிதம் நடக்கலை அப்படி நடந்திருந்தாலும் அதை பொருட்படுத்த மாட்டேன்னு
சொன்ன என் பேரனோட காதலும் அவளுக்கு நல்ல புருஷனா இருக்கணுங்கிற அவனோட ஆசையும் ஏன் உங்களுக்கு
புரிய மாட்டேங்குது” என்று கேட்க அண்ணாமலைக்கு மட்டும் அது புரியாமல் இருந்திடுமா
என்ன..?
திருமணம் தடைபட்டதோ, பொருட்சேதமானதோ, தங்கள்
குடும்ப கௌரவம் எல்லாமே பேரனுக்கும் அவன் விருபத்திற்கும் பின்னால் தான்..!
ஆனால் தளிரின் மறதியால் சமூக வலைதளங்களில் பெயர்
தெரியாதவர்கள் எல்லாம் தன் பேரனை எத்தனை பெரிய வார்த்தைகளால் விமர்சித்து விட்டனர்
என்பதை இன்னுமே கடந்து வரமுடியாமல் அல்லாடிக்கொண்டு இருக்கும் மனிதருக்கு
அதனாலேயே தளிரை அத்தனை எளிதாக மன்னிக்க முடியவில்லை.
“நம்ம காலம் மாதிரி இல்ல இப்போ நாட்டுல
பொண்ணுங்களுக்கு பாதுகாப்பு ரொம்பவே குறைஞ்சுட்டு வருது நாமலே அதை பேப்பர்,
நியூஸ்ல பார்த்துட்டு தான் வரோம்..., சின்ன
சிசுவுல இருந்து கட்டையில போக போற பொம்பளை வரைக்குமே இந்த அக்கிரமம் நடக்குது
அப்போ அப்படி உடலளவுலயும் மனசலவுலயும் காயப்பட்ட பொம்பளைங்க வாழ தகுதியே
இல்லாதவங்கன்னு சொல்லிடுவீங்களா..?”
“சரி என்னை விட்டு தள்ளுங்க ஆனா நிவி, சுஜி இல்ல ஜெகாவுக்கே இப்படி ஒரு நிலைமை வந்து அது எதிர்பாராம ஃபோனுலயும்
பேப்பர்லயும் வந்துட்டா கண்ட நேரத்துல ஊரை சுத்தி நம்ம குடும்ப மானத்தை
வாங்கிட்டாங்கன்னு சொல்லி அவங்களை ஒதுக்கி வச்சிடுவீங்களா இல்லை மாப்பிள்ளைகளை
அத்து விட்டுட்டு வேற பெண்ணை கட்டிக்க சொல்லி சொல்லுவீங்களா..?” என்றதில் அண்ணாமலையால் பதில் பேச முடியவில்லை.
“அது எப்படி..? என்
பேத்திகளை பற்றி எனக்கு தெரியும்.. அவங்களுக்கு நடந்த அசம்பாவிதத்துக்கு அவங்க
பொறுப்பில்லாதப்போ அவங்களை எப்படி ஒதுக்குவாங்க நான் விட்டுடுவேனா..?”
“இதோ இதுதான்..! இந்த எண்ணப்போக்கை தான் உதய்
மாத்திக்க சொன்னான்”
“சட்டுன்னு எப்படி பூரணி மாறும்..?” என்று உள்ளிறங்கிய குரலில் கேட்க அன்னபூரணிக்கே
அவரை கண்டு பாவமாகி போனது. பல வருடங்களாக அவருள் ஊறிப்போயிருக்கும் விஷயங்களை
சட்டென மந்திரம் போட்டார் போல மாற்றுவது கடினமே இருந்தாலும் அவர் விடுவதாக
இல்லை...
“அப்போ தளிருக்கு நடந்ததுக்கு மட்டும் அவ
எப்படி பொறுப்பாவான்னு சொல்றீங்க...?”
“அந்த பசங்களோட பழகாம இருந்திருந்தா நல்லா
இருந்திருக்குமே...” என்று அவர் இழுக்கவும்,
“அப்போ முதல்ல உங்க பேத்திங்க ஸ்கூல்ல இருந்தே
ஆம்பளை பசங்களோட சேர்ந்து படிக்க விட்டிருக்க கூடாது.. வைஷு பொறந்த நாளுக்கு கூட
படிக்கிற பொம்பள புள்ளைங்க மட்டுமில்ல ஆம்பளை பசங்களும் தானே வராங்க... விட்டா வைஷு
அந்த பார்ட்டிக்கு போனதே தப்பு விளையாடினது தப்புன்னு அவளுக்கு நடந்த
அசம்பாவிதத்துக்கும் அந்த அசிங்கம் புடிச்ச நாயை விட்டுட்டு குழந்தையையே குத்தம்
சொல்லுவீங்க போல” என்று ஆற்றாமையோடு கணவரை பார்க்க அவரோ வாயடைத்து போய் மனைவியை
பார்த்திருந்தார்.
“போதுங்க முதல்ல இப்படி நான் சரி என்னை
சார்ந்தவங்க சரி மற்றவர்களை பற்றிய கவலை எனக்கில்லைன்னு சுயநலமா யோசிக்கிறதை
நிறுத்துங்க.., நம்ம வீட்டு பொண்ணுக்கு ஒரு நியாயம்
அடுத்தவங்க வீட்டு பொண்ணுக்கு ஒரு நியாயம்னு நீங்க பேசுறது நியாயமா..?”
“எந்த வீட்டை சார்ந்தவங்களா இருந்தாலும் எல்லாமே பொம்பளை
ஜென்மம் தான்! உதய் சொன்ன மாதிரி வலியும் வேதனையும் அனுபவிக்கிற எங்களுக்கு தான்
தெரியும். அதை கொடுக்கற உங்க இனத்துக்கு எப்படி புரியும்..!”
“என்ன பேசற பூரணி நான் அப்படியா..?”
“நீங்க அப்படியில்ல ஆனா உங்க ஆண் இனம் தான்
வக்கிரம் பிடிச்சிருக்கு அதுக்கு எங்க இனத்தையே பலி கொடுக்க பார்க்கிற உங்க போக்கு
தப்புன்னு சொல்றேன்... என்னை பொறுத்த வரைக்கும் சீதாவும் மீனாக்ஷியும் பண்ணினது
தப்பில்லை... வழியில் நடந்து போறப்போ காக்கா எச்சம் பட்டுட்டா நாலு சொம்பு தண்ணிய
ஊத்தி கழுவிட்டு அடுத்த வேலையை பார்க்கிறது தான் புத்திசாலிதனம்.”
“அந்த விதத்துல என் பேத்தி ரொம்பவே புத்திசாலி!
அதுதான் என் பேரன் விடமாட்டேன்னு சொல்றான்.. அவன் வார்த்தையை நம்பி கல்யாணம் பண்ணி
வைங்க நிச்சயமா தளிரை தவிர வேற யாராலயும் நம்ம பேரனை சந்தோஷமா வச்சுக்க முடியாது”
“கல்யாண வாழ்க்கைக்கு பணமா, அந்தஸ்த்தோ, பகட்டோ, முக்கியமில்ல
பரஸ்பர நம்பிக்கையும், அன்பும், புரிதலும்
தான் முக்கியம்..! புருஷன் பொண்டாட்டிக்கு நடுவுல நம்பிக்கை இல்லைன்னா கல்யாண
வாழ்க்கையே ஆட்டம் கண்டிடும், அந்த நம்பிக்கை இல்லாததால தான்
பலர் பிரிஞ்சு போறத நம்ம கண்கூட பார்த்திருக்கோம்...”
“தளிர் கிட்ட நம்ம அதிகம் பேசினது இல்ல ஆனா ஏதோ
ஒரு வகையில நம்ம பேரனுக்கு அவ அந்த நம்பிக்கை கொடுத்திருக்கா அவன் அவளை நம்புறான்
அது போதாதா நமக்கு..! அன்னைக்கு உங்கப்பா கேட்ட பதினஞ்சு சவரன்ல ஏழு
சவரன் தான் போடமுடியும்னு சொன்னதுல எவ்ளோ பிரச்சனை ஆச்சு... எங்க அண்ணன் தம்பியோட
உங்க பங்காளிகளுக்கு வெட்டு குத்து வரை போயிடுச்சு...
“அப்பவும் நான் தான் வேணும்னு என் மாமனார்
கிட்ட அடம்பிடிச்சு அவருக்கு தெரியாம எட்டு சவரன் நகையை எங்கப்பா கிட்ட கொடுத்து
எனக்கு போட்டு கட்டிகிட்ட உங்க ரத்தம் தானே அவனும்..!! அதுதான் உங்களை மாதிரியே
அவ்ளோ பிடிவாதமா இருக்கான்” என்று சொல்ல அண்ணாமலையிடம் சட்டென தன் பேரனை எண்ணி
கர்வப்புன்னகை.
“இங்க பாருங்க உங்க முடிவு எதுவாவும்
இருந்துட்டு போகட்டும் ஆனா நான் என் பேரன் பொண்டாட்டி பக்கம் தான்...!! தளிர் தவிர
வேற யாரையாவது உதய்க்கு கட்டி வச்சு என் பேரன் வாழ்க்கையை பாழாக்கணும்னு
பார்த்தீங்க அப்புறம் நீங்க என்னை மறந்துட வேண்டியது தான்...”
“பூரணி”
“நமக்கெல்லாம் இனி வருஷ கணக்கு கிடையாது...
வாழ்க்கையோட விளிம்புல நாளை எண்ணிட்டு இருக்கோம் வாழ வேண்டிய
பிள்ளைகளை சேர விடாம பண்ணினீங்க கடைசி காலத்துல யார் என்னனாலும் நினைக்கட்டும்னு
உங்களை விலக்கி வச்சுடுவேன்...” என்று சொல்ல அண்ணாமலைக்கு தூக்கி வாரிபோட்டது.
“என்ன பார்க்கறீங்க என்னை அப்படி செய்யவச்சு
இத்தனை வருஷ வாழ்க்கையை அர்த்தமில்லாததா ஆக்கிடாதீங்க.. இன்னும் எத்தனை வருஷம்
நாம் இருந்திட போறோம்னு நினைக்கறீங்க..? வாழ வேண்டிய
குருத்தை உங்க வீம்புக்காக கருக்கிடாதீங்க...” என்று திடமாக சொல்லி
கிளம்பி விட்டார்.
உதய்யை திட்டமிட்டு கொல்ல முயன்ற வழக்கில் முதலில் அனைத்து
ஆதாரமும் சாட்சியும் பொய் தனக்கு எதிராக ஜோடிக்கப்பட்டது என்று சரத் குற்றத்தை
ஒப்புக்கொள்ளாமல் இருந்தான்.
ஆனால் அலர் சமர்ப்பித்த ஆதாரங்களின் உண்மைத்தன்மையை உறுதி
செய்த நீதிபதிகள் குற்றத்தை ஒப்புகொண்டால் தண்டனை குறைக்கப்படும் என்று சொல்லியும்
அவன் மசியாததால் சரத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும் என்று அலர்
கோரிக்கை மனு தாக்கல் செய்திருந்தாள்.
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சோதனையின் முடிவில் அவன்
குற்றத்தை உறுதி செய்து உதய்க்கு ஏற்படுத்திய நஷ்டம் காயமடைந்தவர்களின்
குடும்பத்திற்கு என்று மூன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்து நான்கு ஆண்டுகள்
கடுங்காவல் தண்டனையும் அளித்திருந்தனர்.
அதுமட்டுமின்றி சரத் ரௌடிகளுக்கு கொடுத்த பணத்திற்கான
ஆதாரத்தை சமர்பித்தவள் தன்னை மிரட்டி, விலைக்கு வாங்க முயன்ற வீடியோவையும்
சமர்பித்து இத்தனை பணம் அவனுக்கு எப்படி வந்தது என்று அவன் பின்னணியை ஆராயவும்
கோரிக்கை வைத்திருந்தாள்.
ஆனால் அதற்கு முன்பாகவே அகனெழிலனின் தலைமையில் வருமான
வரித்துறையினரால் முறையான ஆதாரங்கள் இல்லாததால் சரத்தின் பணப்பரிவர்தனை
முடக்கபட்டிருந்தது.
முதலில் அலரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் தளிரின்
வழக்கு விசாரணையில் தீனா அசோக் கொடுத்த வாக்குமூலத்திற்கு பின் ஏற்றுக்கொண்டனர்.
ஆம் சந்தியா,
அஜய் அனைவரும் இத்தனை மாதங்களில் அசோக் தீனாவை இந்தியாவிற்கு
அழைத்து வந்து நீதிமன்றத்தில் முக்கிய சாட்சியாக நிறுத்தியிருந்தனர்.
'தப்புக்கு துணை' சென்ற
காரணத்தால் இருவருமே இத்தனை வருடங்கள் சரத்தின் கட்டுபாட்டில் தான் இருந்தனர்.
தளிர் குறித்து மற்ற நண்பர்களிடம் பேசக்கூடாது என்ற அவன் நிபந்தனையை ஏற்று தான்
மற்றவர்களுடன் பழகி வந்தனர்.
ஒருகட்டத்தில் தளிரை தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது
உண்மையை சொல்லிவிடலாம் என்று அசோக் சொல்லவும் தான் சரத்தின் கொடூர முகமே
அவர்களுக்கு தெரியவந்தது. அதன்பின் அவன் சாவி கொடுத்தால் ஆடும் பொம்மையின்
நிலைக்கு தள்ளப்பட்டனர்.
அவன் சொல்வதை கேட்கவில்லை என்றால் சரத் கண்காணிப்பில்
இருக்கும் அவர்கள் குடும்பத்தினரை இல்லாமல் செய்துவிடுவேன் என்ற மிரட்டலுக்கு
அடிபணிவதை தவிர்த்து வேறு வழி அவர்களுக்கு இல்லை. புதைகுழி என்று தெரியாமல் கால்
வைத்துவிட்டவர்களுக்கு அதிலிருந்து மீள முடியவில்லை.. ஆனால் இப்போது சரத் ஜெயிலில்
இருப்பதாலும் அவன் மீதான குற்றங்கள் நிருபிக்கபட்டதாலும் தைரியமாக சாட்சியளிக்க
முன் வந்திருந்தனர்.
இத்தனை மாதங்களில் ஜாமீனுக்காக சரத் பலமுறை தன் பணபலம் கொண்டு
முயன்ற போதும் அதை நடத்தவிடாமல் தடுத்திருந்தது அவனுக்கு எதிரான அலர்விழியின்
வாதங்கள்.. ஐந்து முறை சரத்தின் ஜாமீன் மறுக்கப்பட்டதில் அடுத்து நீதிபதியையே
மாற்றும் முயற்சி நடப்பதை அறிந்த அலர்விழி மற்ற வக்கீல்களுடன்
இணைந்து நீதிமன்ற உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு நீதிபதி மாற்றத்தை நடக்க விடாமல் செய்திருந்தாள்.
வழக்கு நடந்து கொண்டிருந்த போதே சரத் தரப்பு வக்கீல் அவன்
மனநிலை பாதிப்பு கொண்டிருப்பதாக மனு தாக்கல் செய்து அவன் செய்த குற்றங்களை
குற்றமாகவே கருதக்கூடாது என்ற வாதத்தை முன் வைக்க கொதித்து போனாள் அலர்..
அப்போதுதான் வைஷு மூலமாக வெளியாகிய வீடியோ அவளுக்கு கைகொடுக்க, அதை
சுட்டி காண்பித்தவள் கேட்ட கேள்விகளிலும் வைத்த வாதங்களிலும் நீதிமன்றத்தில்
கனத்த அமைதி நிலவியது.
திட்டம் போட்டு ஒரு பெண்ணின் வாழ்வை அழித்தவனை வழக்கில்
இருந்து தப்பிக்க வைக்க இதுபோன்ற காரணிகளை நீதிபதிகள் வன்மையாக கண்டித்திருந்தனர்.
தீனாவின் அத்தை பிள்ளைகள் அன்று ஹால்டிக்கட்டை வைத்து சாமி கும்பிடத்தான்
வந்தார்கள் என்ற சாட்சி திருப்புமுனையாக அமைந்தது.
Comments
Post a Comment