வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ?!... - 5.1

 


என்ன இருந்தாலும் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்துட்ட விஷயத்தை எனக்கு ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் ஐயா.. என்றதில் வாசுதேவனின் பார்வை அவர் மீது விழவும் அதற்காகவே காத்திருந்தவர் போல,  

“ஏற்கனவே நீங்க சொன்னதால ஒரு நாலு அஞ்சு போலீஸ் மாப்பிள்ளைங்க பாப்பா போட்டோவை பார்த்து பிடிச்சு போய் சம்பந்தம் பேசலாம்னு சொன்ன போது, அவங்க முகத்துக்கு நேராவே வேண்டாம்னு சொல்லிட்டேன்..”

“இன்னிக்கு கோவிலுக்கு போயிருந்தப்போ தான் பாப்பாவை பார்த்தேன். இந்த போலீஸ்காரர் கூட ரொம்ப சகஜமா பேசிட்டு இருந்தது, என் கண்ணையே என்னால நம்ப முடியல ஒருவேளை நீங்களும் நம்ப மாட்டீங்களோனு தான் ஃபோட்டோ புடிச்சுட்டு வந்தேன்..”

“இப்படி நீங்க போலீஸ் மாப்பிள்ளைக்கு ஒத்துப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா முன்னாடி பெண் கேட்டவங்களை சங்கடபடுத்தி இருந்திருக்க மாட்டேன்..”

“ப்ச் இப்போவும் என் முடிவுல எந்த மாற்றமும் இல்லைய்யா..” 

“ஒருவேளை லவ்வு ஏதாவது?!…” என்றதும் தான் தாமதம், 

“யோவ் இஷ்டத்துக்கு பேசாத இவர் என் மருமகளோட தம்பி அதனால குழந்தை பேசி இருப்பா.. வேற எதுவும் கிடையாது உன் இஷ்டத்துக்கு கற்பனை பண்ணாத…” என்றார் கண்டிப்போடு.

“என்னய்யா இப்படி சொல்லிட்டீங்க, நம்ம பாப்பாவை  நானே அப்படி நினைப்பேனா? இந்த காலத்து பசங்க லவ்வு கிவ்வுன்னு இருக்காங்க அப்படி ஏதாவது உங்க மருமகளோட தம்பிக்கு இருந்துட்டா அது உங்க கொள்கைக்கு எதிராக இருக்குமேன்னு தான் சொன்னேன்…” 

“அப்படி எதுவும் இல்லை முருகா.. குழந்தை படிச்சு முடிக்கவும் சொல்றேன் நீயே மாப்பிள்ளை பார்ப்ப..” என்றதில் அவர் முகம் பிரகாசிக்க, 

“சரிங்கய்யா அப்போ நான் கிளம்புறேன்..” என்று கிளம்ப முயல, 

“அப்புறம் முருகா இனி இந்த மாதிரி ஃபோட்டோ எடுக்கிற வேலை எல்லாம் வச்சுக்காத, புரியுதா?” என்றார் கடுமையான குரலில்.

“சரிங்கய்யா..” என்றவர் கிளம்ப வாசுதேவனுக்கு சேதுபதியிடம் இருந்து அழைப்பு வந்தது. 

“சொல்லுங்க ண்ணா..”

“வாசு ஃபைல் எடுத்துட்டு கிளம்பிட்டியா?”

“இன்னும் நான் வீட்டுக்கே போகலை ண்ணா..” என்றவர் நடந்ததை சொல்லி “இன்னொரு அரை மணி நேரத்துல வந்துடுறேன்..” என்றார். 

சொன்னது போலவே வீட்டுக்கு சென்று கோப்பை எடுத்துக்கொண்டு திரும்பியவர் வழியிலேயே மீண்டும் மகளுக்கு அழைத்தார். 

ஆனால், அவள் இசையமைப்பாளரிடம் பாடலை கற்றுக்கொண்டு இருந்ததால் அவர் அழைப்பை எடுக்கவில்லை.

இன்றைய நாளை இந்தப் பாடலின் ஒத்திகைக்காக இசையமைப்பாளர் ஒதுக்கி இருந்ததால் அவர் மேற்பார்வையில் வரிகளை உச்சரிக்க கற்றுக்கொண்டு அதில் திருத்தம் செய்து பாடலையும் ட்ராக் பாடி இருந்தாள்.

படத்தின் உணர்வுபூர்வமான காட்சியில் வரக்கூடிய பாடல் என்பதால் அனுபவம் மிக்க பாடகியை கொண்டு எடுக்கலாம் என்று அவர் உதவியாளர்கள் சொன்னார்கள்.

ஆனாலும் இந்த பாடலுக்கு க்ருதியின் குரல் தான் உயிர் கொடுக்க முடியும் என்று நம்பியவர் மற்றவர்களின் வார்த்தையை ஏற்காமல் பிடிவாதமாக க்ருதியை அழைத்ததோடு நேரம் ஒதுக்கி தானே அருகில் இருந்து ஒவ்வொரு திருத்தத்தையும் செய்தார். 

அடுத்த பத்து நாட்கள் அவர் வெளிநாடு செல்ல இருப்பதால் திரும்ப வந்ததுமே ரெக்கார்டிங் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லி அவளுக்கான சம்பளத்தையும் பேசியிருந்தார். 

முதல் பட பாடல் வாய்ப்பு கிடைக்க பெறுபவர்களுக்கு நியாயமான ஊதியம் பெரும்பாலான நேரம் கிடைக்காது. 

வாய்ப்பே பெரிது! இதைத்தொடர்ந்து வரக்கூடிய பாடல்களில் சம்பாதித்துக் கொள் என்று சிலர் புது குரல்களை உபயோகித்துக் கொள்வார்கள். 

ஆனால், இவர் அவளுக்கு உண்டான நியாயமான தொகையை பேசிட ஒரு பாடலுக்கு இத்தனை ஆயிரம் என்று வியந்து போனாள் க்ருதி மிருதுளா.

அவளுக்கு டப்பிங்கில் ஒரு நாளுக்கு 2000 முதல் 5000 வரையில் சம்பளம். மாதத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தான் விடுமுறை இருக்கும் என்பதால் மாதம் குறைந்தது ஒன்றிலிருந்து ஒன்றரை லட்சம் சம்பாதிப்பவளுக்கு அதில் பாதிக்கும் மேலான தொகை ஒரு பாடலில் கிடைப்பதை எண்ணி அத்தனை மகிழ்ச்சி.

பாடலை வெற்றிகரமாக கற்றுக்கொண்டு ட்ராக் பாடி முடித்த க்ருதி அங்கிருந்து கிளம்ப இரவு ஏழு மணி ஆகிவிட்டது.

அதேநேரம் கிரிஜா மஹிமா உத்ரா மூவருமே சமையலறையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.

“குழந்தைக்கு இப்போ சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறான் அவளோட வாழ்க்கை சிறப்பா இருக்கும்னு..” என்றார் இதழ் கொள்ளா புன்னகையோடு.

“ஆமா த்தை..”

“இப்போ பாட்டு பாட போயிருக்கிறது வெறும் ஆரம்பம் தான்.. போக போக பாருங்க குழந்தை எப்படி ஜொலிக்க போறான்னு..” என்ற கிரிஜா விஷயத்தை கேள்விப்பட்ட நொடியில் இருந்து வாய் ஓயாமல் மிருதுளாவின் பெருமையை பேசி சிலாகித்து கொண்டிருக்கிறார்.

கால் தரையில் படாமல் இயங்கி கொண்டிருந்தவர், “இந்த சீரகத்தை எங்க வச்சீங்க அவசரத்துக்கு கிடைக்க மாட்டேங்குது..” என்று கண்ணெதிரில் இருந்தது அகப்படாமல் மற்றவர்களை படுத்தி கொண்டிருந்தார்.

“உங்க எதிர்ல தான் த்தை இருக்குது..” என்று எடுத்து கொடுத்த உத்ரா, “அப்பப்பா உங்க பொண்ணு சினிமாவுல பாட்டு பாட போனதும் தான் போனா உங்களை கையில பிடிக்க முடியல த்தை..” என்றாள் சிரிப்போடு.

“என்ன இருந்தாலும் எங்க அம்மாவுக்கு கடைக்குட்டியான மித்து எப்பவுமே ஸ்பெஷல் தான் உதி..”

“அவங்களுக்கு மட்டுமா உங்க எல்லாருக்கும் தான்!! இல்லைன்னா இன்னைக்கு போக வேண்டிய பர்த்டே பார்ட்டியை கட் அடிச்சுட்டு இங்க வந்து சமைச்சுட்டு இருக்கிற ஆளாடி நீ?!” என்றாள் கேலியாக.

“ப்ச் நான் எவ்ளோ சந்தோஷமா ஓடி வந்தேன். வர வழியில அத்தனை முறை கால் பண்ணியும் அந்த குட்டி கழுதை ஃபோனை எடுக்கவே இல்லடி..” 

“அவ்ளோ பாப்புலரான மியூசிக் டைரக்டர் கிட்ட பாடுற வாய்ப்பு கிடைக்கிறது என்ன அத்தனை சுலபமா?! மியூசிக் இவ்வளவு பெரிய ஆர்ட்! கிரியேட்டிவிட்டிக்கு ஒரு சின்ன டிஸ்டர்பன்ஸ் கூட இருக்கக் கூடாது, அது ஃப்ளோவை பாதிக்கும்.. அதனால சைலென்ட்ல போட்டுருப்பா உன் கால் பார்த்ததும் கூப்பிடுவாடி..”

“அது எப்படிடி, காலையில் உனக்கு மட்டும் பேசின குட்டி கழுதை இப்போ வரை எனக்கு ஒரு வார்த்தை சொல்லாம போகலாம்?! வரட்டும் அவளுக்கு இருக்கு..”

“ப்ச், உனக்கும் தான்டி ட்ரை பண்ணினா.. நீயும் மாமாவும் நாட் ரீச்சபிள் இருந்திருக்கீங்க அதனால தான் மித்துவால  விஷயத்தை சொல்ல முடியலை. எவ்ளோ சந்தோஷமான விஷயம் நடந்திருக்கு இன்னைக்கு போய் அவளை திட்டுற?!”

“ஹோய் அவ என் தங்கச்சி!! நான் திட்டுவேன், கோபப்படுவேன், இல்லை கொஞ்சுவேன் உனக்கு என்னடி வந்தது?”

“எங்கே திட்டி தான் பாரேன், அப்புறம் தெரியும் சங்கதி..” என்று உத்ராவும் மல்லுகட்ட இருவரும் சமையல் செய்வதை விட்டு நேருக்கு நேர் நின்றனர்.

“குழந்தை மதியம் சாப்பிட்டாளா இல்லையான்னு  தெரியலை. எவ்ளோ பசியோட வருவா?! இந்த நேரத்துலயா சண்டை கட்டுவீங்க? இதெல்லாம் அப்புறம் வச்சுக்கோங்க முதல்ல வேலைய பாருங்க..” என்று அதட்டல் போட்டவர், 

“குலோப் ஜாமுன் செய்ய சொன்னேனே அதுக்கான ஏற்பாடு பண்ணின மாதிரியே தெரியலையே..” என்று ஒவ்வொரு பாத்திரமாக திறந்து பார்த்தபடி சொன்னார்.

“ம்மா அவளுக்கு ஸ்வீட் விட தயிர் வடை தான் ரொம்ப பிடிக்கும்னு உங்களுக்கு தெரியாதா? நீங்க எத்தனை ஸ்வீட் வச்சாலும் அதெல்லாம் ஒதுகிட்டு தயிர் வடையை தான் சாப்பிட போறா..”

“இத்தனைக்கும் உத்ரா காலையிலயே அவளுக்கு பிடிச்சதை பண்ணி கொடுத்துட்டா இதோ இப்பவும் செஞ்சுட்டு இருக்கோம் இதுக்கு மேல ஸ்வீட் எதுக்கு?”

“சந்தோஷமான நேரத்துல ஸ்வீட் இல்லாம எப்படி?”

“ம்மா..” என்று மஹிமா சிணுங்க, 

“எவ்ளோ நேரமாகிட போகுது? அதையும் செய்ங்க. தயிர் வடை சாப்பிட்டு முடிச்சுட்டு ஒரு வாய்யாவது குழந்தை ஸ்வீட் சாப்பிடட்டும்..” என்றவர் பூரியை உத்ராவிடம் கொடுத்தவர், 

“சரி ப்ரான் எடுத்துட்டு வர சொன்னேனே, அர்ஜுன் எங்கே?” என்றார்.

“ம்மா அவன் மித்துவை பிக் பண்ண போயிருக்கான்..” 

“அப்போ ப்ரான் யார் வாங்கிட்டு வரப் போறா? எப்போ வந்து எப்போ செய்து முடிக்க?” 

“நான் அவருக்கு ஏற்கனவே மெசேஜ் போட்டுட்டேன் அத்தை, பக்கத்துல வந்துட்டாரு.. மஹி ப்ரான் மசாலாவுக்கான ஏற்பாடு பண்ணிட்டு இருக்கா வந்ததும் ப்ரான் கிளீன் பண்ணி சேர்த்தா முடிஞ்சுது…” 

“சரி, குழந்தைக்கு பிடிச்ச ஏதாவது விட்டு போய் இருக்கா பாருங்க..” 

“தயிர்வடையில் தொடங்கி பூரி, ப்ரான் வரை அவளுக்கு பிடிச்ச எல்லாமே செஞ்சுட்டோம் ம்மா. மொத்தம் பன்னிரண்டு டிஷ்!! நைட் டைம்ல இது எவ்வளவு ஹெவி தெரியுமா?”  

“கல்லை தின்னு ஜீரணிக்கிற வயசுல என்ன பேச்சு இது?”

“சரி நாங்க எதுவும் பேசல, நீங்க கொஞ்சம் இப்படி உட்காருங்க..” என்று மாமியாரை அமர்த்தி அவர் கையில் ஜூசை கொடுத்தாள் உத்ரா. 

“எனக்கு எதுக்கு இது? குழந்தைக்கு கொடு..”

“அடடா!! உங்க குழந்தைக்கு எடுத்து வச்சது போக மீதமானதை தான் உங்களுக்கு கொடுத்து இருக்கேன் போதுமா?!” என்றிட அவரிடம் புன்னகை.

“உங்க சந்தோஷத்தை கொஞ்சம் கட்டுப்படுத்துங்க அத்தை..”

Comments

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 17

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 16.2